குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

23 November, 2009

-:பாம்பாட்டி சித்தர்:- _/\_ 2

[தொடர்ந்த நடை...]

அந்த நொடி,ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது.

‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன்.

சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’

‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’

‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க,

சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான்.

சில…….வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ தனக்குள் இருக்கும் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார்.

ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜால சித்தரானார்.

எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.

அந்த நொடியில்…..உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது?

போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.

அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.

பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது. இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.

மேலும் இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றவை.

அதில் ஒன்று உடம்பை பற்றி இவர் சொல்லும் ஒருபாடல் இதோ !


" ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே "

குழந்தையை உலகிற்குத் தரும் குழியிலிருந்து, ஐம்பூதங்களில் ஒன்றான
மண்ணைஎடுத்து உதிரப் புனலில் ( இரத்தநீரில்) குழைத்து குயவனாகிய ஈசன் கொடுத்த உடலாகிய இம்மட்பாண்டம் உடைந்துவிட்டால் உபயோகமற்ற மண்ணோட்டிற்குக் கூடப் பயன்படாது என்று ஆடு பாம்பே !!


இன்னும் பாடல்களுடன் .....

[நடை போடுவோம்......]

20 November, 2009

-:பாம்பாட்டி சித்தர்:- _/\_ 1

பாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.

இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கர்மம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர்.

பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள்.

சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது.

‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார்.

‘‘ஜோகிங்க சாமி...’’

‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’

‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’

‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’

‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’

‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’

‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’

‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’

அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது.

‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி.

‘நித்ய பரவசத்தில் திளைப்பதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி...

அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது.

‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’

‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின.

ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி,

[நடை போடுவோம்......]

07 November, 2009

-:சிவவாக்கியார்:-

சிவவாக்கியர் தைமாதம் மக நக்ஷத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். "காசியில் செருப்புத்தைத்த ஒரு சித்தரே இவரது ஞானகுரு.

அவர், " சிவவாக்கியா! பஞ்சமா பாதகங்கள் புரியாமல் எத்தொழில் செய்து பிழைத்தாலும் அது உயர்ந்ததே" என்பார்.

பயிற்சி முடியும் தருவாயில் "சிவவாக்கியா! இந்தப் பேய்ச்சுரைக்காயை கங்கையில் அமிழ்த்தி எடுத்துவா" என்றார் குருநாதர்.

'எதற்கு' என்று கேட்காமல் கீழ்படிந்தார் சீடர்.

இவ்வளவு காலமும் சிவவாக்கியாரின் பணிவை பார்த்த குரு நாதர்....

“அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி பேய்ச்சுரைக்காயையு கொடுத்து “இதை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

அதோடு..... கொஞ்சம் மணலையும் கொடுத்து " இவை இரண்டையும் சமைத்துத் தருபவளை மணந்து கொள். அவள் உனக்கு ஏற்றவளாயிருப்பாள்" என ஆசீர்வதித்தார்.

சிவவாக்கியருக்கு கட்டு மஸ்தான உடல்வாகு, கருணையான முகம்.சுருட்டை முடி. பல மங்கையர் அவரை மணக்க ஆசை கொண்டனர். அவரது நிபந்தனையைக் கேட்டதும் பைத்தியக்காரன் என்று ஒதுங்கினர்.

ஆயின் சிவவாக்கியர் நம்பிக்கை தளரவில்லை. ஒருநாள் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதியில் நுழைந்தார்.

ஒரு கூடாரத்திலிருந்து வெளிவந்த ஒரு நங்கை ஏதோ உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கினாள். "அம்மணி உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?" என்று கேட்டார் அவர். "இல்லை முனிவரே என்றாள் அந்நங்கை.

"உன்பெற்றோர்கள் எங்கே?"

