[அருணகிரியாரின் வருகையில்....]
கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.
மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.
சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.
தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காக்ஷி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காக்ஷி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காக்ஷி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. பேரொளி ஒன்று அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அருணகிரியார் காலி விழுந்து மன்னிப்பு கோரினான்.. சம்பாந்தாண்டனை மன்னித்து விட்டு, மன்னனையும் சம்பாந்தாண்டனை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.
அருணகிரிநாதர் இயற்றிய நூல்கள்
கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தர் அனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு
சேவல் விருத்தம்
மயில் விருத்தம்
வேல் விருத்தம்
திருவெழு கூற்றிருக்கை
அருணகிரிநாதர் வரலாறு முற்றிற்று.
நன்றி : -
www.vallalarspace.com