குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

23 June, 2009

அகத்தியரின் சரிதம் :

வடக்கே இமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும் இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது!

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,

மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட
வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து
தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன்
அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன்
பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.

அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி "*அகத்தியம்*" என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் "வாதாபே
ஜீர்ணோ பவ" என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் 'காக உரு' கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில்
இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள 'உழவர் கரை'யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி 'அகத்தீஸ்வரம்' என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சித்தராய்விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி
பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல
நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள்பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி
கூறியுள்ளார்.

*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
*
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.


அகத்தியர்,

- தமிழின் ஆதிகவி;
- அகத்தியம் எனும் இலக்கண நூலின் ஆசிரியர்;
- முதல் தமிழ்ச் சங்கத்தின் புலவர்;
- தொல்காப்பியரின் ஆசிரியர்.

புத்தமதக் கடவுள் அவலோகிவர் எனும் போதிசத்துவரிடம் தமிழ் கற்றவர் என்று
வீரசோழியமும், சிவனிடமும், முருகனிடமும் தமிழ் கற்றவர் என்று கந்தபுராணமும், அகத்தியருடைய ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. இராமன் தொழுத அகத்தியரை இராமாயணம் குறிப்பிடுகிறது. பாரதம் கூறும் கண்ணபிரானைச் சந்தித்து பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அகத்தியர் அழைத்து வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுகிறார். சமணர்களால் போற்றப்படுபவர்களின் பட்டியலிலும் அகத்தியர் இருக்கிறார். ஜாவா, சுமத்திரா தீவுகளுக்குச் சென்று சைவ சமயத்தைப் போதித்த சிவகுருவாகவும் அகத்தியர் இருக்கிறார்.

- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- பரிபாடல்களிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டியன் புரோகிதர் அகத்தியர் என்று குறிப்புள்ளது.

சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஒட்டி அகத்தியர் "பக்த விலாசம்" எனும் நூலை
வடமொழியில் அகத்தியர் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அகத்தியம் என்பதோடு "சிற்றகத்தியம்", "பேரகத்தியம்" என்று இரு நூல்கள்
இருந்தனவாம். சிறுகாக்கைப் பாடினியார், பெருங்காக்கைப் பாடினியார் போல
சிற்றகத்தியார், பேரகத்தியார் என்று குறுமுனிக்குள்ளும் பல அண்டங்கள். சிவபெருமான் திருமணத்தில் வடக்கே இமயம் தாழ, தெற்கு உயர்ந்ததாகவும் வடக்கு, தெற்கை சமநிலைப்படுத்த அனுப்பி வைக்ககப்பட்டவர் அகத்தியர் என்றும் புராணக் கதைகள் உள்ளன. தென்திசை நோக்கி வந்த அகத்தியர் கங்கையிலிருந்து கொண்டுவந்த நீர் காவிரிதானாம். "அகத்தியர் தேவாரத் திரட்டு" என்று ஒரு நூல், தேவாரப் பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக உள்ளது. அகத்தியர் தொகுத்தாரா? அவர் அகத்தியம் தந்த அகத்தியராக இருக்க முடியாது. அகத்தியர் பெயரை வைத்துக்கொண்ட சிவனடியார் ஒருவர் தேவாரப் பாடல்களில் சிலவற்றைத் தொகுத்துப் போட்டிருக்கலாம். தேவாரம்
பாடிய மூவர் பெயரும் இல்லாமல் தொகுத்துத் தந்தவர் தனது பெயரில் தேவாரத்
திரட்டு என்று நூலாக்கியிருக்கிறார். தேவாரம் என்றாலே மூவரும் நினைவிற்கு
வருவார்கள் என்பதால் தொகுத்தவர் தனது பெயரில் நூலைத் தந்திருக்கலாம்.
திருமுறைக் கலைஞர், திருச்சி வித்வான் திரு பட்டுச்சாமி ஓதுவார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் பன்னிரு திருமுறைப் பதிப்பு நிதி வெளியீடாக 1956-ல் இந்நூல் வந்துள்ளது. தேவாரம் ஒரு இலட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை உடையதாம். இப்போது கிடைப்பவை 797 தான். மற்றவை மறைந்து போயின. எஞ்சியவை திருவாரூர் அரசன் அபய குலசேகரன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தவை என்றும் மூவர் பாடிய பதிகங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்த பலனை எளிதில் பெரும் பொருட்டு அகத்தியரால் 25 பதிகங்கள் மட்டும் திரட்டியளிக்கப்பட்டதாகவும் முன்னுரை கூறுகிறது. இதுமட்டுமன்றி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகளும்,
அகத்தியர் ஆணைபெற்றே நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இப்போதும் அகத்தியர் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் வெய்யில் கடுமையாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அகத்தியரைப் பார்க்க பொதிகைமலை போகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாவநாசத்திற்கு மேல் உள்ளது அகத்தியர் அருவி. அதற்கும் மேல்

- கல்யாணதீர்த்தம்,
- பாணதீர்த்தம்,

பழங்குடி மக்கள் இப்போதும் வாழும் இஞ்சிக்குழி, தண்பொருநை நதிமூலம்-பொதிகைத் தென்றல் புறப்படும் பூங்குளம், அதற்கும்மேல் அகத்தியர் மொட்டை எனும் பொதிகைமலை உச்சி.

மூன்று நான்குநாள் பயணத் தேவைகளோடு மலையேறி அகத்தியரைப் பார்க்கப்
போகிறார்கள். பொதிகை மலை, தமிழுக்கும் மருத்துவத்துக்கும் பிறப்பிடம் என்றும் நம்புகின்றார்கள். சித்த மருத்துவத்திலும் அகத்தியருக்கு இடமிருக்கிறது. பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியர் இருக்கிறார். இவ்வாறு அகத்தியர்

- இலக்கியம்,
- இலக்கணம்,
- பக்தி,
- மருத்துவம்,
- சமயம்

என்று பன்முக ஆற்றல் கொண்டவராக மட்டுமின்றி

- தமிழ்-வடமொழி;
- சைவம்-வைணவம்;
- சமணம்-புத்தம்;
- இராமாயணம்-மகாபாரதம்;
- வடக்கு-தெற்கு;
- இமயம்-குமரி,
- கங்கை-காவிரி,
- வடநாட்டார்-தமிழ்நாட்டார்

ஆகியவற்றிற்கிடையேயான நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் திகழ்கிறார்.

குறிப்பாக தனிப்பட்ட மொழி, இனம், மதம், நாடு கடந்து இந்திய கலாச்சார
வரலாற்றின் படிமமாக இந்தியா முழுவதற்குமான ஒட்டுமொத்த ஒரே படிமமாக (Icon) அகத்தியர் மட்டுமே தென்படுவது வியப்பையும் பெருமிதத்தையும் தருகிறது.

முனைவர்.ம. இராசேந்திரன் (இயக்குனர் - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,
சென்னை.)

நன்றி:தினமணி -

நன்றி: - தமிழையும் தமிழனையும் சிறப்பிக்கும் தளங்களுக்கு :

நட்புடன்.
கு.கேசவன்.

19 June, 2009

ஒளவையார் பெருமை

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி

"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு

ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு

ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு

மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.

நன்றி www.tamilnation.org தளத்திற்கு :

18 June, 2009

தேரையர் :

இவர் அகத்தியரின் சீடர் ஆவார். அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர்.

அதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப் பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனான தேரையரை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.

பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார். சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.

சீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை “அடுப்பைப் பார்த்துக்கொள்” என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார்.

கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் இராமதேவன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.

அகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார்.

குறிப்பறிந்து செயல்பட்ட தேரையரை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.

காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்கமுடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தன்னை குணப்படுத்துமாறு கதறினான். அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். மன்னனின் தலைவலிக்கான காரணம் புரிந்தது. “மன்னா! நீ தூங்கும்போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. அந்த தேரை மூளைக்குப் போய் தங்கிவிட்டது. அந்த தேரைதான் உன் தலைவலிக்குக் காரணம்” என்றார். மன்னன் திடுக்கிட்டான். அகத்தியர் மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன் என்று தைரியம் கூறினார்.

சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது. இதைக் கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பைக் கண்ட தேரையர் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தான்.

தேரை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தினுள் குதித்தது.

உடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் கபாலத்தை மூடினார். சீடரைக் கட்டித்தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் தேரையர் என்று காரணப் பெயரால் அழைக்கபடலானார்.

அவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார்.

ஒருமுறை சித்தர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அவர் தனது நோயைத் தீர்த்துக்கொள்ள அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியரும் அவருக்கு மருந்தை தந்து பத்தியத்தையும் கூறி அனுப்பினார்.

ஆனால் நோய் குணமாகவில்லை. அகத்தியர் தகவல் அறிந்து உடனே தேரையரை அழைத்து அவர் நோயைக் குணப்படுத்துமாறு அனுப்பினார். சித்தரைப் பரிசோதித்த தேரையர், ஒரு கொடுக்காய்க் குச்சியை எடுத்து நோயாளியின் வாயை திறந்து குச்சியை அதனுள் நுழைத்து அதன் ஓட்டை வழியாக மருந்தை செலுத்தினார். வயிற்று வலி உடனே தீர்ந்தது. தேரையர் அகத்தியரிடம் சென்று செய்தியைக் கூறினார்.

தாம் கொடுத்த மருந்து பலம் இழந்ததற்கு காரணம் நோயாளியின் பல்லில் உள்ள விஷத்தன்மைதான் என்பதை உணர்ந்து தேரையர் குச்சி மூலம் மருந்தை செலுத்தியுள்ளார் என்பதை அகத்தியர் உணர்ந்துகொண்டார்.

தேரையரின் திறமையை வெளிப்படுத்த நினைத்த அகத்தியர் அவரை அருகில் அழைத்து தேரையா! நீ உனக்கு விருப்பமான இடத்திற்கு போய் நல்லவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி செய் என்றார்.

தேரையரும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்யும் முனி, ரிஷிகளின் பிணிகளைப் போக்கினார்.

உலக நன்மையின் பொருட்டு...
பதார்த்த குண சிந்தாமணி,
நீர்க்குறிநூல்,
நோய்க்குறி நூல்,
தைல வர்க்க சுருக்கம்,
வைத்திய மகா வெண்பா,
மணி வெண்பா,
மருந்துப் பாதம்

முதலான நூல்களை இயற்றினார்.

அகத்தியருக்கு நாளுக்கு நாள் கண்பார்வை மங்கியது. சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அப்போது அணனமயம் காட்டில் இருக்கும் சித்தர் பற்றி நினைவு வரவே அவரை அழைத்து வந்து அகத்தியர் கண்ணுக்கு வைத்தியம் செய்ய எண்ணி அகத்தியரிடம் உத்தரவு வேண்டினர். அகத்தியர் கொஞ்சம் யோசித்து “நீங்கள் போகும் போது புளியமரத்தின் நிழலிலேயே உறங்க வேண்டும்” என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

வெகுநாட்கள் நடந்த சீடர்கள் தேரையரின் இருப்பிடத்தினை அடைந்தனர். தன் குரு நாதருக்கு கண் பார்வையைத் தெளிவாக்க வேண்டுமாறு கோரினர். இதைக் கூறி முடித்த சீடர்கள் இரத்தவாந்தி எடுத்தனர். அந்த நிலைக்கான காரணத்தை அறிந்திருந்த தேரையர், சீடர்களிடம் திரும்பிச் செல்லும் போது வேப்பமரத்தின் நிழலிலேயே உறங்கிச் செல்லுமாறும் தாம் இரண்டு நாட்களில் வைத்தியத்திற்கு வருவதாகவும் கூறியனுப்பினார்.

திரும்ப வந்த சீடர்கள் உடல் நலனுடன் இருப்பதைக் கண்ட அகத்தியர் “இது தேரையரின் வைத்தியம் தான்” என்பதை புரிந்து கொண்டார்.

தேரையர் அகத்தியரின் ஆசிரமம் அடைந்து அகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார். பார்வை தெளிவடைந்த அகத்தியர், சடாமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை இங்கு வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களில் விழுந்து வணங்கினார். நாட்கள் ஓடின.

ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்.

ஓம் தேரையர் திருவடிகள் போற்றி.

16 June, 2009

போகர்:

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.

சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம்
துளிர்த்துவிட்டது. துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான்
இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'சுமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?

இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

பொதுவில் சித்த புருஷர்களின் பாடல்களில் மறைபொருள் அதிகம் இருக்கும். அவ்வளவு சுலபமாக விளங்கிக் கொள்ள இயலாது. மூலிகை ரகசியங்களை, சித்திகளுக்கான வழிமுறைகளை வார்த்தைகளுக்குள்ளேயே ஒளித்து வைத்து விடுவார்கள். யாருக்கு பிராப்தி உள்ளதோ அவரே அதை சரியாக அறிந்து கொள்வார். ஆனால், திருமூலர் இவர்களில் மிக மாறுபட்டவர். இவரின் திருமந்திரம் தமிழுக்கு அணி செய்யும்
நூல்களில் முன்னிலையில் இருக்கும் ஒன்றாகும். பாமரரும் விளங்கிக்கொள்ள முடிந்த அளவில் இவரது கருத்துகள் இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்

கோரக்கர்:

சித்த புருஷர்களில் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டவர்.

விபூதி எனில் சாம்பல் என்று ஒருபொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு.
அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள்.

ஆணும் பெண்ணும் கூடி அந்தக்கருவால் வளரும் உயிர்கள் கருமஞ்சார்ந்தவை... ஆனால்
அவ்வாறு இல்லாமல், விதிவிலக்காக பல மனித உயிர்களும் தோன்றியுள்ளன.

அப்படி விசேஷமாகப் பிறந்தவர்களுக்கு ஒரு பெரிய கடமை இந்த உலகத்தில்
காத்திருந்தது.

இந்தப்பட்டியலில் கோரக்கரையும் இவரது குருவான மச்சமுனியையும் சேர்க்கலாம்.

மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும்
பிறந்தவர்கள்!

அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது.

தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு
பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக்
கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது.
ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி
இருந்தது.

மீனுக்கு ஏது காது?அதற்கு ஏது மொழியறிவு?

அதனால் எப்படிக் கேட்க முடியும்? _ என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான
பாதிப்பு நமக்குள் மூட்டுபவை.

ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட
கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம்
பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன.

எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி
வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள். அவர்கள் வரையில்
அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம்
இருந்தது.

அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்...
அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த மீன்.
கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை
முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது.

'என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்' என்று
இருந்திருக்க வேண்டும்.

அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக்
கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக்
கொண்டு, அப்படியே
உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள்.

மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற
திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும்
மச்சேந்திரனுக்குக் கிட்டியது!

இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற
மச்சமுனி.

இவரால் கோரப் பெற்றவர்தான், கோரக்கர். எப்படி?

மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே
உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு
ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு
உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார்.

இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப்
பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது,
பிட்சையிடும்
வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு
உள்ளது.

நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான
முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை,
கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள்.

ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள்.
மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள்.

அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில்
சதா சர்வ காலமும் ஒரு துக்கம்.

இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும்
அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள்.

அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல்
திரும்பி நடந்தாள்.

''நில் தாயே..'' _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள்.

''பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?'' _ மச்சமுனிதான் கேட்டார்.

''நான் வணங்க நீர் என்ன தெய்வமா?'' _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப்
பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி
விட்டது.

''தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..'' என்றார்.

''அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?''_அவளிடம்
இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது.

உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத்
தந்தார் மச்சமுனி.

''இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...''

''இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?''

''சாம்பல் தானம்மா... இருந்தாலும் 'இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்..
ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்'' என்று
கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார்.

பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள்.

''கையில் என்ன?'' கேட்டாள்.

''விபூதி..'' கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண்.

''இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும்.
திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..''

_அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில்
எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப்
போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள்.

அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே
ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்?

சில காலம் சென்றது.

மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ''விபூதியால்
பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?'' என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள்,
திணறினாள்.

''உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை
வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..'' என்றாள். உடனே அந்த
அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார்.

''தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை
உருவாக்க இயலுமே''_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள்.

மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது.

எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை
பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை.
ஆனால், கோசாலையாகிய
இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த
கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன்
மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப்
போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான்
மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த
முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த
நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி
அழைக்கிறேன் வா...'' என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த
சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு
கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த
ஊர், வடபொய்கை
நல்லூர்.

அதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம்
சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை
செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். அதில்
ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம்.

ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண்
நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை
அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும்
அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார்.

மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது
ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை
ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல்
கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும்.

மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன்
கோரக்கனிடம் 'எனக்கு மேலும் வடை தேவை' என்றார். கோரக்கரும் பார்ப்பனப்
பெண்ணிடம் சென்று வடை கேட்டார்.

அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். 'சுட்டுத்தாருங்கள் தாயே' என்று
மன்றாடினார்.

''ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..'' என்றாள்,
அவள்.

''இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்'' என்றார்,
கோரக்கர்.

''உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது
எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன்.
இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை
பிடுங்கியா தருவாய்?'' _ எகத்தாளமாய் கேட்டாள். ''அதற்கென்ன தந்தால் போச்சு..''
என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே
பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின்
குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள்.

கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர்
முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது.

''கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்?''

''ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.''

''அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?''_என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி
ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார்.

கோரக்கரும் பார்வை பெற்றார்.

அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல
மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார். காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை
உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே
முனை மழுங்கும்.

இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும்
இடையே நிகழ்ந்தது.

அல்லமத்தேவர் ஓர் அபூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து
மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும். மொத்தத்தில் இயற்கையின் பல
பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர்.

அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது.
கோரக்கரே இவரை வெட்டியவர்.

தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின்
வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில்
விரிவாகவே அறியலாம்.
இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார். பின்னாளில் பிரம்ம முனியின்
நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும்
இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது

13 June, 2009

கருவூர்த்தேவர்:

கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் பிறந்த ஊரோடு
இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த் தேவர் என வழங்கப்படுகிறது. இவரது
இயற்பெயர் இன்னதென்று அறியமுடியவில்லை. இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர்.
வேதாகமக்கலைகள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப்பெரிய யோகசித்தர்.
போக முனிவரிடம் உபதேசம் பெற்று ஞானநூல்கள் பல வற்றையும் ஆராய்ந்து
சிவயோகமுதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப்பெற்றவர்.
உலக வாழ்வில் புளியம்பழமும் ஓடும்போல ஒட்டியும் ஒட்டாமலும் விளங்கியவர்.
இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப் பித்தர் என்று
கருதும்படி செய்தன.


கருவூர்த்தேவர் கொங்குநாடு, வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில்
உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர்
சென்று, இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலியடைந்து
நெல்லை யப்பர் சந்நிதியில் நின்று `நெல்லையப்பா` என்றழைக்க, அப்பொழுது
பெருமான் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டு வாளா இருக்க ``இங்குக்
கடவுள் இல்லைபோலும்`` என்று இவர் சினந்து கூற அவ்வாலயம் பாழாகியது
என்றும், பின்னர் அவ்வூர் மக்கள் நெல்லையப்பரை வேண்ட அப்பெருமான்
கருவூர்த்தேவரை நெல்லை யம்பதிக்கு அழைத்து வந்து காட்சியளிக்க, மீண்டும்
அவ்வாலயம் செழித்தது என்றும் கூறுவர்.


கருவூர்த்தேவர் நெல்லையில் இருந்து திருக்குற்றாலம் சென்று அங்குச்
சிலநாள் தங்கியிருந்து, பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து
அருள்பெற்றார்.


தஞ்சையில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தனது இருபதாம் ஆண்டு
ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கிய இராசராசேச்சுரத்துப் பெருவுடையார்க்கு
அஷ்டபந்தன மருந்து சார்த்தினன். அம்மருந்து பலமுறை சார்த்தியும் இறுகாமல்
இளகிக் கொண்டிருந்தது. அது கண்ட அரசன் வருந்தி இருந்தனன். அதனை அறிந்த
போகமுனிவர் பொதியமலையில் இருந்த கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு வருமாறு
அழைப்பித்தார். கருவூர்த் தேவரும் குரு ஆணைப்படி தஞ்சை வந்து, பெருமான்
அருளால் அஷ்டபந்தன மருந்தை இறுகும்படி செய்தருளினார்.


தஞ்சையினின்றும் திருவரங்கம் சென்று பின்னர்த் தம் கருவூரை வந்தடைந்தார்.
கருவூரில் உள்ள வைதிகப்பிராமணர் பலர் கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கம்
தவறியவர் என்றும், வாம பூசைக் காரர் என்றும் பழிச்சொல்சாற்றி தொல்லைகள் பல
தந்தனர். கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல நடித்து, ஆனிலை
ஆலயத்தை அடைந்து, பெருமானைத் தழுவிக்கொண்டார் என்பது புராண வரலாறு.


கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும்,
தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது.


இவர், கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர்
மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம்,
திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் என்ற பத்து
சிவத்தலங்கட்கு ஒவ்வொரு பதிகங்கள் வீதம் பத்துத் திருவிசைப்பாத்
திருப்பதிகங்கள் பாடியுள்ளார்.

கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா :

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை அகத்தமர்ந்து இனிய
பாலுமாய் அமுதாம் பன்னக ஆபரணன்
பனிமலர்த் திருவடி இணைமேல்
ஆலை அம் பாகின் அனைய சொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகி நின்றாரே.

நமச்சிவாயம் வாழ்க!

நன்றி தகவல் வெளியிட்ட தளங்களுக்கு.

இவர் இடைக்காடர் :

இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும்.

தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்... சிறு வயதிலேயே, 'நான் யார்?' என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியான விடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்... ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக் கொண்டவர். காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு
பசியாறுகின்றன... அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக்
கொள்கின்றன. இதைப்பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே...! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர்.

ஒரு நாள், ஆடு ஒன்று பள்ளத்தில் விழுந்து காயம்பட்டு ரத்தம் பெருக்கி நின்றது. இடைக்காடர் துடிதுடித்துப் போய்விட்டார். அதற்கு மருத்துவம் செய்யத் தெரியாமல் தத்தளித்தார். அந்தக் காடு கொள்ளாதபடி மூலிகைகள். ஆனால், அதில் எதைப் பறித்து அந்த ஆட்டுக்கு இடுவது என்பதில் குழப்பம்.

அந்தவேளை பார்த்து, போகர் வானவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். கீழே
இடைக்காடர் ஓர் ஆட்டின் பொருட்டு படும் அவஸ்தை அவர் மனதை நெகிழ்த்தியது. கீழிறங்கி வந்து உரிய மூலிகையைப் பறித்து ஆட்டுக்கு மருத்துவமும் செய்து அதன் வலியைப் போக்கினார்.

பதிலுக்கு போகரை உச்சந்தலையில் வைத்து கொண்டாடத் தொடங்கி விட்டார் இடைக்காடர். இத்தனைக்கும், இடைக்காடர் மேனியிலும் சில காயங்கள் இருந்தன. அதற்கு மருந்து போட்டுக் கொள்ளக்கூட அவருக்குத் தோன்றவில்லை. போகருக்கு பாலும் தேனும் தந்து உபசரித்தார்.

''அப்பா.. உனக்கு மிக மிக இளகிய மனது. ஆட்டிற்கும் மாட்டிற்கும்
இரங்குகின்றாயே.. உன்னைக் கண்டு மகிழ்கிறேன்'' என்றார் போகர்.

''ஸ்வாமி... உங்களைப் பார்த்தால் பெரிய மருத்துவர் போல தெரிகிறது. எனக்கும்
உங்கள் மருத்துவக் கல்வியை பிச்சை போடுங்கள்... எனக்காகக் கேட்கவில்லை. இந்த ஆடு மாடுகளுக்கு வியாதி வந்தால் அதைப் பெரிதாகக் கருத யாருமே இல்லை. இவைகளை உணவாகப் பார்க்கத் தெரிந்த மனிதர்களுக்கு, இவைகளின் ஆரோக்கியம் பெரிதாகத் தெரியவில்லை...'' என்று, போகரின் காலில் விழுந்தார். அந்த நொடி, போகரும் இடைக்காடரை தன் சீடனாக ஏற்றுக்கொண்டார்.

