குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

26 April, 2010

தங்கவேல் லோகாயத சித்தர் :_/\_


இவரைப்பற்றிய வாழ்க்கை குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. இவர் பெயர் கூட இவரது கடைசிப் பாடலில் இருந்து அறியப்பட்டது. இவர் பாடல்கள் மிகுந்த அவரது அறிவாற்றலை நமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

தமிழர்களின் மரபில் மார்க்சியத்தின் அறிமுகமும், பெரியாரின் பகுத்தறிவு கால எழுச்சியும் தொடங்குவதற்கு முன்பாக இருந்த பார்ப்பன எதிர்ப்புடன் கூடிய மனிதத்துவ அரசியலின் வேர்களை நாம் தேடினால் அந்த தேடல்கள் நம்மை சித்தர்களிடமே கொண்டு சேர்க்கும். பொதுவாக ஒரு குறியீடாக மட்டுமே சில கடவுளர் பெயர்களை தங்கள் பாடல்களில் பயன்படுத்தினாலும் பெரும்பாலான சித்தர்கள் மனிதத்துவ அரசியலையே முன் நிறுத்தியதை நாம் அறிவோம்.ஆனால் முழுக்க முழுக்க கடவுள் மறுப்பையும் பொருள்முதல்வாத அரசியலையும் அடித்தளமாகக் கொண்டு தனது பாடலை பாடியிருக்கிறார் தங்கவேல் லோகாயத சித்தர்.

பரிணாம வளர்சியின் மூலம் மனிதன் உருவானது பற்றிய அறிவு,பார்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட சாதியம் பற்றிய புரிதல் மற்றும் அவர்களின் வேதங்களை சாடுதல்,இனக்குழு வாழ்கையின் நடுகற்களும் சிறுதெய்வங்களும் பார்ப்பனிய மயப்படுத்தபட்டதை சுட்டிகாட்டுதல்,புத்தர் திருவள்ளுவர்,திருமூலர் எழுத்துக்களில் திரிபுகள் செய்யப்பட்டதை குறித்தல் என்று ஒற்றை பாட்டில் லோகாயத சித்தர் செல்லி செல்லும் விசயங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

புராணங்களை பொய்மையின் குன்று என சொல்லும் இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்து தான்.

திண்ணத்தின் உரை; தெளிந்த அறிவில் கசிந்த வரிகள்; தமிழின் அணி சேர்க்கும் வார்த்தைகள்; எளிய தமிழ் நடை;

இத்தனைக்கும் சொந்தமான பாடல் வரிகள் இதோ....

பொருளும் இருப்பும் இயற்கையும் முதன்மை -நாம்
போற்றும் உணர்வெண்ணம் இரண்டாம் தன்மை
கருதும் நம் ஆத்துமா அறிவின் துடிப்பு - அதனை
கடந்ததுமே கடவுள் எனல் கற்பனை பிடிப்பு

இயற்கையே மானுடர் வாழ்விற்கு வழியாம் -அவ்
இயற்கையே எண்ணத்தின் மேலான வழியாம்
இயற்கையை வென்றதும் மானுடம்தானே -இவ்
இயற்கைக்கு மேல் ஒன்றும் இல்லை என்பேனே

விலங்கிலிருந்து வளர்ந்தவர் நாமே - பின்
விலங்காண்டி ஆனதும் மாந்தர்கள்தாமே
உலகில் இயற்கையில் கற்றனர் பாடம்-மன
ஆறாம் அறிவாலே உற்றனர் மாடம்

உழைப்பே மனிதனின் உன்னத ஆற்றல் -கடும்
உழைப்பினால் வந்ததே உயர்வு முன்னேற்றம்
உழைத்துப் படைத்தது மானிடம் அன்றோ -அட
அதனின் உயர்ந்தது உண்டெனல் நன்றோ

மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கை - தன்
மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை
ஏறிகொண்டிருந்திடும் காலப்பிடியில் - மனிதன்
எத்துனை புதுமைகள் செய்தான் முடிவில்

பொருளே உலகத்தில் சாகா உயிர்கள் - அந்த
பொருளின் இயக்கமே வையப் பயிர்கள்
பொருளே வளர்ச்சியின் தொட்டில் அந்த
பொருளின்றி இல்லை சிறப்புடை தொட்டில்

