குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

27 October, 2009

காளா(லா)ங்கி நாதர்:-

காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் உண்டு. அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள்.


இல்லையில்லை, அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்... அதாவது காளம் என்றால் கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர். இதுவும் பிழை... எப்பொழுது ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர்.


அப்படிப் பார்த்தால் காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள். உண்மையில், அவர் பெயர்க்காரணம் துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர் கூறவில்லை.


காளாங்கி நாதர், தனக்கான ஜீவன் விடுதலை குறித்துதான் பெரிதும் சிந்தித்தார். ஊரையும் உலகையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கே நமக்கு இந்த ஜென்மம் என்றெல்லாம் அவர் எண்ணவே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை கடைத்தேற்றிக் கொண்டாலே போதும்; சமுதாயம் தானாக மாறிவிடும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் போலவும் காலாங்கிநாதர் விளங்குகிறார் எனலாம். இவரது குருநாதர், திருமூலர். சீடனை பல விஷயங்களில் கடைத்தேற்றியவர். வாசி ஏற்றத்தில் காலாங்கி நாதரை விஞ்சிய சித்தர் இல்லை எனலாம். அந்த அளவுக்கு வாசி ஏற்றத்தில் குருவை விஞ்சிய சீடனாக விளங்கினர்.


காலாங்கிநாதர், பேச்சைவிட கேட்டல் பெரிதென்று எண்ணியிருந்தார். எனவே அவர் பற்பல சித்தர்களது உபதேசங்களைத் தேடி அலைந்தார். பலரது உபதேசங்கள் அவரைத் தேடியே வந்தன. மலை முகடுகளில் சித்த புருஷர்களும் வசித்து வந்தனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம், காலாங்கிநாதருக்கு கிட்டியது. அதற்கு முன்பே காலாங்கிநாதர் காயகற்பங்கள் தயாரிப்பதில் நிபுணராக விளங்கினார். அதேபோல குளிகைகள் செய்வதிலும் வல்லவராக இருந்தார்.


உயிருள்ள அனைத்தும் உள்வெளித் தொடர்பு இயக்கத்தால் ஒரு நிலையில் இருக்காது. அதை நடுநிலைப்படுத்திவிட்டால் நீராக இருந்தால் மிதக்கலாம். காற்றாக இருந்தால் பறக்கலாம். உயிருள்ள மனிதன், சுவாசச் செயல்பாடு காரணமாக சதா புறத் தொடர்புடன் இருக்கிறான். இறந்தபின் அந்தத் தொடர்பு அற்று விடுகிறது. இதனால், எத்தனை திடமானதாக அவன் உடல் இருந்தாலும், மிதக்கிறது. அதற்கு முன்வரை திடமற்றதாகவே இருந்தாலும் மூழ்கித்தான் போகிறது. பறவைகள் பறப்பதன் பின்னணியிலும் இப்படி ஒரு நிலைப்பாடு இருந்து, அதுவே பறக்கத் துணை செய்கிறது.


நுட்பமான சிந்தனைகளால் இவைகளை அறிந்த காலாங்கி நாதர், குளிகைகளை தயாரித்து அதை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் புறத்தில் மூச்சடக்கி, அகத்துக்குள் குளிகை மூலமாகவே பிராண சக்தியைத் தந்து, உடம்பை புறத்தில் இருந்து பிரித்து, மிதத்தல் பறத்தல் போன்ற செயல்பாடுகளை சாதாரணமாக செய்பவராக விளங்கினார். அவரது குளிகைகளும் காற்றுக்குச் சமமான பிராண சக்தியை அளிப்பதாக இருந்தன. இதனால், சித்தர்கள் பலர் காலாங்கிநாதரை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்து வியந்தனர். மலை உச்சியில் இருந்த சித்தர்கள், காலாங்கிநாதரின் குளிகை ஞானத்தை அவர் வாயாலேயே கேட்டும் அறிந்தனர். அப்போது, ‘தானறியும் அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கவே’ என்கிற ஒரு தர்ம உணர்வை அவருக்குள் விதைத்தனர். ‘‘நீ அறிந்ததெல்லாமும் கூட பிறர் கொடுத்த ஞானத்தால்தானே?’’ என்று கேட்டு, அவரைக் கிளறிவிட்டனர்.