''நான் வான்வழி செல்லும்போது உன்னைக் கண்ட நேரம், அமிர்த நாழிகைப் பொழுது. எப்பொழுதுமே எதையும் விருத்தியாக்குவதுதான் அந்தக் கால கதிக்குள்ள சக்தி. அதுதான் உன்னிடமும் தொற்றிக் கொண்டு உன்னால் எனக்கும், என்னால் உனக்கும் ஆதாயத்தை ஏற்படுத்தி உள்ளது..'' என்றார், போகர்.

போகர் அப்படிச் சொல்லவும், இடைக்காடர் மனதில் காலகதி பற்றிய சிந்தனை பெரிதாக தோன்றத் தொடங்கி விட்டது. ''அது என்ன அமிர்த நாழிகைப் பொழுது?'' இடைக்காடர் கேட்டார். அந்த ஒரு கேள்வி, தனக்குள் ஒரு மாபெரும் ஜோதிட ஞானத்துக்கே காரணமாகப் போவதை அப்போது அவர் அறியவில்லை.

ஆரம்பமாயிற்று போகர் மூலமாக ஜோதிடப் பாடம். பஞ்ச அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் என்று தொடங்கி, திதி, யோகம், கரணம் என்று விஸ்வரூபமெடுத்தது அந்த பிரபஞ்சக் கல்வி....

போதுமே...!

ஞானிகளுக்குள் ஒரு விதை விழுந்தால், அதை ஓராயிரம் ஆக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியுமே... போகர் ஓரளவு சொல்லிக் கொடுத்துவிட்டு ஞானோபதேசமும் செய்துவிட்டு போய்விட்டார்.இறுகப் பற்றிக் கொண்ட இடைக்காடரும் மெல்ல மெல்ல, ஆட்டிடையன் என்கிற நிலையில்
இருந்து, மரியாதைக்குரிய இடைக்காடராக மாறினார்.

என்று மழைவரும்..? எந்த வேளை ஒரு புதிய செயலைத் தொடங்க நல்லவேளை? உபவாசங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நுட்பமாக ஒவ்வொரு சங்கதியையும் கண்டறிந்தார். கோள்களைப் பற்றியும் அவைகளின் கடப்பாடு, குணப்பாடு, செயல் வேகம் என்று சகலமும் அறிந்தார்.

போகரின் ஞானோபதேசத்தில் கிடைக்கப்பெற்ற 'கோவிந்த நாமம்', அவருடைய நித்ய மந்திரமானது. செயலாற்றும்போதும், செயலாற்றாப் போதும், உறக்கத்திலும், 'கோவிந்தா... மாதவா' என்று அந்தப் பரந்தாமனை அவர் நினைக்கத் தவறவில்லை. இந்த நிலையில்தான், பூ மருங்கில் ஒரு சோதனையான கால கட்டம், வானில் நிலவும் கோள் சாரத்தால் ஏற்படத்
தொடங்கியது.

பூமண்டலம் என்பது, பஞ்சபூதங்களால் ஆனது. ஆனால், அந்தப் பஞ்சபூதங்களை மீன்போல வலை வீசிப் பிடித்து தங்கள் பாத்திரங்களில் விட்டுக் கொள்வதில் கோள்கள் வலுமிக்கவையாக விளங்கின...

மொத்தத்தில் பசுமையான பூமண்டலம் வறளத் தொடங்கியது. காற்று உஷ்ணமானது. நீரை பூமி மறக்கத் தொடங்கியது. நிலமே இதனால் மாறி வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டது. 12 ஆண்டுகள் இது தொடரும் ஒருநிலையும் கோள்கதியால் உருவானது.

முன்பே கோள்களின் போக்கை வைத்து இதை அனுமானித்த இடைக்காடர், இந்தக் காலகதியை வெல்ல ஒரு வழியையும் கண்டறிந்து வைத்திருந்தார். தன் குடிசையைப் புதுப்பிக்கும் போது, மண் சுவரோடு நெல்லைக் கலந்துவிட்டார். வீட்டைச் சுற்றிலும் நீரில்லாவிட்டாலும் வளரும் எருக்கஞ் செடிகளைப் பயிரிட்டு அதை ஆடுகளுக்குத் தின்னக் கொடுத்துப் பழக்கிவிட்டார்.

இதனால், வறட்சி வந்து பூமண்டலமே கதறிய போதும் இடைக்காடரோ அவரது ஆடுகளோ துன்புறவில்லை. எருக்கந் தழையை தின்னும் ஆடுகளுக்கு நமைச்சல் ஏற்படும். உடனே மண்குடிசை சுவரில் சென்று உரசும். மண்ணோடு கலந்திருந்த நெல் இதனால் உமி நீங்கி அரிசியாக கீழ் விழும்.

இடைக்காடர் போகியல்ல, யோகி. அவருக்கு ஒரு கைப்பிடி அரிசி ஒருநாளைக்குப் போதும். அதைக் கொண்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தார். ஆடுகளும் அவரும் அந்த வறண்ட போதிலும் அழகாக தப்பிக் கொண்டே இருந்தனர். இது ஒருவகையில் விதிப்பாட்டையே வெற்றி கொள்ளும் ஒரு செயல்.

வறட்சிக்கும் உயிர் அழிவுக்கும் காரணமான கோள் சாரம் என்பது, ஒரு தவிர்க்க இயலாத வான்மிசை நிகழ்வு. நான்கு பேர் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு வீட்டிற்குள் உறவுக்காரர்கள் பத்துப் பேர் வந்து விட, தாற்காலிகமாக அங்கே ஏற்படும் இட நெருக்கடியைப் போன்றது இது. இதற்கெல்லாம் பழக வேண்டும்.

வறட்சி வந்தால்தான் பசுமையின் மதிப்பு உணரப்படும். எல்லாமே நிலைப்பாடு. கோள் கதிகள் உலகுக்கு இந்தப் பாடத்தை தங்கள் போக்கில் நடத்துவது என்பது, பிரபஞ்சம் உருவான நாளிலிருந்து உள்ள ஒன்று.இதனால் கோள்களுக்குள் மெலிதான கர்வமும் உண்டு. ஆனால், அவைகளின் கர்வத்தை எள்ளி
நகையாடுவது போல இடைக்காடரும் அவரது ஆடுகளும் மட்டும் எந்தத் துன்பமும் இன்றி வாழ்ந்து வருவது கோள்களை ஆச்சரியப்படுத்தியது.

கோள்களின் ஆதிபத்ய உயர் அம்சங்கள், வானவெளியில் தங்கள் இயக்கத்திற்கு
நடுவில், காரணத்தை அறிய இடைக்காடரின் குடிசைக்கே வந்து விட்டன. இடைக்காடரும், வந்திருப்பவை கோள்கள்தான் என்பதை தனது சித்த ஞானத்தால் உணர்ந்து கொண்டுவிட்டார். அவருக்கும் கோள்களுக்குமான வாக்குவாதம் தொடங்கியது.

''இடைக்காடரே... எவ்வளவு நாளைக்கு இப்படியே காலம் தள்ளப் போகிறீர்..?''

''இதைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது கிரகாதிபதிகளே..?''

''உங்களின் பசியில்லா வாழ்க்கை என்பது எங்களை மீறிய செயல்..''

''இது, என் சித்த ஞானம் போட்ட பிச்சை. உங்களுக்கு இதில் சம்பந்தமில்லை
கோள்களே...''

''இந்த மண்ணில் மனிதப் பிறப்பெடுத்து ஒரு வாழ்க்கை வாழும் உங்களுக்கு சந்தோஷமோ துக்கமோ நாங்கள்தான் தரமுடியும்...''

''தன்னையறியா சராசரிகளுக்கும், ஆசைபாசம் என்று மாட்டிக்
கொண்டிருப்பவர்களுக்கும் நீங்கள் சொல்வது பொருந்தலாம். நான் பற்றற்றவன்.
பரதேசி! நீங்கள் எனக்கு எதையும் தரவும் முடியாது. நானும் அதனைப் பெறவும்
வழியில்லை.''

''பார்க்கலாமா அதையும்..?''

''பார்க்கும் முன், எனது சிறு விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பலப்பரிட்சையை வைத்துக் கொள்ளலாம்...''

