குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

27 March, 2011

மகா அவதார் பாபாஜி - 2

லாஹிரி மஹா சாயர் (மஹா அவதார் பாபாஜியின் சீடர்)

மஹா அவதார் பாபாஜி இந்த உலகத்திற்கு தெரிய, பாபாஜி பயன்படுத்திய முதல் கருவி லாஹிரி மஹா சாயர் தான்.மஹா அவதார் பாபாஜி முதலில் காட்சி கொடுத்தது இவருக்கு தான். கிரியா யோகத்தை முதலில் பாபாஜி கற்று கொடுத்தது இவருக்கே. இவரின் இயற்பெயர் ஷாமா சரண் லாஹிரி. அனைவரும் இவரை லாஹிரி மகாசாயா என்று அழைத்தார்கள்.(மகாசாயா என்றால் விசாலமான அறிவு உடையவர் என்று பொருள்.)

குழந்தை பருவம் :

இவர் 30 தேதி, செப்டம்பர் மாதம்,1828 -ல் வங்காள மாநிலம், நதியா மாவட்டத்தில், குர்னி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் கௌர் மோகன் லாஹிரி மற்றும் முக்தாக்ஷி .பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் சிறுவதிலேயே, அவரின் அன்னை இறந்து விட்டார். லாஹிரி மகாசாயர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான்கு வயதில் இருந்தே தியானம் செய்வதைக் கற்றுக் கொண்டார். தலையைத் தவிர மற்ற உடல் பகுதி முழுவதும் மண்ணுள் புதைத்துக் கொள்ளும் தியான முறையை கையாண்டார்.

அவரது வீடு, ஒரு பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஆகவே அவர் குடும்பதினோடு வாரணாசிக்கு சென்றார்.தான் வாழ்நாளின் மீத பகுதியை அங்கேயே கழித்தார். பிள்ளை பருவத்திலேயே ஹிந்தி, உருது அறிந்திருந்தார். பின்னர் பெங்காலி, சமஸ்கிருதம், பாரசீகம்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அரசு சமஸ்கிருத கல்லூரியில் கற்று கொண்டார். கங்கையில் நீராடி விட்டு, வேதங்களையும், புராணங்களையும் அங்கேயே கற்று கொண்டார்.

இளமைப் பருவம் :


கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ,ஆங்கிலேய ராணுவத்தில் கணக்காளராக பணி ஆற்றினார். 1846 -ல் ஸ்ரீமதி காஷி மோனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்.லாஹிரி மாஹசாயரின் தந்தை இறந்த பின், குடும்ப பொறுப்பை தானே ஏற்றார்.

அப்போது மகாசாயவிற்கு 33 வயது.1861 -ல், இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள "ராணிகட்" என்ற இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதுதான் அவர் வாழ்கை முறையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. ராணிகட் சென்றவுடன் மகாசாயவிற்கு கிடைத்த முதல் செய்தி அந்தப் பகுதி ஏராளமான ஞானிகள் வாழும் பகுதி என்பதுதான். அந்த ஞானிகளை காண வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் அவர் மலை மீது ஏறினார்.

மஹா அவதார் பாபாஜி ஆட்கொள்ளல்:

அவர் மலைப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவரை அழைத்தது. மேலும் அவர் அக்குரலை கேட்டுக் கொண்டே மலையின் மீது ஏறிச் சென்றார். அப்போது தான், கிரியா யோகத்தின் ஒளி விளக்கான "மஹா அவதார் பாபாஜி" யை சந்தித்தார்.

அப்போது அவரை மஹா அவதார் பாபாஜி தன் முதல் சீடராக ஏற்றுகொண்டார். கிரியா யோக வித்தைகளை அவருக்கு கற்று தந்தார். உலகுக்கு எல்லாம் கிரியா யோகத்தைப் பரப்புமாறு மஹா அவதார் பாபாஜி, லாஹிரி மகாசாயருக்கு கட்டளை இட்டார்.

பின்பு அவர் வாரணாசிக்கே திரும்பி வந்து, கிரியா யோகத்தைப் பற்றியும், மஹா அவதார் பாபாஜியை பற்றியும் எல்லாருக்கும் எடுத்து உரைத்தார். அங்குள்ள அனைத்து மக்களும் கிரியா யோகத்தை தெரிந்துகொள்ள முனைந்தனர்.

லாஹிரி ஒரு குழுவை அமைத்து கிரியா யோகத்தை பற்றி மக்கள் அறியுமாறு செய்தார். கிரியா யோகத்திற்கு மதம் முக்கியம் இல்லை. ஆகவே இந்து,முஸ்லிம், கிறிஸ்து ஆகிய மதத்தினருக்கும் கற்று தரப்பட்டது.

1886 வரை கிரியா யோகத்தின் ஆசிரியராக விளங்கினார். பின்பு அனைத்து மக்களும் அவரது தரிசித்து சென்றனர். 26 செப்டம்பர், 1895 -ல் , தன் அறையில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருக்கும் போது, அனைவரது பார்வையின் எதிரே யோக நிலையிலேயே இறைவன் அடிசேர்ந்தார்.

இவருக்கு பின், அவரின் சீடர்களான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி பிரபானந்தா, சுவாமி கேஷபானந்தா போன்றோரால் கிரியா யோகம் மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

சென்னை சாந்தோம் பகுதியில் பாபாஜி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. இங்கு வழிபாட்டுக் கூடமும் பயிற்சிக்கூடமும் உள்ளன.


பாபாஜி அய்யா திருவடி போற்றி.

மகாசாயா அய்யா திருவடி போற்றி.

முற்றும்.