அப்படியே மலைத் தலங்கள் ஏன் சித்தர்கள் வாழக் காரணமாகிறது என்பதையும் விளக்கினார். ‘பூமியில், தட்டையான நிலப்பரப்பில் திக்குகள் தெளிவாகத் தோன்றி ஒன்பது கிரக சக்திகளும் அந்த நிலப்பரப்பில் தங்களுக்குரிய பாகங்களில் நிலைபெற்ற பிறகே, அந்த மண்ணை, பின் அந்த மண்ணுக்குரியவனை ஆட்சி செய்கின்றன. மலையகத்தில் இப்படித் தட்டையான நிலப்பரப்பு இல்லை. மலை என்றாலே கூர்மையானது என்றும் ஒருபொருள் உண்டு. காற்று கூட இங்கே குளிர்ந்து விடுகிறது. இயக்க சக்தியான வெப்பமும் முழுத் திறனோடு இருப்பதில்லை. நீரும் நிலை பெறுவதில்லை... எவ்வளவு மழை பெய்தாலும் கீழே ஓடி விடுகிறது. மொத்தத்தில், பஞ்ச பூதங்கள் இங்கே தங்கள் இயல்புக்கு மாறாகவே விளங்குகின்றன.

அடுத்து, கிரகங்கள் காலூன்றி அமர்ந்து சக்தி கொள்ள, சரிவான பரப்பில் இடமில்லை. இதனால், உலகப்பற்றை கைவிட்டு பஞ்ச பூத சக்திகளின் அதிவலுவான பிடியில் இருந்து தப்பித்து, தன் இச்சைப்படி சுதந்திரமாக செயல்பட, மலையகங்கள் துணை செய்வதை, ஓர் உபதேசமாகவே காலாங்கிநாதர் பெற்றார். எனவேதான் சிங்கம், புலி போன்ற வலிய மிருகங்கள் கானகத்தை, குறிப்பாக மலைக் கானகத்தை வலிமையானதாகக் கருதுகின்றன. தங்களுக்கு அங்கே பாதுகாப்பு இருப்பதாகவும் எண்ணுகின்றன. மலைச் சிறப்பை உணர்ந்த காலாங்கிநாதர், அங்கே புலிவடிவில் திரிந்த சித்தர் ஒருவரை இனம் கண்டு கொண்டார். ஒரு தவசி, மான் தோலில் அமர்ந்து தவம் செய்கிறார் என்றால், அவர் புலிபோல ஒரு சக்திக்குள் அடங்கி மோட்சம் பெற எண்ணுகிறார் என்பது நுட்பப் பொருள். அதே சமயம், புலித்தோல்மேல் அமர்ந்து ஒருவர் தவம் செய்தால், மற்ற அனைத்தையும் அடக்கி அவர் மோட்சம் செல்லத் தயாராகிறார் என்பதே நுட்பமான உட்பொருளாகும். பிற காரணங்கள், காலத்தால் பலரது எண்ண நுட்பங்களால் உருவானவைகளாக இருக்கலாம்.


