குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

18 February, 2010

அழுகணிச் சித்தர் பாடல்கள் 2

இதோ இன்னும் அழுகணி சித்தர் பாடல்களுடன் ......

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! 11

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ! 13

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி! 14

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி! 15

காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ! 16

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்! 17

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ! 18

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ? 19

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே! 20

நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!


[இன்னும் அழுகணி சித்தர் பாடல்களுடன் வளர்வோம் ....]

2 comments:

Ranganathan N R said...

sir,
Please enlighten us with the meaning of these songs . thanks.m
N.R.Ranganathan
9380288980

Ranganathan N R said...

sir,
Please enlighten us with the meaning of these songs . thanks.m
N.R.Ranganathan
9380288980