மனிதனுக்கு மேலொரு தெய்வமும் இல்லை -இந்த
மானுடம் போலொரு மெய்மையும் இல்லை
மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம் -உழைப்பு
மனம் இல்லையேல் அவன் விலங்கான்டி இனம்

செத்தவர்க்காகவே நட்ட நடுகற்கள் - பல
தெய்வங்களாம் இவைநச்சுமிழ் பற்கள்
உய்த்துணரா முன்னம் இயற்க்கையின் போக்கை -அட
உண்டாக்கினர் கடவுளின் நோக்கை

உண்மையை கானும் அறிவில்லா போது - கடவுள்
உருவாகி உலகில் உண்டாயிற்று தீது
உண்மை ஒளி அறியாமையை தக்க - சில
ஞானிகள் தோன்றினர் வைய்யகத்தை காக்க

வந்தேறிகள் சிலர் நாட்டில் புகுந்தார் - இயற்கை
வாழ்வுணராமலே தீமைகள் தந்தார்
சிந்தனை இல்லா நெஞ்சில் சேர்ந்தது தீமை - பல
சிறுதெய்வ கூட்டங்கள் சேர்ந்தன ஆமை

காலங்கள் தோரும் அறிவின் குறைவு - தான்
கண்டதே கொண்டதே கடவுளின் நிறைவு
காலங்கள் மாறிடும் காகங்கள் தோறும் - உள்ள
கடவுள்களின் மத வேரும் பேரும்

அறிவுடை கடவுள்கள் ஒன்றேனும் இல்லை - கடவுள்
அவ்வவ் இனத்தின் அறியாமை எல்லை
செறிவுடை சிந்தனை தெளிந்தநீர் ஊற்று - தான்
தெய்வத்தின் தப்பெண்ணத்திற் கொரு கூற்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்ஞானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

வேதங்கள் ஆவது பேசின் பேச்சு - உள
உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
பூதங்கள் ஐந்துக்கு மேல் இல்லை ஒன்று கூறும்
புராணங்கள் யாவுமே பொய்மையின் குன்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்னானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

சாத்திரம் என்பது சண்டை சரக்கு - அட
சமயங்கள் பகைமை பனைக்கள் இரக்கு
தோத்திர குப்பைகள் மூடர்கள் கூச்சல் - எண்ணத்
தொலையாத தர்க்கங்கள் பொஞ்ஞானக்காய்ச்சல்

செல்லரித்துப்போன வேதத்தின் பாட்டும் -உலகில்
செலவானியாகாத சமயத்தின் கூட்டும்
வல்லமை வாய்ந்த நல் காலத்தின் போக்கால் -மக்கள்
வாழ்வில் சலிப்புறும் ஒடிந்திடும் தேர்க்கால்

வேதாந்தம் என்பது வெறும் வெத்து வேட்டு - வேத
வியாக்கியானம் எல்லாமே பொருந்தாத பூட்டு
நாதாந்த்ம் என்பதும் பொய்புனை சுருட்டு - அட
நமசிவாயம் தன் நலமான புரட்டு

ஆன்மீக வாதம் ஒரு செத்த பிணங்காண் - வேத
ஆகமங்கள் யாவும் புற்று நோயின் ரணங்காண்
ஆன்மா என்பதும் பொய்யின் கற்ப்பனை - வெறும்
ஆத்திகம் என்பது தன்னல விற்ப்பனை

அடுத்த உலகம் என்றொன்றும் இல்லை - கோள்
அடுத்த தல்லால் வேறுலகமும் இல்லை
படுத்தும் நரகமும் சொர்க்கமும் இல்லை - மக்கள்
பண்படா காலத்தில் புகுந்த ஒர் தொல்லை

நன்மையின் ஆற்றலை தந்ததும் உண்மை - மனிதர்
நாளும் உயர்ந்திட செய்ததும் உண்மை
புண்மைகள் தீர்த்தது பகுத்தறிவாட்சி - தனை
புரிந்திட வைப்பதே லோகாதய மாட்சி

புத்தன் திருவள்ளுவர் சீல திருமூலர் - இந்த
பூமியிலே பிறந்து சிறந்த நல்சீலர்
எத்தனை பொய்புனை அவர்களின் நூலில் - பல
எத்தர்கள் இட்டனர் பிழைகளை காலில்

