குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

24 April, 2011

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள்



இருபதாம் நுற்றாண்டு இறுதியில் தென் தமிழகத்தில் நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகில் போளூர் தாலுகா கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி இருந்தார். அவருக்கென்று பேர் கூட கிடையாது. ஜீவ முக்தி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கலாயினர். சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் பூண்டி மகான் ஆற்றுசுவாமிகள் என்றும் அழைக்கலாயினர்.

வட ஆற்காடு மாவட்டம் வேலூருக்கு தெற்கே செல்லும் நெடுஞ்சாலை பாதையிலுள்ள போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கத்தில் வாழ்ந்தவர்.இவர் சென்ற நூற்றாண்டின் வாழ்ந்த சித்தர் என்பதால் இவரைப் பற்றி பல அமானுஷ்ய தகவல்கள் போளூர் ,கலசபாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது.

நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும் சித்திரை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள். கலசபாக்கம் என்பது ஆற்றங்கரைமான கிராமம் ஆகும். தொடர்ந்து ஒருநாள் முழுதும் மழை பெய்தால் ஆறு முழுதும் வெள்ளம் பெருகி காட்டாறு போல் பொங்கி பெருக்கெடுத்து ஓடும். பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியும், அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகை இலைகளால் எந்த நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை காத்து வந்தார். இதனால் பாமரமக்களும், மற்றவர்களும் அவரை தேடியும், நாடியும் வந்து வணங்கி அன்பு செலுத்த ஆரம்பித்தனர். அந்த ஆற்றங்கரை மணல் மேட்டிலே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

ஒருசமயம், தொடர்ந்து வானம் பெய்த்தால் மழை நின்று போனது. மழை இல்லாத காரணத்தால் பயிர் தொழில், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமைச்சூழலில் வேதனையும், அவதியும் பட்டனர், ஊரின் கிராம முன்சீப் கிராம மக்களை ஒன்று கூட்டி , கிராமத்தைக் காப்பாற்றும் படி நாளை மகானிடம் சென்று முறையிடலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றிரவு.., முன்சீப் மகானிடம் எப்படி கேட்பது....,அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு..., ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர..., எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.

‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். இது கனவா... நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார்.

”ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’பணிந்து வேண்டினர்.

’’என்ன முனிசீப் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... ஒரு செயலை செஞ்சு முடிக்கறதுக்கு முன்னாடி எப்படி நம்பமுடியும்? இது இயற்கைதானே! சரி... சரி இப்ப எழுந்து உன் வீட்டு வாசலுக்குப் போ நான் நிஜமா பொய்யான்னு தெரியும்...’ என்று சொல்ல அடுத்த நொடி ஏதோ உணர்ந்தவராக முனிசீப் சடாரென எழுந்து உட்கார்ந்தார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் சித்தர் நம் எதிரில் நின்று பேசியது கனவா? ஆனால்,அது கனவாக தெரியவில்லையே..., நிஜத்தில் நடப்பது போலல்வா இருந்தது ‘’? என்று வியந்து யோசித்தபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.

அப்போது லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.

நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் பதினைந்து ஆண்டுகள் மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது. விடிந்ததும் மனசு முழுக்க சித்தரின் நினைவுகள் நிறைந்திருந்தது. நடந்த விபரங்களை ஊர் மக்களிடம் கூறி, அவரை காண ஆற்றங்கரக்குச் சென்றார்.அங்கே சித்தர் இல்லை. பலவிடங்களில் தேடியும் சித்தர் காணவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன், ‘’அங்க பாருங்க சாமியார் உட்கார்ந்திருந்த இடத்திலே மண் மூடியிருக்கு..; என்று கூற மண் மூடிய இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த
சித்தரை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும் நெகிழ்வாக கண்கலங்கி....., சட்டென்று கண் திறந்தார்.

’’போதுமா... நீங்க கேட்ட மாதிரி மழை பெய்துவிட்டது...’’ என்று கூற ஊர் மக்கள் யாவரும் நெகிழ்வாக கரம் கூப்பி வணங்கினர்..