"சாமி அவர்கள் வனத்தில் மூங்கில் வெட்டச் சென்றிருக்கின்றனர். மூங்கிலைப் பிளந்து முறம் செய்து கிராமத்தில் விற்று வயிறு வளர்க்கிறோம் சாமி! அது தான் எங்கள் குலத் தொழில். நீங்க பசியோடு இருக்கிறமாதிரித் தோன்றுகிறதே.

"என்ன சாப்பிடுவீங்க? " என்று கேட்டாள்.

"இதோ இவற்றைச் சமைத்துத் தரவேண்டும்" என்று பேய்ச்சுரைக்காயையும் மணலையும்
காண்பித்தார்.

அவள் சற்று யோசித்தாள்... இவரிடம் ஏதோ விசேடத் தன்மையிருக்கின்றது. நம்மைச் சோதிக்கிறார். முடியாததைச் செய்யச் சொல்வாரா? என்று எண்ணி அவற்றைப் பணிவோடு வாங்கிக்கொண்டு போனாள்.

அடுப்புப் பற்றவைத்து பானையில் நீர்வார்த்தாள்.... நீர் கொதித்ததும் சிவபெருமானைத் தியானித்து அதில் மணலைக் கொட்டினாள். என்ன ஆச்சரியம். சற்று நேரத்தில் மணல் பொல பொலவென்று சாதமாகப் பொங்கி வந்தது. கிளறிவிட்டாள். சாதம் வெந்ததும் இறக்கி வைத்தாள். பேய்ச்சுரைக்காயை நறுக்கி பொறியலாகவும், கூட்டாகவும் செய்தாள்.

"ஐயா! உணவு தயாராகிவிட்டது. சாப்பிட வாருங்கள்" என்று அழைத்தாள் முனிவரை. மணலை எப்படிச் சமைப்பது என்று இவள் தர்க்கவாதம் செய்யவில்லை. இவளேநமக்குத் தகுந்தவள்' என்றெண்ணியபடி உணவு அருந்த அமர்ந்தார் சிவவாக்கியர். பொல, பொல என்று அன்னமும், பேய்ச்சுரைக்காய் கூட்டும், பொறியலும் இலையில் விழுந்தன. ஒருபிடி உண்டார். பேய்ச்சுரைக்காய் கசந்து ருசிக்காமல் அமுதமாக இருந்தது. கங்கை மாதாவும் கற்ப்புக்கரசியும் தொட்டதின் பலன் என்பதை உணர்ந்தார்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அப்பெண்ணின் பெற்றோரும் வந்துவிட்டனர்.
சிவவாக்கியரைப் பணிந்தனர்.

"உங்கள் புதல்வி எனக்கு வாழ்க்கைத் துணைவியானால் என் வாழ்க்கை சிறக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் எண்ணம் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்" என்றார்.

குறவர்கள் கூடிப் பேசினர்."சாமி! உங்களுக்குப் பொஞ்சாதி ஆக எங்க குலப் பொண்ணு எம்புட்டுப் புண்ணியம் செய்திருக்கோணும்! ஆனா, அவ எங்களுக்கு ஒரே மக! அவளைக்கண் காணாமக் கொடுக்கமுடியாது சாமி! எங்க கூடவே நீங்க இருக்கிறதானா நாளைக்கே கல்யாணத்தை நடத்திடலாம்" என்று சொல்லி ஆர்வத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான் பெண்ணைப் பெற்றவன்.

சிவவாக்கியர் சம்மதிக்க நரிக்குறவ மரபுப்படி திருமணம் நடந்தது. மூங்கிலை வெட்டி முறம் செய்யக் கற்றுக்கொண்டார் சிவவாக்கியர். கொங்கணர் இவரைப் பார்க்க அடிக்கடி வருவார். ரசவாதம் தெரிந்தவரான சிவவாக்கியர் வறுமையில் வாடுவதை அறிந்து சிவவாக்கியர் இல்லாத நேரமாய்ப் பார்த்து அவர் குடிலுக்கு வந்தார் கொங்கணர்.