இடைக்காடர் அப்படிச் சொல்லவும், கோள்களும் அவர் எங்கிருந்து அரிசி எடுத்து
எப்படி உணவு சமைக்கிறார் என்று பார்க்கும் ஆவலுடன் மௌனமாயிருக்க, முதல் காரியமாக ஆடுகளுக்கு எருக்கிலையை தின்னக் கொடுத்தார். அப்படியே கோள்களைப் பார்த்து, ''வறட்சியிலும் வாழத் தெரிந்த பயிர் இது.. என்னைப் போல். குளிரும் நீரும்தான் இதற்கு ஆகாது. இதை நீங்கள் அழிக்கவேண்டுமானால் பெருவெள்ளம் வந்தாக வேண்டும். சீதோஷ்ண நிலையே மாற வேண்டும்'' என்றார். அப்படியே உண்ட ஆடுகள் அரிப்பெடுத்து சுவர்களில் உரச, நெல்லின் கூடுகள் உடைபட்டு உமியும் அரிசியும் பிரிந்து விழுந்தன. அதை எடுத்து கஞ்சி காய்ச்சியவர், கோள்களுக்கும் அதை வழங்கினார். அவர் செயலைப் பார்த்து கோள்கள் சற்று கூசிப் போயின. வறுமை, இல்லாமை போன்ற நிலையிலும் இடைக்காடரின் விருந்தோம்பும் பண்பு, அவர்கள் மனதில் அவர்பால்
இருந்த எதிர்மறையான எண்ணங்களை அப்படியே மறையச் செய்தது.

ஒன்பது கோள்களுக்குள்ளும் இடைக்காடரிடம் மோதுவதில் குழப்பமான எண்ணங்கள் ஏற்பட்டன. அப்படியே அமர்ந்துவிட்டனர். அப்படி அமரும்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காதபடி அமர்ந்து சிந்தித்தவர்கள், உண்ட களைப்பில் அயர்ந்து உறங்கியும் விட்டனர்.

அவர்கள் கண்விழித்தபோது பெரிய அளவில் மழை பெய்து இடைக்காட்டூர் மலையாற்றில் வெள்ளம் புரண்டு கொண்டிருந்தது.விழித்தெழுந்த கிரகங்கள், முன்பு அமர்ந்திருந்த நிலையில் தங்களில் சிலர் இடம் மாறி புதிய திசை நோக்கி அமர்ந்திருப்பதைக் கண்டனர்.அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் இடைக்காடரைப் பார்த்து நின்றனர். இடைக்காடர்
சிரித்தார்.

''என்னை அறிய வந்தவர்கள் நீங்கள். நானோ, உங்களை முன்பே அறிந்தவன். எங்களை விடவா நீ பெரியவன் என்பது உங்கள் எண்ணம். என்னை விட எல்லாமே பெரியது என்பதே என் எண்ணம். அதனாலேயே உலகம் உவந்து வாழ உங்களில் சிலரின் நிலைப்பாட்டை அதாவது சஞ்சாரத்தை மாற்றியமைத்தேன். பிறர் வாழ நினைக்கும் சன்யாசிகள் மனது வைத்தால் அவர்கள் வாழும் நாட்களை மட்டுமல்ல, கோள்களையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்பதை, இதோ கொட்டும் மழையைக் கொண்டு உலகுக்கு உணர்த்தி விட்டேன்.
கோள்களால், கர்மவினைகளுக்கு உட்பட்டவர்களையே ஆட்டிப் படைக்க முடியும். அதை வென்று வாழ முற்படுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்பதை, இனிவரும் காலம் உணரட்டும்.

என் கிரகத்தில் இப்போது அமைந்த உங்கள் ஒன்பது பேரின் நிலைப்பாடே
வணக்கத்திற்குஉரியது. உங்கள் செயலாக்கத்திற்கும் ஏற்றது.உயிர்களை வழி நடத்தும் கடமைகொண்ட உங்களுக்குள் ஒருபோதும் கர்வம் கூடாது,
பாரபட்சமும் கூடாது. இதுவே நான் உங்களிடம் வேண்டுவது'' என்று கூறி, கோள்களை வழியனுப்பி வைத்தார்.இப்படி மாமழையைத் தருவித்து வறட்சியைப் போக்கியதால், பூஉலகம் இடைக்காடரைக் கொண்டாட ஆரம்பித்தது.

இடைக்காடரோ, ''என்னை ஏன் கொண்டாடுகிறீர்கள். இடையன் வழி நடங்கள் (அதாவது இடையனான கண்ணனின் கீதைவழி); ஏழையாக இருங்கள் (அதாவது ராஜ்யமிருந்தும் உதறிவிட்டுச் சென்ற ராமனைப் போல); இளிச்சவாயனையும் மறந்து விடாதீர்கள் (அதாவது வாய் பிளந்த கோலத்தில் காட்சிதரும் நரசிம்மம் போல அதர்மத்தை அழிப்பவராக இருங்கள்). இப்படி இந்த மூன்று பேரையும் பார்த்து அவர்களைப் போலவும், அவர்களைப் பின்பற்றியும், அவர்கள் மேல் பக்தி செய்தும் வாழ்ந்தாலே போதுமானது'' என்று, தன் காலம் உள்ளவரை வலியுறுத்தினார்.

இவரது காலத்தில் திருக்குறளை பெரிதும் தாங்கிப் பிடித்தவராகவும் திகழ்ந்தார்.
திருக்குறளுக்கு முதலில் உரிய மதிப்பைத் தராத தமிழ்ச் சங்கத்தையும் அதன்
புலவர்களையும் சபித்தவர் இவர் என்றும் கூறுவர்.இன்று ஆலயங்களில் நாம் வணங்கும் நவகிரகங்களின் நிற்கும் கோலம், இவரது கிரகத்தில் (குடிசையில்) நவகிரகங்களை இவர் மாற்றி அமைத்த கோலம்தான் என்றும்
நம்பப்படுகிறது.

இன்றும் ராமநாதபுரம் செல்லும் வழியில் திருப்பாச்சேத்திக்கு அருகேயுள்ள
இடைக்காட்டூரில் இவரது திருவுருவ தரிசனம் காணக் கிடைக்கிறது.


நன்றி சித்த செய்திகள் வெளியிடும் இணைய தளங்களுக்கு :

12 June, 2009

மனதை கட :

நாட்டில் சுந்தரானந்தர் எனும் ஒருவர் மாயாவி போல் மாயங்கள் நிகழ்த்துவதாக அமைச்சர் வாயிலாக கேள்விப்பட்ட மன்னன் அபிஷேக பாண்டியன், அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தரானந்தரை அவைக்கு அழைத்து வரச்சொல்லி சேவகர்களை அனுப்பிவிட்டான். ஆனால், அது எத்தனை பிழையான செயல் என்பதை அவன் எண்ணிப்பார்க்கவில்லை.

செருக்குகள் இருவிதம்.

ஒன்று பிறர் அறியும் விதம் வெளிப்படும் கர்வச் செருக்கு. இன்னொன்று, அறியாவண்ணம் ஒளிந்திருக்கும் அதிகாரச் செருக்கு. இரண்டுமே தவறானது என்பதை காலத்தால் உணர்த்துபவர்களே சித்தர்கள். பாண்டிய மன்னனிடம் அதிகாரச் செருக்கிருந்தது.கூடவே அவனுக்கும் மேலானவர்கள் பூமியில் இல்லை என்கிற ஓர் எண்ணமும் இருந்ததால் அவன் பணிவாக நடந்திட வழியே இல்லாமல் போய்விட்டது.

ஆலயத்தின் மிசை தெய்வத்தின் முன் பணிவாக நடந்து கொண்ட போதிலும் அங்குள்ளது விக்கிரக சொரூபம் தானே?எனவே, உயிருள்ள எவர்முன்னும் அவன் பணிவாக நடந்து கொள்ள வாய்ப்பேயில்லாததால் அவனுக்குள் ஒரு 'நான்' அகங்காரத்தோடு எப்பொழுதும் திகழ்ந்தபடி இருந்தது.

அதற்கு அந்த சித்த புருஷரும் ஒரு பாடம் கற்பிக்கத் தயாரானார். தன் எதிர்வந்து
நின்ற சேவகர்களை, என்ன சேதி என்பது போல பார்த்தார்.

''உங்களை எங்கள் அரசர்பிரான் காண வேண்டுமாம்.''

''அதற்கு..?''

''நீங்கள் எங்களோடு அவைக்கு வர வேண்டும்.''

