குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

04 March, 2010

யார்? சித்தர்கள் ?

46 பதிவுகளை எழுதிய பின் இப்பதிவு தேவையா? என்ற கேள்வியுடன் எழுதினாலும் சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டு இதோ ...

"வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே"

என்கிறார் பட்டினத்தார். இருந்தாலும் அவரே பின்னர் நாம் ஏமாந்து விடக்கூடாது என்று,

"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!"

பேய்போல் திரிந்து - பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,
பிணம்போல் கிடந்து - உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி- யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,
நன்மங்கையரைத் தாய்போல் கருதித்- நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் - அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,
சேய்போல் இருப்பர்கண்டீர் - குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,
உண்மை ஞானம் தெளிந்தவரே - அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர்.

என்கிறார். ..

பரிசுத்த மெய்ஞ்ஞானம் பெற்றவர்களே சித்தர்கள்.சித்தர்கள் என்ற சொல்லின் பொருளைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ‘சித்தர்கள்’ என்ற சொல் பொதுவானதாகும். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே அடைந்த அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். மேலும் வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் என்றும் கூறலாம். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையையும் கொண்டவர்கள்.

சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை "சிவ" பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லறவாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் பற்றுகளகன்று ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.”

மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள் ஆவர். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். இவர்கள் கண்ட சராசர ரகசியங்களை அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.

சித்தர்கள் யோகசனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அகத்தியர் வருகைக்குப் பின்பே சித்தர் மார்க்கத்தின் மீது ஆரியவண்ணம் பூசப்பட்டு விட்டது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.

இத்தகைய சிறப்புப் பெற்ற சித்தர்கள், தங்கள் திருமேனியை மறைத்துக் கொண்ட இடமாகக்கருதப்படும் இடங்கள் எல்லாம் தெய்வீக சக்திமிக்க திருக்கோயில்களாகக் கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

இந்தத்திருத்தலங்கள் பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள் எனப்பின்வரும் பாடல்மூலமாக அறியலாம்:

“ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி
திருப்பதி கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு
ஒர் நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே”

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து திருமாலைச் சிவபெருமானாக அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப்பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்யநட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000 ஆம் நூலில் கூறுகிறார்.

அகத்தியர் அருளிய நூல்கள்:
அகத்தியர் 21,000 அகத்தியர் 12,000 அகத்தியர் பரிபூரணம் அகத்தியர் ஆயுர்வேதம் அகத்தியர் நயனவிதி அகத்தியர் குணயாடம் அகத்தியர் அமுதக்கலை ஞானம் அகத்தியர் செந்தூரம் 300 அகத்தியர் வைத்திய காவியம் 1500 முதலியவையாகும். இவர் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டதாகக் கூறப்படுகிறது. இமயமலையில் வசிப்பதாகவும் கூறுவர்.

இத்தனைக்கும் மேலே வாழ்வாங்கு வாழும் வள்ளுவர் வாக்கான திருக்குறளிலே,

"எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு"

என்று கூறினாலும் அதன் வழியில் நில்லாது போனால் யாருக்கு தாழ்வு...


நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

....ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

9 comments:

surya said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

தேவன் said...

நன்றி சுப்பு ரத்தினம் ஐயா!

snkm said...

அருமை! சித்தர்கள் பற்றி சிறப்பாக இருக்கிறது!

தோழி said...

சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டு இதோ ...///

எதனால் இந்த திடீர் அக்கறை என்று தெரிந்து கொள்ளலாமா?

எது எப்படியோ பதிவு விளக்கங்கள் அருமை...

தேவன் said...

நன்றி ஷங்கர் ஐயா !

தேவன் said...

திடீர் அக்கறை எல்லாம் ஒன்றும் இல்லை தோழி அக்கறை எப்பொழுதும் உள்ளதுதான். ஆனால் அவை சில நேரங்களில் முக்கியமாக எடுத்து கொள்ளப்படுகின்றன.

பித்தனின் வாக்கு said...

// வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் என்றும் கூறலாம். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள் //
சாஸ்திரம் இயற்றுவர்கள் எல்லாம் சித்தர்கள் அல்லர், மந்திரவாதிகள் தந்திரிகள் அல்லது தந்திரம் செய்வபர்கள். சித்தர் சித்து வேலை மட்டும் தான் செய்வார்கள். அது மக்கள் நண்மைக்காக.
அவர்களுடைய சிந்தனை "சிவ" பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லறவாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் பற்றுகளகன்று ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.”
இது சரி, சித்தத்துடன் ஒட்டியிருப்பவர்கள் அல்லது சித்தத்தை கட்டி சிவத்துடன் இணைந்து இருப்பவர்கள் சித்தர்கள், சித்தர்கள் வைத்தியம்,இரசவாதம் கற்று வைத்துருந்தனர். அதன் மூலம் மக்களைக் காத்தனர், ஆனால் பின்னால் வந்த வைத்தியர்கள் சித்தர்கள் என்றால் வைத்தியர்கள் என்பது போல சித்தரித்து விட்டனர்.
மற்றபடி தாங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை, நன்றி.

தேவன் said...

வாங்க பித்தன் ஐயா, வருகைக்கு நன்றி!

இர.கருணாகரன் said...

அன்பு தேவன் வணக்கங்கள்.

மிக அருமையான விளக்கங்கள்.

சிறு வயதில் இந்த ஞானம் ஆச்சரியப்பட வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.