ஊரிலான், பேரிலான் :

எப்பொழுது இந்த பகுதிக்கு வந்தார்?,எங்கிருந்து வந்தார்?, என எவ்வித தகவலும் கிடையாது. அவருடைய பெற்றோர் யார்?, உற்றார் உறவினர் யார்? என எந்த ஒரு செய்தியும் ஒருவருக்கும் தெரியாது.

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கலசபாக்கம், குருவிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்பட தொடங்கியாதாக சிலர் கூறுகின்றனர். மனம் போன போக்கில் பிச்சைக்காரர் போன்று திரிந்து கொண்டு. எவ்வித ஆன்மிக அடையாளமும் இன்றி இருந்ததால் பொது மக்கள் யாரும் கவனிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை .

அவரது செய்கைகள் சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.அவர்கள் அவரை ஏளனம் செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து sendru விடுவார். புற உலக சிந்தனை இன்றி சுயம்பாக இருப்பதை ஒரு சில ஆன்மிக பெரியவர்கள் கவனிக்கலாயினர்.

சுவாமிகளின் பொன்மொழிகள்...

தன் பசித்துன்பத்தைக் போருத்துக்கொல்லுதலும், பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.

பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.

இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது.

மக்களை மக்களென நினைத்து பணியாற்று செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.

மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறனைக் கருக்கி தானே கெடுகின்றான்.

தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து தன் கடமையை செய்பவன்தான் பெரிய மனிதனும், அறிவுடையவனுமானவன்.

எல்லோரும் தீய பலன்களிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றை செய்வதில் எல்லோரும் ஒன்று போல் தயக்கம் காட்டுவதில்லை.

மனிதன் மனதில் பூசை செய்து தான் நினைத்த காரியம் நடக்காததை நினைத்து நொந்து மடிகிறான். மனதில் பூசை செய்வதை விட ஜீவனில் பூசை செய்வதே சிறந்தது.


உதவி :
http://srisivalayam.blogspot.com/2011/01/blog-post.html
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ec45b08e4da641bd


பூண்டி மகான் திருவடிகள் போற்றி!
குருவடி போற்றி!!
திருவடி போற்றி!!!

27 March, 2011

மகா அவதார் பாபாஜி - 2

லாஹிரி மஹா சாயர் (மஹா அவதார் பாபாஜியின் சீடர்)

மஹா அவதார் பாபாஜி இந்த உலகத்திற்கு தெரிய, பாபாஜி பயன்படுத்திய முதல் கருவி லாஹிரி மஹா சாயர் தான்.மஹா அவதார் பாபாஜி முதலில் காட்சி கொடுத்தது இவருக்கு தான். கிரியா யோகத்தை முதலில் பாபாஜி கற்று கொடுத்தது இவருக்கே. இவரின் இயற்பெயர் ஷாமா சரண் லாஹிரி. அனைவரும் இவரை லாஹிரி மகாசாயா என்று அழைத்தார்கள்.(மகாசாயா என்றால் விசாலமான அறிவு உடையவர் என்று பொருள்.)

குழந்தை பருவம் :

இவர் 30 தேதி, செப்டம்பர் மாதம்,1828 -ல் வங்காள மாநிலம், நதியா மாவட்டத்தில், குர்னி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் கௌர் மோகன் லாஹிரி மற்றும் முக்தாக்ஷி .பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் சிறுவதிலேயே, அவரின் அன்னை இறந்து விட்டார். லாஹிரி மகாசாயர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான்கு வயதில் இருந்தே தியானம் செய்வதைக் கற்றுக் கொண்டார். தலையைத் தவிர மற்ற உடல் பகுதி முழுவதும் மண்ணுள் புதைத்துக் கொள்ளும் தியான முறையை கையாண்டார்.

அவரது வீடு, ஒரு பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஆகவே அவர் குடும்பதினோடு வாரணாசிக்கு சென்றார்.தான் வாழ்நாளின் மீத பகுதியை அங்கேயே கழித்தார். பிள்ளை பருவத்திலேயே ஹிந்தி, உருது அறிந்திருந்தார். பின்னர் பெங்காலி, சமஸ்கிருதம், பாரசீகம்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அரசு சமஸ்கிருத கல்லூரியில் கற்று கொண்டார். கங்கையில் நீராடி விட்டு, வேதங்களையும், புராணங்களையும் அங்கேயே கற்று கொண்டார்.