''இது என்ன வேடிக்கை? ஆற்றில் குளிக்க ஒருவர் ஆசைப்பட்டால் அவரல்லவா
ஆற்றுக்குச் செல்லவேண்டும். ஆற்றை வெட்டி அரண்மனைக்கு இட்டுச் செல்வீர்களோ நீங்கள்?''

''அது... அது... அதெல்லாம் எதற்கு? அவர் அரசர். இந்த நாட்டின் தலைமகன்.. இது
அவர் உத்தரவு.''

''அந்த உத்தரவுக்கு, தன்னையறியாத நீங்கள் வேண்டுமானால் மடங்கிப் போங்கள்.
எனக்கு உம் அரசரைக் காண்பதால் ஆகப்போவது எதுவுமில்லை.

'நான்' என்கிற மமதை உள்ளோரால் ஆகிவிடப் போவதும் எதுவுமில்லை. அற்ப மனிதப் பிறப்பாக பிறந்து விட்டோமே என்னும் குழப்பம் மிக்க உனது அரசனால் ஆனதும் எதுவுமில்லை. மூன்று காலங்களிலும் இருந்தும் இல்லாத அவனை நான் காண்பது என்பது சித்தத்துக்கும் அழகில்லை. போய்ச் சொல் போ...''

''மாயாவியே... நீ சொன்னதை நான் அப்படியே போய் சொன்னால் உம்கதி என்னாகும் தெரியுமா?''

''என் கதி மட்டுமல்ல.. உன் அரசர் கதியும் இப்படி நான் சொன்னால்தான் வரலாறாகும்!
போய்ச் சொல். மேற்கொண்டு நீ ஏதாவது பேசினால், சதாசர்வ காலமும் பேசியபடி
இருக்கும் கிளியாக உன்னை மாற்றி விடுவேன். அரசனுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரிந்த உனக்கு, ஆண்டியும் பெரியவனென்று தெரிய வேண்டும். ஓடிவிடு...''

சுந்தரானந்தர் போட்ட போடு _ அந்த சேவகர்கள் திரும்பிச் சென்றனர். மன்னன் அபிஷேக பாண்டியனும் அவர்கள் திரும்பி வந்து சொன்னதை எல்லாம் கேட்டு முதலில் அதிர்ந்தான். பிறகு வியந்தான். வார்த்தைக்கு வார்த்தை அவர் சொன்னதையெல்லாம் அசை போடத் தொடங்கினான். 'ஆனது எதுவுமில்லை, ஆகிவிடப் போவதுமில்லை, ஆவதும் ஏதுமில்லை' என்று முக்கால கதியில் சுந்தரானந்தர் செய்த விமர்சனம் நெஞ்சக் கூட்டை திருகியபடியே இருந்தது. இதனாலோ என்னவோ அவரை எதிர்த்து ஆணைபிறப்பித்து எதையும் செய்யவே தோன்றவில்லை.

ஒரு மனிதன் முதல்முறையாக அபிஷேக பாண்டியன் மனதுக்குள் விசுவரூபமெடுக்கத் தொடங்கிவிட்டான். நின்றால், நடந்தால், படுத்தால், புரண்டால் சுந்தரானந்தர் நினைப்புதான்.

இதே குழப்பத்தோடு ஒரு நாள், ஜடம்போல ஆலவாய் அழகன் திருக்கோயிலுக்குள் மன்னன் சென்ற சமயம், சுந்தரானந்தரும் ஆலயத்துக்குள் பிரவேசித்திருந்தார்.


சாதாரணமாக எல்லா ஆலயங்களையும் கற்பீடங்களே தாங்கி நிற்கும். ஆனால், ஆலவாய் அண்ணலான சொக்கநாதரின் ஆலயத்தை நாற்புறமும் யானைகள் தாங்கி நிற்கக் காணலாம் அதுவும் வெண்ணிற யானைகள்! வெண்ணிற யானை என்றாலே இந்திரன் வந்துவிடுவான்.

இந்திரன் அனுதினமும் பூஜிக்க, சிவ நெறியை நாட்டில் நிலைப்படுத்த, சாப விமோசனமாக கட்டிய திருக்கோயிலல்லவா அது? அபிஷேக பாண்டியனும் அவன் வழி வந்தவனல்லவா? அண்ணலின் தரிசனம் முடிந்து பிரதட்சணம் வரும் சமயம், சுந்தரானந்தரும் எதிரில் வந்தார்.
அதுவும் அப்பிரதட்சணமாய்....! அப்பொழுதுதானே இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவும் தோது ஏற்படும்? அதிலும் அரசன் பிரதட்சண உலா வரும்போது கட்டியங்காரர்கள் முன்னாலே சென்று பராக் சொல்லி எல்லோரையும் ஓரம் கட்டிவிடுவார்கள். ஆயினும் அப்பிரதட்சணமாக வரும் சுந்தரானந்தரை ஓரம்போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. காரணம், அவரது தேஜஸ். அடுத்து, பார்க்கும் பார்வை அப்படியே ஆளை நடுக்கி விடுகிறதே..!

அபிஷேக பாண்டியனுக்கு, தனக்கெதிரில் தனக்கிணையாக அவர் நடந்து வருவதன் பொருட்டு கோபம் பீறிட்டது.

அதிகார கோபமும் தவஞான கோபமும் முட்டிக் கொண்டன.

''நீர்தான் மாயங்கள் நிகழ்த்தும் அந்த மாயாவியோ?'' அபிஷேக பாண்டியனே கேள்வியைத் தொடங்கினான்.

''தவறு பாண்டியனே.. சித்தசாகஸங்கள் மாயங்கள் அல்ல. மாயங்கள் அற்பமானவை. சித்த சாகஸங்கள் ஜம்புலனைச் சுருக்கி உள்ளளியைப் பெருக்கி பஞ்சபூதங்களை உணர்ந்து பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்படுத்தப்படுபவை... முயன்றால் நீயும் இதை சாதிக்கலாம். இதோ நிற்கிறதே உன் ஏவலர் வரிசை... இவர்கள் கூட சாதிக்கலாம்.''

''நம்ப முடியாது இதை... அந்த இறைவன், மனிதனை ஒரு வரம்புக்கு உட்பட்டே
படைத்திருக்கிறான்...''

'உண்மைதான். ஆனால் அந்த வரம்பு, கைலாயம் என்னும் எல்லையை ஒருபுறமும், வைகுந்தம் என்னும் எல்லையை மறுபுறமும் தொட்டு நிற்பது. அதை உணர்ந்து கைலாயத்தை நீ தொடும்போது, நீயே கைலாயபதி.''

''எதை வைத்து இதை நான் நம்புவேன்?''

''வேண்டுமானால், இங்கேயே அதற்கான பரிட்சையை வை. மாயம் என்றால் இல்லாததை இருப்பதுபோல உருவாக்குவது. அது வெறும் காட்சி. அவ்வாறு இல்லாத ஒரு சாகஸத்துக்கு நீயே அடி கோலுவாய். நானும் உனக்குப் புரியவைப்பேன்...'' _சுந்தரானந்தர் அவ்வாறு சொன்னதுதான் தாமதம், அபிஷேக பாண்டியன் தீர்க்கமாய் சிந்தித்தான். அவன் நின்ற இடத்திற்கு அருகில்தான் இருந்தது, ஆலய விமானத்தை தாங்கியபடி இருக்கும் அந்தக் கல் யானை. நிதர்சனமாய் தெரிவது... மாயபிம்பம் அல்ல அது!

''தவசீலரே... இதோ கல் யானை. மானுட சக்தி, இறை சக்தி வரை செல்லக் கூடியது. அதுவே இறையாகவும் உள்ளது என்று கூறினீரே, இந்தக் கல் யானையை உயிர் யானையாக்குங்கள் பார்ப்போம்.... அப்பொழுது நான் நம்புகிறேன்.''_ அபிஷேக பாண்டியன் அப்படிச் சொன்ன நொடி, சுந்தரானந்த சிவத்தின் முகத்தில் ஒரு புன்னகை. பாண்டியன் பரிவாரத்தில் ஒருவன், மன்மதன் போல கரும்போடு தென்பட்டான். அவனும் அருகில் வந்தான். கரும்பும் பாண்டிய அரசன் கைமிசை சென்று சேர்ந்தது.