காலாங்கி நாதரும், அடக்கி ஆளும் புலியானது அடங்கிய நிலையில் சாதுவாக இருப்பதை முதலில் உணர்ந்தார். அந்த மாறுபட்ட இயல்பை வைத்தே, அவர், அந்தப் புலி, தோற்றத்தில் தான் புலி; அதன் உயிர் அம்சம் வேறாக இருக்கலாம் என்பதை அறிந்து, துணிந்து அதன் முன்சென்று நின்றார். அந்தத் துணிவைக் கண்ட புலியும் சித்த புருஷராகத் தோன்றி, காலாங்கிநாதரின் பட்டறிவைப் பாராட்டினார். வாழ்வில் பல உண்மைகள் இப்படித்தான், இயல்புக்கு மாறுபட்ட இடத்தில், சில காரணங்களுக்காக ஒளிந்துள்ளன. அவைகளை கண்டறியத் தெரிந்தவனே ஞானி என்று உபதேசித்தார். அவர் கருத்து, காலாங்கி நாதரை புடம் போட்டது. இந்த உலக வாழ்க்கையை ஒருவார்த்தையில் கூறுவதானால், ‘மாயை’ என்பார்கள். மாயை என்றால், ‘இருந்தும் இல்லாமல் இருப்பது’ என்பதே பொருள். அடுத்து, நிலைப்பாடுகளில் மாறிக் கொண்டே இருக்கும். கடலோரமாய் அலைகள் எழும்புகின்றன. அந்த அலையின் ஒரு பாகம் உயர்ந்திருக்கும். மறுபாகம் தாழ்ந்திருக்கும். அதே மறுபாகம் அடுத்து உயர, உயர்ந்த பாகம் தாழும் இதில் உயர்வு தாழ்வை பார்க்கவே முடியாது. இரண்டும் சேர்ந்ததே அலை! அந்த அலையை உருவாக்கும் நீண்ட கடல் வெளியோ எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமனமாக நீண்டிருக்கும்.


எங்கே நிலமானது நீரை விட உயர்ந்து செல்ல எண்ணுகிறதோ, அங்கே அந்த விளிம்பில், ஓர் அலை பாயும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆன்மாவும் வாழ்வில் மூழ்கிய இடத்தில் இருந்து உயர்ந்து எழுந்து, மூழ்கியதை தவிர்க்க நினைக்கும் போது அங்கே ஒரு பெரும் போராட்டம் எழுகிறது. ஒரு வகையில் அந்தப் போராட்டம்தான், இயக்கம். அங்கே இருக்கும்வரை இயக்கம்தான். அங்கிருந்து நீருக்குள்ளோ, நிலத்துக்குள்ளோ நாம்போய் விட்டால், அங்கே போராட்டம் இல்லை. அலைகடல் நமக்கு மறைமுகமாக போதிக்கும் பாடம் இது.


சிந்திக்க சிந்திக்க இதுபோல வாழ்க்கை அம்சங்களில் நுட்பமான உட்பொருள் பொதிந்து கிடப்பதைதான் புலியாய் இருந்த சித்தரும், காலாங்கி நாதருக்கு விளங்க வைத்தார். அது, அவரது அகக் கண்களை நன்றாகவே திறந்துவிட்டது. பேசாமல் இருப்பதையும் கேட்பதையே பெரிதாகவும் கருதியவர், பின்னர், தான் அறிந்ததை பலருக்கும் உபதேசிக்கலானார். இவரால் பலர், நான் யார்? என்கிற கேள்வியில் விழுந்தனர். காலாங்கிநாதரோ நுட்பமான உட்பொருளை விளங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். ஒரு மரமானது இரை தேடி எங்கும் செல்வதில்லை. அது இருக்கும் இடத்திலேயே, அதற்கு உணவை பஞ்ச பூதங்கள் மூலம் இறைவன் தந்துவிடுகிறான்.


அதுவும், நின்ற இடத்திலேயே, காய் கனிகளை பதிலுக்கு வழங்குகிறது. சித்தனும் எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் அவன் தனக்கான உணவை, காற்று _ அதில் உள்ள நீர் _ தன் மேல் படும் ஒளி _ அதன் உஷ்ணம் மூலம் பெற முடியும் என்று நுட்பமாய் உணர்ந்தார். இதனால், பல நூறாண்டுகள் அமர்ந்த இடத்தில் தவம் செய்வது என்பது இவரது வாடிக்கையாகி விட்டது. திருமூலரே, இப்படி அமர்வதில் உள்ள சிறப்பு, நடப்பதிலும் உள்ளது என்பதை இவருக்குப் புரியவைத்தவர். அதன்பிறகே இவர் தேச சஞ்சாரியானார். அந்த சஞ்சாரங்களில், ஆமைக்குள் அடங்கிக் கிடந்த சித்தர் முதல், பட்சி ரூபமாய் திரிந்த சித்த புருஷர் வரை பலரை தரிசனம் செய்தார். அவர்கள் எதனால் மானிட உருவம் விட்டு அதுபோன்ற உயிர்களாக வடிவம் கொண்டார்கள் என்பதையும் அறிந்தார். இப்படி அவர் தரிசித்தவர்கள் பலர்.
அவர்கள் சித்தர்கள் ஆவர். இப்படி பல அம்சங்களிலே சித்த மூர்த்திகள் திகழ்ந்தனர். அவர்களையெல்லாம் தரிசனம் செய்தார். அதேபோல, அஷ்டமாசித்திகளை தங்களுக்குள் அடக்கிக்கொண்ட பல சித்தர்களை தரிசனம் செய்தார்.


