ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன.
அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்றக் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது.
சட்டைமுனி ஞானம்
எண்சீர் விருத்தம்
    காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
       கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
   பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
           புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
   நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
            நம்முடைய பூசையென்ன மேருப் போலே
   ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
            உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1
    தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
            சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
   தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
            சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
   வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
            வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
   கோனென்ற வாதசித்தி கவன சித்தி
            கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2
    கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
            குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
   மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
            மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
   தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
            திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
   ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
            அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3
    பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
            பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
   வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
            மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
   கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
            காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
   உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
            உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4
    தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
            சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
   மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
            மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
   தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
            சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
   துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
            சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5
    பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
            பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
   வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
            மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
   காழான உலகமத னாசை யெல்லாங்
            கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
   கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
            கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6
சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி !
நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!
[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]
 
 
 
 
9 comments:
அருமை! தமிழில் உள்ள இந்த பாடல்களை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்!
///snkm said... ///
ஆவல் உள்ளவர்கள் மட்டுமே இதில் அக்கறை செலுத்துகின்றனர். மற்றோர் இதனை கண்டுகொள்வதேயில்லை. கருத்துப் பதிவிற்கு நன்றி ஐயா
ARUMAI ARINDHEN.
///MURUGESWARI said... ///
வருகைக்கும், கருத்துப் பதிவுக்கும் நன்றி முருகேஸ்வரி அவர்களே,
தங்கள் வலைப்பூ சிறந்த சேவை செய்து வருகிறது.நம் சித்தர் பாடல்கள் கலைப் பொக்கிஷங்கள்.அவற்றை உயிர் கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டும். நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறை அருள் புரியட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
25 November 2010
// சாமீ அழகப்பன் said...//
தங்களின் அன்புக்கு நன்றி ஐயா, கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அருமையான தமிழ்ப் பணி !
வாழ்த்துக்கள் !
இராம்கரன்
www.tamiljatakam.blogspot.com
தாங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இராம்கரன் அவர்களே,
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
Post a Comment