உண்மையும் எண்ணையும் இறுதியில் வெல்லும் - உலகில்
ஓங்கிடும் காற்றினால் பிரியும் நெல்லும் புல்லும்
மண்ணில் உலோகாயதமே உயரும் - கால
மாறுதல் வாய்மையின் பாலை நுகரும்

உழைக்காமல் உண்ணுவோர் தீயபாழ் ஊள்ளம் - இந்த
உலகத்தில் தோற்றிற்று மதமான பள்ளம்
பிழையே பிழைப்பாக சாதிகல் தந்தார் - மக்கள்
பேதத்தில் வாழ்வை சுரண்டி உவந்தார்

இயற்கை வளங்களை கண்டவன் மனிதன் - மக்கள்
ஏற்றத்தில் கவற்றை இணைத்தவன் மனிதன்
செயற்கை வளங்களை செய்தவன் மனிதன் - தனை
செய்யகூட தெரியாதவன் கடவுளா - புனிதன்?

மனிதனே சமூகத்தில் உயிருக்கு நாடி சமய
மதங்கள் வளர்ந்தன கடவுள்கள் கோடி
மனிதனே உலகத்தின் தலைவன் - அவனே
அணைத்துக்கும் மாண்புள்ள புலவன்

நெய்யினால் நெருப்பை அணைக்க எண்ணாதே அறிவு
நியாத்தால் லோகாயதம் மறைக்க எண்ணாதே
பொய்யிது மாயைதான் வாழ்வென்ருரைப்பீர் - உம்
பெண்டாட்டி பிள்ளை பெற்றோரை எங்கொளிபீர்

உலகத்தில் அனைட்துயிர் உருவங்கள் இறக்கும்
உயிர்மட்டும் என்றென்றும் இறவது இருக்கும்
உலக இயற்கையை வெல்வதே வாழ்கை
உலகில் நிலையாமை பேசிடல் தாழ்க்கை

தகுதியின் மிகுதியே வெல்லும் - இந்த
தங்கவேல்லோகாயதரின் சொல்லும் வெல்லும்
மிகுதியாம் பொய்யாதே சமயங்கள் ஒடும் - நாளை
மேன்மையாம் மெய்வாழ்க்கை ஒத்திசை பாடும்நன்றி :-
http://stalinguru.blogspot.com/

17 April, 2010

கடுவெளி சித்தர் _/\_ 3

வளரும் என் வருகை... கடுவெளி சித்தர் பாடல்களுடன்...

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

கடுவெளி சித்தர் பாடல்கள் முற்றும்.

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

11 April, 2010

கடுவெளி சித்தர் _/\_ 2

வளரும் என் வருகை... கடுவெளி சித்தர் பாடல்களுடன்...

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்.... வளர்வேன் இவ்வழியில் யாமே!

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

06 April, 2010

கடுவெளி சித்தர் _/\_ 1

கடுவெளி சித்தர் என்னும் இவர் பாடல்கள் யோக, ஞானங்களை பற்றிய தெளிவுகளை நமக்கு எடுத்துரைக்கிறது. இவரைப்பற்றிய மற்றெந்த குறிப்புகளும் கிடைக்கப்பெறவில்லை.

இதோ பல்லவியுடன் கீழே தருகிறேன்...

பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

( தன் செயலுக்கு காரணமான மனத்திடம் கூறுவதைப் போல நமக்கு உபதேசிக்கிறார். பாவம் செய்யாதிரு, செய்தால் யமன் உன்னை கொண்டாடி அழைத்து செல்வான் என்கிறார்.)

சரணங்கள்
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

மெய்ஞானத்தை விரும்பி அந்த வழியில் முன்னேறு, அதில் வேதாந்தங்கள் கூறும் வெட்ட வெளியான இறையடியை நாடி இன்புறு, அஞ்ஞான மார்க்கத்தை விட்டு விலகு உன்னை நாடி வருபவர்களுக்கு ஆனந்தம் (இறையை நாடும்) கொள்வதற்கான வழியை கூறு.

வருவேன் இவர் பாடல்களுடன்.... வளர்வேன் இவ்வழியில் யாமே!

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!