அஷ்டமாசித்து எட்டும், தங்களின் பிரதி பிம்பத்துடன் கூடிப் பெருகியே 8 X 8=64 என்கிற கலைகள் ஆனது. இந்தக் கலைகளை நோக்கினால், அவைகளில் அஷ்டமாசித்து ஒளிந்திருக்கும். இந்தக் கலைகளும் தங்களின் பிரதி பிம்பங்களால் அணு அணுவாகச் சிதறி அறுபத்து நான்கு கோடியாயிற்று. இது சப்த லோகங்களில் பரவியதால், நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியாயிற்று. இதில் ஒன்றைத்தான் கோடானு கோடி மனிதர்களாகிய நாம் நமக்கெனப் பெற்றுள்ளோம். ஒருவருக்கு தமிழாற்றல், ஒருவரிடம் எழுத்தாற்றல், ஒருவரிடம் பேச்சாற்றல் என்று அந்தக் கோடிகளின் தெரிப்புதான் நம் உயிரணுவுக்குள் புதைந்து நமக்கான வலிமையாக வெளிப்பட்டு நம்மை வழிநடத்துகிறது.


நமக்குள் இருக்கும் ஓர் அணுவுக்கே நம் வாழ்வை ஒளிப்படுத்தும் ஆற்றல் உண்டென்றால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியின் மூலமான அஷ்டமா சக்திக்கு எவ்வளவு சக்தி இருக்கும்! கற்பனை செய்யும் சக்தி கூட நமது மூளைக்குக் கிடையாது. ஆனால், காலாங்கிநாதர் இப்படிப் பல நுட்பங்களை விளங்கிக் கொண்டவர். இறுதியாக, நகரங்களுள் சிறந்த காஞ்சியம்பதியில் அடங்கினார்.

நான் தெரிந்துகொண்டவரை தெரிய வைக்க முயற்சி செய்துள்ளேன்.

படித்தவர்கள் கருத்து சொல்லிட்டு போங்க.

09 September, 2009

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்:

இடைக்காடு என்னும் ஊரினர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.

சங்கபுலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இவர் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலிய சங்க நூற்களில் உள்ளன. திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் உள்ளது. திருவிளையாடல் புராணத்திலே இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஊசிமுறி என்றொரு நூல் இவரால் பாடபட்டதாகப் பழைய உரைகளினால் அறியக் கிடக்கிறது. ஆனால் சங்ககால புலவரும் இடைக்காட்டுச் சித்தரும் வேறு வேறானவர்.

இவர் கொங்கணரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கி.பி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர்.
"தாந் திமிதிமி தந்தக் கோனாரே
தீந் திமிதிமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே"

எனப் பாடுவோரும் கேட்போரும் குதித்தாடும் இந்தப் பாடல்கள் ஆசை என்னும் பசுவையும் சினம் என்னும் விஷப்பாம்பையும் அடக்கி விட்டால் முத்தி வாய்த்ததென்று எண்ணடா தாண்டவக்கோனே என்று கூறும் சிறப்புடையன.

இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.

ஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. இதனை முன்னரே எனது வலைப்பதிவில் தொகுத்து வழங்கி இருக்கிறேன்.அதன் சுட்டி கீழே.

இவர் இடைக்காடர் :


பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்
பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே
சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டும் தாண்டவக்கோனே
அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே
செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே

பலரோடு கிளத்தல்


கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.
மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.
காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.
மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
தூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை
நேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே.
சராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்
பராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே.
மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.
பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே.