இளமைப் பருவம் :


கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ,ஆங்கிலேய ராணுவத்தில் கணக்காளராக பணி ஆற்றினார். 1846 -ல் ஸ்ரீமதி காஷி மோனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்.லாஹிரி மாஹசாயரின் தந்தை இறந்த பின், குடும்ப பொறுப்பை தானே ஏற்றார்.

அப்போது மகாசாயவிற்கு 33 வயது.1861 -ல், இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள "ராணிகட்" என்ற இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதுதான் அவர் வாழ்கை முறையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. ராணிகட் சென்றவுடன் மகாசாயவிற்கு கிடைத்த முதல் செய்தி அந்தப் பகுதி ஏராளமான ஞானிகள் வாழும் பகுதி என்பதுதான். அந்த ஞானிகளை காண வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் அவர் மலை மீது ஏறினார்.

மஹா அவதார் பாபாஜி ஆட்கொள்ளல்:

அவர் மலைப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவரை அழைத்தது. மேலும் அவர் அக்குரலை கேட்டுக் கொண்டே மலையின் மீது ஏறிச் சென்றார். அப்போது தான், கிரியா யோகத்தின் ஒளி விளக்கான "மஹா அவதார் பாபாஜி" யை சந்தித்தார்.

அப்போது அவரை மஹா அவதார் பாபாஜி தன் முதல் சீடராக ஏற்றுகொண்டார். கிரியா யோக வித்தைகளை அவருக்கு கற்று தந்தார். உலகுக்கு எல்லாம் கிரியா யோகத்தைப் பரப்புமாறு மஹா அவதார் பாபாஜி, லாஹிரி மகாசாயருக்கு கட்டளை இட்டார்.

பின்பு அவர் வாரணாசிக்கே திரும்பி வந்து, கிரியா யோகத்தைப் பற்றியும், மஹா அவதார் பாபாஜியை பற்றியும் எல்லாருக்கும் எடுத்து உரைத்தார். அங்குள்ள அனைத்து மக்களும் கிரியா யோகத்தை தெரிந்துகொள்ள முனைந்தனர்.

லாஹிரி ஒரு குழுவை அமைத்து கிரியா யோகத்தை பற்றி மக்கள் அறியுமாறு செய்தார். கிரியா யோகத்திற்கு மதம் முக்கியம் இல்லை. ஆகவே இந்து,முஸ்லிம், கிறிஸ்து ஆகிய மதத்தினருக்கும் கற்று தரப்பட்டது.

1886 வரை கிரியா யோகத்தின் ஆசிரியராக விளங்கினார். பின்பு அனைத்து மக்களும் அவரது தரிசித்து சென்றனர். 26 செப்டம்பர், 1895 -ல் , தன் அறையில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருக்கும் போது, அனைவரது பார்வையின் எதிரே யோக நிலையிலேயே இறைவன் அடிசேர்ந்தார்.

இவருக்கு பின், அவரின் சீடர்களான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி பிரபானந்தா, சுவாமி கேஷபானந்தா போன்றோரால் கிரியா யோகம் மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

சென்னை சாந்தோம் பகுதியில் பாபாஜி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. இங்கு வழிபாட்டுக் கூடமும் பயிற்சிக்கூடமும் உள்ளன.


பாபாஜி அய்யா திருவடி போற்றி.

மகாசாயா அய்யா திருவடி போற்றி.

முற்றும்.

28 February, 2011

மகா அவதார் பாபாஜி - 1

பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில் பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். அவருக்கு 11 வயதானபோது கி.பி.1214ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1214 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார். ( போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)


கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார். மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24 மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது. இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது. ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும் வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம் வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார்.

தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார். பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.)

குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார்.

ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கொரிசங்கர் பீடம் என்று பெயர்.

பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக அவரது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி உள்ளதால். அவர் தோன்றி 1800 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட 16 வயது சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடவுளைக் காணும் ஆர்வம் மிக்கவர்களாகவும் கடவுளை காணும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்து வாவர்கள் தெய்வீக உணர்வை பெறுவதற்கு உதவி செய்வதையே பாபாஜி தம் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். இந்த தெய்வீக ஞானத்தை பெற்றிடும் மக்கள் இதை யாரிடம் இருந்து பெற்றோம் என்று அறிந்துகொள்ள முடியாத நிலையில் கூட கிரியாயோகப்பயிற்சியை அளித்து வருகிறார்கள்.


கிரியா யோகப்பயிற்சியை லாஹிரி மகாசாயா மூலம் உலகம் முழுவதும் பரவச்செய்ய பாபாஜி முடிவு செய்துவிட்டார். ராணுவத்தில் பணி செய்து கொண்டிருந்த மகாசாயா பாபாஜியின் மூலம் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.

மகாசாயா
தொடரும்...

22 January, 2011

படித்ததில் பிடித்தது

கீழே தன் கவி சாட்டையை சுழற்றி அடிப்பவர் நாகரா ஐயா அவர்கள். மிகத் தெளிவான பாடல்கள் அருமையாக இருந்தது. புல்லரிவாளன் வாலறிவை போற்றுவது மடமையே! அவரது Blog இணைப்பும் கீழே இருக்கிறது. படித்து சுவையுங்கள்...

கட!உள் - 1
http://enkavithaikal.blogspot.com/2011/01/1_20.html

வாதம் விவாதம் விட்டுக் கட!உள்
நேசம் விட்டேது கடவுள்?

தன்னை நம்பித் தன்கைப் பற்றத்
தன்னைக் காட்டுங் கடவுள்

அன்பை உணர அவகாச மின்றேல்
இல்லை நமக்குக் கடவுள்

பேரிலா அன்புக்கு பேர்பல சூட்டிப்
பேதமாய்ச் செய்வாயேன் கடவுள்

கட!உள் அன்புணர்! அதுவரை நினக்குக்
கடவுள் என்பது வெறுஞ்சொல்

வறுமையும் பசியும் உயிரை வாட்ட
வெறுஞ்சடங்கால் வசியுமோ கடவுள்

ஒருகல் மதிப்பாய் மறுகல் மிதிப்பாய்
ஒருமை சிறிதும் இல்லாய்

கல்லுக்குஞ் செம்புக்குங் காசுமேல் காசுமெய்
இல்லில்வாழ் ஏழைக்கில் சோறு

கேள்விகள் அற்று ஏகாரம் பெற்றால்
நானெனும் ஒன்றே கடவுள்

அஞ்ஞான நாகம் மெய்ஞ்ஞானம் பிதற்றும்
அன்பான நானோ மன்னித்தேன்


கட!உள் - 2
http://enkavithaikal.blogspot.com/2011/01/2_20.html

கடக்காமல் உள்ளே இல்லை கடவுள்
கட!உள் கடந்தால் உண்டு!

பொய்ம்மடம் கற்கோயில் வீண்சடங்கு எதற்கு
மெய்க்கடத் துள்மார்புள் கடவுள்

குருவென்னும் உருபின்னே உருண்டோடுங் கூட்டம்
குருவென்பார் இருதயத்தே ஒளிந்தார்

காலில் விழத்தான் சொல்லுமோ தலைகை
காலில் அருவாங் கடவுள்
(இரண்டாவது காலில் = கால் இல் = கால் இல்லாத)

உருவத்தில் உள்ளான் அருவத்தில் அடங்கான்
கருமத்தில் உழல்வான் தான்

கல்லில் வடிக்க லாகாக் கடவுள்
சொல்லி லும்பிடி படான்

ஆத்திக ஆடம்பரம் நாத்திக வீண்வாதம்
தாண்டிடு தேகம்நடு கட!உள்

சுருண்ட நாகம் விழித்து மேலேற
தெருண்ட நல்ல பாம்பு
(தெருண்ட = தெளிவுற்ற)

முதுகுத் தண்டும் மூளையும் போதிமரம்
இ(ரு)தயம் ஞானப் பழம்


பி.குறிப்பு: http://enkavithaikal.blogspot.com/ - இது ஐயாவின் தளம் அள்ளிப் பருகுங்கள் ஞான அமிழ்தை...