''பாண்டியனே.. அந்தக் கல் யானை அருகே செல். உன் மனது அந்த ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூற, மனமுருகி பிரார்த்தனை செய். என் பொருட்டு இன்று கல் யானை உயிர் யானையாகும். நாளை முற்றாய் நீ உன்னையுமறியும்போது உன்னாலுமாகும்..'' _ என்ற சுந்தரானந்தர் அக்கல்யானையை நோக்க, அடுத்த நொடி, அந்த யானைக்கு உயிர் வந்தது.
அதன் தும்பிக்கை அசைந்து நீண்டு பாண்டியன் வசம் இருந்த கரும்பைப் பற்றி
உண்ணவும் தொடங்கியது. அபிஷேக பாண்டியன் தன் கண்களையே நம்பாமல் கசக்கி விட்டுக் கொள்ள, முழுக்கரும்பை சாறொழுகத் தின்ற அந்த யானை, பாண்டியன் கழுத்து முத்துமாலையையும் எட்டிப் பறித்தது.

பாண்டியன் ஆடிப்போனான். அவன் மேல் மனதும் ஆழ்மனதும் ஒருசேர ஒரே கதியில் உழப்பட்டதில் அப்படியே சுந்தரானந்தர் பாத கதி விழுந்தான் கண்ணீர் விட்டான். பரவசத்தில் சிலிர்த்தான். சுந்தரானந்தரும் புன்னகை பூத்தார்.
சூழ்ந்திருப்பவர்களும் காணக்கிடைக்காத காட்சியைக் கண்டதில் பரவச உச்சிகளில் இருந்தனர். அதன்பின், தனக்கு வம்சம் விளங்கப் பிள்ளைப்பேறு வேண்டினான் பாண்டியன். அருளினார் இறைமுனி. யானையும் பறித்த முத்து மாலையை திரும்பக் கழுத்தில் சூட்டி மீண்டும் கல்லாகி நின்றது.

தவசக்தி எத்தகையது என்று நிரூபித்துவிட்ட பூரிப்புடன் அனைவர் கண் எதிரில், ஆலவாயன் திருச்சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.

பாண்டியன் நெக்குருகிப் போனான். வேதங்கள் தந்ததும் இறையே.. அதை அசுரர்கள் பாதாளம் கொண்டு சென்றபோது மீட்டு எடுத்து வந்து தந்ததும் இறையே.. வாழவழி காட்டிய இறை, அதனுள் இறையாகவும் ஆகும் வழி காட்டிட, சித்தவுருவினனாகவும் நேரில் வந்தது. அன்று நேரில் வந்த அந்த சிவம், இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடப்பக்கத்தில் கல்யானைக்கு அருகிலேயே கோவில் கொண்டு அமர்ந்துள்ளது.

கல்லுக்கே உயிர் கொடுத்த அந்த ஈசன், கல்லாய் கனக்கும் நமது ஊழ்வினைக்
கர்மங்களையும் நீக்கி அருள்புரிந்திடவே கோயில் கொண்டுள்ளான்.

ஆறுநிறைய தண்ணீர் ஓடலாம். ஓட்டைப் பாத்திரங்களால் அதை நாம் நமக்கென கொள்ள முடியாது. கொள்ளத் தெரிந்துவிட்டாலோ தாகமே நமக்குக் கிடையாது.
இந்த சுந்தரானந்த சித்தரும் அப்படித்தான். இவரின் பெருங்கருணையை, நற்பாத்திரமாக நாம் இருந்தால், வாரிக் கொண்டு வந்துவிடலாம். அசையாததை எல்லாம் அசைக்கலாம்...

மன்மதன் போல எழிலுருவில் இவர் வந்ததால், மலர்கள் இவருக்கு மிகப் பிடித்ததெனக் கருதி 'பூக்கொட்டாரம்' போடுவது என்னும் ஒரு மலர் வழிபாடு இன்று வழக்கில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. எனவே, அணுகச் சுலபமான இந்த சித்தனை அணுகுங்கள். அப்படியே சித்தகதியை அடைய சிலராவது முயலுங்கள்.


இணைய தளங்களுக்கு நன்றி !

படித்ததில் : பிடித்தது

''தண்ணீரிலே தோன்றி தண்ணீரில் மறைகின்ற
தாமரை இலைத் தட்டிலே !

தத்தளித்து உருள்கின்ற நீர்முத்துப் போல்
தவிக்கின்ற மனித வாழ்வு !

கண்ணீரிலே தோன்றி கண்ணீரிலே முடியும்
கதையினை உனர் நெஞ்சமே

காரிருளில் இடிமின்ன லொடு தோன்றி மறைகின்ற
காளான்கள் போன்ற தன்றோ !

புண்ணீரும் வடிகின்ற சீழ்குருதி நோய்முட்டை
புழுக்கூட்டம் துளைக்கு தம்மா!

புன் புலால் யாக்கையில் வேதனையும் சோதனையும்
புகுந்து அரி
க்கின்ற தம்மா !

எண்ணாமல் காலத்தை ஓட்டுகிற நெஞ்சமே !
இறைவனைச் சிந்தையில் வைப்பாய் !

ஏகாந்த இறைவனை எப்போதும் கொண்டாடு மனமே நீ !

நன்றி :
ஏகாந்த இறைவனை சிறப்பிக்கும் தளங்களுக்கு.

காக புசண்டர் :

காக புண்ட சித்தர் ஒரு காக்கை வடிவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தார் என்பர். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திரக் குலத்தில் பிறந்தார். இவர் அறிவிற்சிறந்தவர். பெரும் தபசி. இவர் பிரளய காலங்களில் அவிட்ட நட்சத்திர பதவியில் வாழ்வார். ஆகையால் இவரை காகபுண்டர் என்பர்.

ஒருசமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். சிவபெருமான் தனக்கு எழுந்த சந்தேகத்தை அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். “இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா?” என்றார்.

எல்லோரும் மௌனமாக இருந்தனர். மார்க்கண்டேயர் “இதற்கு திருமாலே பதில் சொல்வார்” என்றார். திருமாலிடம் சிவன் கேட்டார். அவரும் “பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக எனது சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு வந்த புண்டர் எப்படியோ என் சக்கரத்தினை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைத் தாண்டிச் சென்றார். அதனால் அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அனுப்பி அவரை அழைத்து வருவதுதான் சரி, அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலும்” என்றார்.

சிவனும் வசிட்டரை அனுப்பி புசுண்டரை அழைத்து வரும்படி சொன்னார். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தினைக் கூறினார். புண்டரும் தான் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார்.

தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லாழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களைக் கண்டதாகவும் கூறினார்.

காக புண்டர் துணைகாவியத்தில் இந்நிகழ்ச்சி விளக்கமாகக் கூறப்படுகிறது.

காக புண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. அவைகளில் கிடைத்தவை:
1. புண்டர் நாடி,
2. காகபுண்டர் ஞானம் – 80
3. காக புண்டர் உபநிடதம் – 31
4. காக புண்டர் காவியம் – 33
5. காக புண்டர் குறள் – 16
இவை இவருடைய வேதாந்தக் கருத்துக்களைக் கூறுகின்றன.

காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புண்டர் யோகஞானம், சமாதிமுறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

“இல்லறமாயினும், துறவறமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகாவிடில் செய்யும் பிற செயல்கள் வீண் பகட்டாகக் கருதப்படும்” என்கிறார்.

காக புசுண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி கொண்டதாகவும் சித்தர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி காகபுசுண்டர் சித்தர் வரலாறு வெளியிட்ட தளங்களுக்கு !

09 June, 2009

வாழ்வோம் : வளம்பெற

தீவபுரி என்ற நாட்டை மன்னன் மதிவாணன் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் குற்றங்களை ஒழித்து செழிப்பான ஆட்சி மலர என்ன செய்யலாம் என்று அமைச்சர்களை கூட்டி ஆலோசனை நடத்தினான். ஆலோசனயின் முடிவில் நாட்டில் குற்றங்களை ஒழிக்க வேலை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் உழைத்து உண்ண வேண்டும். வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் சோம்பேறிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் படி நாட்டில் முரசு அறிவித்தான்.முரசு அறிவிப்பை கேட்ட மக்கள் தத்தம் வேலைகளை சரியாகவும் முதியோர் தன்னால் முடிந்த வேலைகளையும் செய்து (அரசனின் அறிவிப்பிற்க்காகவும் பயந்து ) வந்தனர்.இதனால் நாட்டில் வறுமை ஒழிந்து நல்லாட்சி மலர்ந்தது. தான் இயற்றிய சட்டம் ஒழுங்காக நடை பெறுகிறதா? என்று மாறு வேடத்தில் மந்திரிகளுடன் சென்று பார்வையிட்டார். ஒற்றர்கள் மூலமாகவும் வேலை இல்லாமல் திரிபவர்களை கைது செய்து மரண தண்டனை விதிக்கும் படி உத்தரவிட்டார்.