அறிவோடு கிளத்தல்

எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே.
கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே.
விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.
மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.
ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.
நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.
கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.
வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. 75
அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. 76

சித்தத்தொடு கிளத்தல்


அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர
மானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர
மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற!
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற!
தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற!
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற!
மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!
எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற!

பால் கறத்தல்

சாவாது இருந்திட பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திட பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார உண்டிடப் பால்கற.
நாறா திருந்திடும் பால்கற
நாளும் இருந்திடப் பால்கற
மாறாது ஒழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற.
உலகம் வெறுத்திடும் பால்கற - மிக
ஒக்காளம் ஆகிய பால்கற
கலசத்தினுள் விழப் பால்கற - நிறை
கண்டத்தின் உள்விழப் பால்கற.
ஏப்பம் விடாமலே பால்கற - வரும்
ஏமன் விலக்கவே பால்கற
தீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர
சிவத்துடன் சாரவே பால்கற.
அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
அண்டத்தில் ஊறிடும் பால்கற
விண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை
வேதனை கெடவே பால்கற.

கிடை கட்டுதல்

இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே.
சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார்.
அகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே.
ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே! - உன்
உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே.
மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக
முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே.
இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்
இல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே.
உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே! - உனக்
குள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே.
முக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே.
கன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே.
காரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
கைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.
பிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி
பேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே.
சிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய்
சித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே.
விண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்
மெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே.
கண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக்
கண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே.
சூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி
சூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே.
நித்தியமானது நேர்படி லேநிலை கோனே! - என்றும்
நிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே.
சத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை
சாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே.
கூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர
மூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே.

படிச்சவங்க எல்லாம் கருத்தது சொல்லி கனியது செய்வீர்.

30 August, 2009

ஔவையாரின் புலமை:-

தமிழ் மரபுகளில் பெண்களுக்கென்று ஒரு இடம் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. அந்த வகையில் ஔவையார் என்ற இந்த பாட்டியை குழந்தைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஔவையார் ஒரு மிகச்சிறந்த புலவர். இவர் தமிழ்நாடு முழுவதும் நடந்தே சுற்றி திரிந்த
ஒரு ஞானப்பெண். இப்போது இருக்கும் தமிழ்நாடு அந்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அரசாட்சியின் கீழ் இருந்தது. அப்படி சுற்றித்திரிந்த காலத்தே பாண்டிய மன்னன் அரசவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்:

ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.

அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.

"போ வெளியே! கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை!"

அவர் தமிழ் பழம்! ஔவையார் ஒன்னும் சொல்லலை. "நல்லது"ன்னார்.

மாலை நேரத்திலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு "அம்மா! பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது?"

"வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே?"

"நீங்கதானே எங்களுக்கெல்லாம் தலைமை! தமிழ்த் தாய்!" என்று புலவர்கள் கேட்டார்கள்.

ஔவையார் சொன்னார் "உண்டேன்! உண்டேன்!"

என்ன உணவு உட்கொண்டீர்கள்?

சொல்வது என்ன? பாடுகிறேன் கேள்.

பாடல் :


வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து
உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.

விளக்கம் :

வண் தமிழை கற்று தேர்ந்த வழுதி திருமணத்திற்கு சென்ற நான் அங்கே நிறைய உண்டேன் அதை சொல்கிறேன் கேள்:
அவனை நாடி உணவருந்தி வரலாம் என்று சென்ற நான் மக்களாலும், என்னை யார் என தெரியாத காவலர்களாலும் நெருக்கப்பட்டேன்(முன்டியடித்தல்) .அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டபோது நானும் அந்த தள்ளளுக்கு உள்ளாக்கப்பட்டேன். வெகு நேரம் நடந்து வந்த காரணத்தினால் நீண்ட நேர பசியால் உடலும், மனமும் சுருக்கம் பெற்றேன்.இவ்வளவிற்கும் ஆளுண்ட நான் சோறு உண்ணவில்லை அப்பா.

"மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்"ன்னாரு.

"நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்!"

புலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள்."ஔவையாருக்கே இந்த கதியா"ன்னு.