13 January, 2011

தோபா சித்தர்

ஒரு நீண்ட இடைவெளிதான் இது. திரும்பவும் எழுத வந்தது மகிழ்ச்ச்சி அளிக்கிறது. ஊக்கமளித்தவர்களுக்கு எனது நன்றிகள் பல.

இதோ இந்த பதிவு சென்னையில் வாழ்ந்த தோபா சித்தரைப்பற்றி தொடர்ந்து படியுங்கள்.

பெயர்க்காரணம்


இவருக்கு தோபா சித்தர் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் உள்ளது. இவர் ஒரு மகான் என்று தெரிந்த பிறகு பள்ளிச்சிறுவர்கள் கூட இவரை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை 'தோடுடைய செவியன்' என்ற பாடலைப் பாடுங்கள் என்று கேட்பார். அவர்களும் பாடுவார்கள். பல சமயங்களில் மெய்மறந்த நிலையில் உட்கார்ந்து அந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார்.


இது பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு மாணவர்களைப் பார்த்து "தோ பா" ('தோ' என்பது 'தோடுடைய செவியன்' 'பா' என்ற எழுத்து பாடுங்கள் என்பதை குறிக்கும்.) என்பார். "தோ பா" என்ற உடனேயே மாணவர்கள் பாடத்தொடங்கி விடுவார்கள். இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் 'தோபா சாமி' என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதுவே அவருக்குப் பெயராகவும் அமைந்து விட்டது. (குழந்தைகளுக்கு பெற்றோர் பெயர் வைத்துத்தான் நாம் பார்க்கிறோம். ஆனல் இங்கு பார்த்தீர்களா ஒரு தகப்பனுக்கு குழந்தைகள் பெயரிடும் அதிசயம். இது ஞானிகளுக்கே கிடைக்கும் வெகுமதி!) தொடந்து கீழே படியுங்கள்:




இவர் கருவில் திருவுடையவராகவே தோன்றி 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே துறவு பூண்டு அவதூதராக வாழ்ந்திருக்கிறார். இவர் 18ம் நுற்றாண்டின் பிற்பாதியில் திருச்சியில் தோன்றியவர். சுமார் 20 வயதளவில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் உள்ளது. அக்கால ஆங்கிலேயே படைப்பிரிவுகளில் காலாட்படையும், குதிரைப்படையும், கப்பல் படையும் இருந்தன. இவர் குதிரைப்படையில்தான் பணியாற்றினார். ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6 மணி முதல் 1 மணிவரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் நபிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார்.



பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீரர்கள் வெளியில் சென்று வருவார்கள். ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தாலும் அவர் வெளியில் செல்வதே இல்லை. பணிமுடித்த வேளைகளிலெல்லாம் படைவீரர் தங்கும் இடத்திலேயே தவத்தில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல சாமியின் தவக்காலமும் அதிகரித்து விட்டது.



படைப்பிரிவில் படைவீரர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் அவர்களுக்குரிய கட்டிலில் படுத்து தூங்கி விடவேண்டும். அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து 6 மணிக்குள் தங்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுத்தமாக சீருடை அணிந்துகொண்டு படைப் பயிற்சி மைதானத்திற்கு சென்றுவிட வேண்டும். தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு தோபா சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6 மணிக்கெல்லாம் படைப்பயிற்சி திடலுக்கு முறைப்படி வந்துவிடுவதையும் பார்த்திருக்கின்றனர். அவர் எதிலும் சரியாகவே இருந்ததால் அவர் தியானம் செய்ததை ஒரு குறையாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுபற்றி மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.



ஒருமுறை காலை 6 மணிக்கு தோபா சாமி தவத்தில் இருந்த நேரத்தில் மேலதிகாரி படைவீரர்கள் தங்கும் கூடாரத்தினுள் நுழைந்தார். அங்கு தவத்தில் தோபா சாமி ராணுவப் பயிற்சிக்கு தயாராகாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்ற மேலதிகாரி, தவத்தை கலைக்காமல் படைப்பயிற்சி திடலுக்கு வந்தார். அங்கு சாமி முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயாராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார். மேலதிகாரி கேள்வியுற்ற போதுதான் விசயம், அவர் ஒரு மகா சித்தர் என்பது தெளிவு பிறந்தது. அதன் விளைவாக சாமி படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்து கொண்டிருந்தார்.