........
நாட்கள் பல சென்றன. மாதங்கள் உருண்டோடி வருசங்கள் ஆயின.

மாலை மங்கி இரவு வரும் நேரம் பக்கத்து நாட்டில் இருந்து தேவபுரிக்கு வழிப்போக்கன் ஒருவன் வந்தான். காலார நடந்து வந்ததில் களைத்த அவன் ஊர் எல்லை புறத்தே உள்ள கோவில் வந்து சேர்ந்தான். அவன் வந்த நேரம் அந்த கோவிலில் இரவு கால பூஜை நடந்து கொண்டு இருந்தது. பூஜை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது . கோவிலில் பூஜை முடிந்து அனைவரும் தத்தமது வீடுகளுக்கு சென்றனர். வழிப்போக்கன் நாட்டிற்கு புதியவன் ஆகையால் அவன் அந்த கோவிலில் படுத்து இரவு பொழுதை கழித்தான்.


மதி சோர்ந்து ஞாயிறு வரும் வெலையில் கோவில் பூசாரி வந்து கோவிலை திறந்து சுவாமிக்கு அபிசேகம் எல்லாம் செய்து கிளம்பினார். அவர் கிளம்பும் வேலையில் வழிப்போக்கன் எழுந்து சென்று முகம் கழுவி அவர் முன் நின்று திருநீறு அணிந்து பகவானை தொழுதான் இவன் தொழுவதை பார்த்த பூசாரி இறைவனுக்கு படைத்த பிரசாத உணவில் அவனுக்கு கொடுத்தார் அதை வாங்கி உட்கொண்ட பின் அவன் அமர்ந்து த்யானத்தில் ஈடுபடலானான் மதியமும் இதைபோலவே கழிந்தது மாலை வேலையில் மறுபடியும் பூசாரி வந்து இறைவனுக்கு அபிசேகம் செய்ய வந்த போது இவன் கோவிலில் இருப்பதை பார்த்த பூசாரி என்னப்பா ஊருக்கு புதுசா கோயில்லேயே நாள் முழுவதும் இருக்கிறீயே என்று கேட்டார். ஆமாங்க நான் சேதுபுரியில் இருந்து வந்திருக்கேன் ஒரு வழிப்போக்கன் ஊரு ஊரா சுத்துறதுதான் என் வேலை என்றான்.இது போல் இரண்டு நாட்கள் சென்றன. பூசாரி கோவிலில் வழிப்போக்கன் ஒருவன் வேலை செய்யாமல் இருப்பதை மற்றொருவரிடம் கூறினார்.இது ஒற்றர்களின் காதிற்கும் போனது, இது இப்படியே மன்னரின் காதிற்கும் போனது இதை அறிந்த மன்னன் கடும் கோபம் கொண்டான்.கோபம் கொப்பளிக்க ஒற்றர்களிடம் அவனை இங்கு இழுத்து வாருங்கள். மக்களை பயமுறுத்தி எல்லோரையும் குற்றமில்லா வாழ்வு வாழ வைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் எவேனோ ஒருவன் வந்து அதனை கெடுப்பதா ? என்று கத்தினார்.
ஒற்றர்கள் விரைந்து கோவிலுக்கு சென்று அவனைகைது செய்யலாம் என்றெண்ணியபோது அவன் ஆழ்ந்த த்யானத்தில் இருந்ததை பார்த்து கண் விழித்த போது கைது செய்யலாம் என்று காத்திருந்தனர்.


அவன் த்யானத்திலேயே இரண்டு நாட்கள் இருந்ததால் இச்செய்தியும் மன்னனின் காதிற்கு சென்றது. இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாம் நாள் அரசனும் கோவில் வந்து சேர்ந்தான், அரசன் தன் மனதில் இவன் தான் இயற்றிய சட்டத்தை மீறி நடந்த முதல் குற்றவாளி ஆகையால் இவனை எப்படியும் கடும் தண்டனைக்கு உட்படுத்தி ஆக வேண்டும் என கருதி இருந்தான். இதனால் அரச வருகையினாலும் தண்டனையை காணவும் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மூன்றாம் நாள் மதியத்தில் கண் விழித்த வழிப்போக்கன் தன் முன் இத்தனை பேர் கூடியிருப்பதை பார்த்து அதிசயித்துஎளுந்தான். எழுந்தவுடனேயே "கைது செய்யுங்கள் அவனை" என்று மன்னன் ஒற்றனை பார்த்து கூறினான்.

நடந்ததை கண்டு பதற்றபடாத அவன் மன்னனை பார்த்து எதற்காக என்னை கைது செய்கிறீர்கள் என்று கூறிவிட்டு கைது செய்யுங்கள் என்றான்.இப்போது மந்திரி பேசலானார்; நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தை மீறியது முதல் குற்றம் நாட்டின் மன்னனேயே காக்க வைத்து இரண்டாவது குற்றம் என்றார். நாட்டில் என்ன சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்றான்.நாட்டில் சோம்பேறிகளுக்கு மரண தண்டனை கொடுப்பது அரச கட்டளை என்றார் மந்திரி . நான் சோம்பேறி அல்லவே, சோம்பேறி அல்ல என்றால் எதற்காக இரண்டு நாட்கள் இதே இடத்திலேயே அமர்ந்து இருக்கிறாய் என்றார் மன்னர்.மனதை அடக்கி அதில் மகேசனை குடி வைக்க காத்திருந்தேன் இது சோம்பேறி செயலல்ல மன்னா! முடிந்தால் ஆட்டம் போடும் உங்கள் உடலையும், மனதையும் இன்று ஒரு நாள் எவ்வளவு நேரம் அடக்கி வைக்கிறீர்கள் என்று பார்ப்போமா என்று போட்டிக்கு அழைத்தான்.


சும்மா இருப்பது ஒரு வேலையா என்று போட்டிக்கு தயாரானார் மன்னர்.மன்னா ஒரு நிபந்தனை போட்டியில் அடியேன் செயித்து அடியேன் நீங்கள் விரும்பியது போல் எனக்கு மரண தண்டனை விதிக்கலாம் ஆனால் நான் செயித்து விட்டால் நீங்கள் எனக்கு என்ன உபயம் செய்வீர்கள் என்றான். என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்ற மன்னன் போட்டியின் படி சும்மா இருக்க (கண் மூடி தவம்) தொடங்கினான். கண் மூடியபடி வழிப்போக்கணும் த்யானத்தை தொடர்ந்தான் கண் மூடிய பதினைந்து நிமிடத்தில் உடல் வலியால் வெகுண்ட மன்னன் தவத்தை கலைத்தான். மன்னன் விழித்ததை உணர்ந்த வழிப்போக்கன் த்யானத்தை கலைத்து என்ன மன்னா இவ்வளவு நேரம்தான் உங்களால் முடிந்ததா ? நான் இன்னும் எவ்வளவு நேரம் இருப்பேன் உங்களுக்கே தெரியும் என்றான், மேலும் மன்னா நீங்கள் கூறும் சும்மா வேறு நான் இருந்த சும்மா வேறு,

சும்மா இருத்தல் சுகமே - ஆயினும்
எல்லார்க்கும் வாய்க்காது அது ! .

என்று சும்மா இருத்தலை உணர்த்திவிட்டு இதோ கிளம்பி விட்டான் அவன் (தண்டனை பெறாமல்).

ஒரு நாள் ஒரு வேலை உணவு உண்ணாமலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் கூட த்யானம் செய்வதை மறக்காதே என்றான் - பாரதி .

தவம் செய்வதால் வானவர் நாடு வழி திறந்திடுமே -என்றாள் அவ்வை தாய்.

பெரியோர் எல்லாம் வலியுறுத்தும் செயலை நாம் செய்யலாமே. அள்ளலாமே அவர்கள்அருளை.


சமர்ப்பணம் குருவடிக்கு.