அவர் மனைவியிடம், "அம்மணி! பழைய இரும்புத்துண்டுகள் இருந்தால் எடுத்து வா" என்றார். அவளும் கொண்டுவந்து அவர் முன் வைத்தாள். அவற்றைத் தங்கமாக்கி அவள் கையில் கொடுத்துச் சென்றார் கொங்கணர். சிவவாக்கியர் மூங்கில் வெட்டிச் சேகரித்து தலையில் சுமந்துகொண்டு வந்ததும் அவரிடம் கொங்கணர் வந்து சென்றதைச் சொல்லி தங்கத் துண்டுகளைக் காண்பித்தாள்.

"இது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு." என்றார்.

நல்ல குலமகளாதலால் கணவர் சொன்னபடி சிறிதும் முகம் மாற்றம் இல்லாமல் அவறைக் கொண்டுசென்று கிணற்றில் எறிந்து வந்தாள் அவள். மறு முறை கொங்கணர் வந்த போது கொங்கண முனிவரே! அறவழியில் எங்கள் இல்லறம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குப் புறம்பாக வேறு மார்க்கத்தில் இயமனைக் கொண்டு வரலாமா?" எனவும் கொங்கணரால் பதில் ஏதும் பேச முடியவில்லை.

ஒரு நாள்... முதிர்ந்த மூங்கிலை வெட்டினார், சிவவாக்கியர். அதிலிருந்துதங்கத் துகள் கொட்டியது. "ஐயோ! எமன்" என்று அவர் ஓட நான்கு குறவர்கள் அதைச் சேகரித்தனர். தங்கத் துகள்களை பங்கீடு செய்கையில் அவர்களுக்குள் சண்டை வந்து நான்கு பேரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மடிந்தனர். " அப்போதே சொன்னேனே கேட்டார்களா! தங்கம் எமனாக மாறிக் கொன்றுவிட்டதே" என்று அங்கலாய்த்தார் முனிவர்.
சிவவாக்கியர் நாடிப் பரிட்சை என்ற நூலை இயற்றியுள்ளார். இவர் கும்பகோணத்தில் சித்தியடைந்தார்.

சிவவாக்கியார் சித்தர் பாடல் ஞானத்தெளிவை ஊட்டுபவை. அவரது பாடல்களில் ஞானம் தொனிக்கும்.

"நட்டகல்லை தெய்வம்என்று நாலுபுஷ்பம் சாத்தியே !
சுற்றிவந்து முனுமுனுவென்று சொல்லும் மந்திரம்ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவைதான் அறியுமோ?"

இது எளிமையாகவே பொருள் விளங்கி கொள்ளும் பாடல்,

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை!
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்,
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்,
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே!!

சீவனாம் சிவன் தன்னுள்ளே எப்படி கலந்துள்ளது, என்பதை அவர் பாடுகிறார் பாருங்கள். ஓடி ஓடி ஓடி ஓடி (நான்குமுறை) சாதாரணமாக இல்லை மிக மிக மிக மிக ஆழமாய் தன்னுள் கலந்துள்ளது. அதை நாடியவர்களும் இங்கே கவனிக்க வெண்டும் நாடினார்கள். ஆனால் இறை தன்னை அடையும் வழி தெரியாமல் நாடுகிறார்கள் என்று அதைத்தான் அவர் கூற வருகிறார். அப்படி நாடியும் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள் (மனுக்கள்) கோடான கோடியாம்.


இங்கே இன்னொரு பாடலும் நினைவிற்கு வருகிறது...... திருமூலர் பாடல் ஒன்றில்


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
- திருமந்திரம் (1823)

சிவவாக்கியர் போக முனி பட்டினத்தார், தாயுமானவர் ஆகியவர்களால் பாராட்டப் பெற்றவர்.

ஆக தெளிந்தவர் எல்லாம் விடை பெற்று விட்டார். எல்லோரும் தெளிய நல்ல குரு வாய்க்கட்டும் இறையருளால்.