சித்தர் வாழ்வு:

இந்த தோபா சாமி தற்போதைய மைலாப்பூர், சைதாப்பேட்டை, தாம்பரம் போன்ற பல பகுதிகளிலும் கூட "சித்தன் போக்கு சிவன் போக்கு" என்பதற்குரிய விதத்தில் சுற்றி திரிந்திருக்கிறார். பக்தர்கள் பல பேருக்கு உதவியும் உள்ளார்.

சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் சுற்றிக்கொண்டிருந்த சாமி ஓரிரு ஆண்டுகளிலேயே தம்மை மறந்த அவதூதராக மாறிவிட்டார். உடை அணியவேண்டும் என்ற உணர்வையே அவர் இழந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவருக்கு பக்தர்கள் பலர் சேர்ந்துவிட்டதால் அவருடைய தவ வலிமையை மக்கள் உணரத் தலைப்பட்டனர். இவர் யாரிடமும் தீட்சை பெற்றதாகவோ, வழங்கியதாகவோ தெரியவில்லை. இருப்பினும் சீடர்களைப்போல் சிலர் அவருடனையே இருந்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்தநாத சுவாமிகள். தோபா சாமிக்காக சித்தநாதசாமிகளே தோடுடைய செவியன் பாடலைப் பாடினார். அந்த சித்தநாதன்தான் கடைசிவரை சாமியின் கூடவே இருந்தவர்.



இவர் அவதூதராக மாறிய பிறகு 1840க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை யில் வாழ்ந்திருக்கிறார். இந்த பத்தாண்டு காலத்தில் இரமலிங்க அடிகளும் சென்னையில் வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் ஒரு சில ஆண்டுகள் இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தினமும் தவறாமல் திருவொற்றியூர் தியாகரஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்று தியாகராஜ பெருமானையும் வடிவுடையம்மனையும் வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் அந்த கோவில் சன்னிதித் தெருவில் அவதூதராக நடமாடிக்கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் தெருவில் போகிறவர்களையும் வருகிறவர்களையும் பார்த்து இதோ ஒரு நாய் போகிறது, இதோ ஒரு நரி போகிறது, இதோ ஒரு காளைமாடு போகிறது என்று ஏதோ ஒரு விலங்கின் பெயரால் அழைத்து வந்தார். அவருடைய பக்தர்களுக்கெல்லாம் இது ஒரு வியப்பான தொடர் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. ஒரு நாள் அவர் சன்னிதித் தெரு வழியே இராமலிங்க அடிகள் (வள்ளலார்) சென்றதைப் பார்த்து இதோ ஒரு மனிதன் போகிறான் என்று மகிழ்ச்சி பொங்க கத்திவிட்டார்.



19 நூற்றாண்டின் முற்பகுதியில் சாமி சென்னையை விட்டு வேளியேற முற்பட்டார். அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர். குதிரை வண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார்.


அவருடன் சீடர் சித்தநாதனும் இறங்கிவிட்டார். அதன் பிறகு சாமி வேறெங்கும் செல்லவில்லை. வேலூரிலேயே சுமார் 25 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்து கொண்டு அவர் சமாதி கூடியபோது அவருக்கு வயது 70 இருக்கும். மக்கள் இன்றும் அவர் சமாதியில் வழிபாடு செய்கின்றனர். அவரது முக்கிய சீடரான சித்த நாதரே அவருக்கு சமாதி எழுப்பி அதன்மீது லிங்க பிரதிஷ்டை செய்துள்ளார். சிறிது காலத்திற்கு பிறகு சித்தநாதரும் அங்கேயே சமாதி கூடினார். லிங்கத்திற்கு எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தியின் அடியில் அவருடைய சமாதி உள்ளது.



சமாதி உள்ள இடம் :

வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் சைதாப்பேட்டை மெயின்பஜாரில் உள்ள சாலையில் அவருடைய சமாதி உள்ளது. சித்தரின் சமாதி இப்போது ஒரு மடாலயமாக வளர்ந்துள்ளது.