படிச்சவங்க எல்லாம் மறந்துடாம உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

21 August, 2009

பூமித்தாயின் புலம்பல் :


எழாமல் இருக்கும் என்னை -
அனைவரும் மிதித்தனர் !
அமைதியாய் இருக்கும் என்னை -
ஆழமாய் தோண்டினர்!


அந்தோ பரிதாபம், நான் அழுதும்
என்னை விடவில்லை அவர்கள்,- எதற்காக ?
என் விழி கண்ணீர் தான் அவர்களுக்கு
குடி தண்ணீராம்!


தாய் கூட பொறுக்க மாட்டாள் !
தொடர்ந்து இவ்வளவு இன்னலை
சகிக்கவும் மாட்டாள். -என்னிடம்
கண்டெடுத்த புதயலோ ஏராளம்.


மனிதா எனக்கு நீ கடன் பட்டவன்,
எப்படி தெரியுமா -உமக்கு ?
என்னிடம் எல்லாம் பெற்று கொண்டு
எனக்கு எதும் செய்யாததே!


செய்த பாவம் எல்லாம் -
செயற்கையை நாடியதே !
அந்த செயல் தான் குஜராத்தை
குப்புற விழ வைத்தது.


மதிகெட்ட மனிதர்களே - நான்
மறந்து மன்னித்துவிட்டேன்,
உங்களது கருமங்களை,
இனியும் தாமதிக்கா
தீர்.


உறிஞ்சிய நீரெல்லாம்
உள்ளகத்தே இல்லாமல்
வருந்தி நான் வாழ்கிறேன்
நட்டு விடுங்கள் மரங்களை.
-செய்து விடுங்கள் அறங்களை.



16 August, 2009

பதஞ்சலி முனிவர் வரலாறு 2

அடுத்த கணம்.... ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.


முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.

“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.

படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.

பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.


வரலாறு முற்றிற்று.

13 August, 2009

பதஞ்சலி முனிவர் வரலாறு 1

படம் : பதஞ்சலி முனிவர்



உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார்.


இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் (இன்னமும் எழுதப்படவில்லை)" பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்தது தமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும்.


இவர்பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.

தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றியவியாகரண சூத்திரம்என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.

இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர்வியாகரண சூத்திரத்தைஉபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.

குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்என்றார் ஒரு சீடர்.

உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்என்றார்.

குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.

பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்என்றார் பதஞ்சலி.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ....


01 August, 2009

கொங்கணர் :

போகரின் சிஷ்யர்களுள் வித்தியாசமானவர், கொங்கணர்

கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர். அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள். இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும். கொங்கணர் குடும்பத்தில், சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது. கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது... திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள்.


அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க... சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது. கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது. இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது.

போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார்.

‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர்.

‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’

‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’

‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது..... ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது....’’

‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’

‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்...’’

‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா...? வேறு வழிகள் இல்லையா?’’

‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி... தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்... தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...!’’

என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது. போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது.

‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்...’’ _ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது. எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன.

அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...! ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம். உதாரணத்திற்கு, விசுவாமித்திரர் ஒருவர் போதுமே...!

இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர், தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது... யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார்.

இப்படி கொங்கணர் அப்படியும் இப்படியுமாக தடுமாறினாலும், இறுதியில் தவத்தின் பெருமையை உணர்ந்து, பெரும் தவசியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். ‘நான் ஒரு தவசியே இல்லை.... நான் தவசியாக வேண்டுமானால் என்னையே மறக்க வேண்டும். எனக்கு என்னை நன்றாகத் தெரிகிறது எனும்போது, நான் எப்படி தவசியாவது...? ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும்!’ என்று அவர் தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது. மொத்தத்தில், கொங்கணர் வாழ்க்கை என்பது, மானுடர்களுக்கு தவத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு வாழ்க்கையாக ஆகிவிட்டது.

இவர் வாழ்வில், பல ரசமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது. அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்... அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு.... ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம், கோபமும் கர்வமும்... மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும். துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே, தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். ‘படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோ’ என்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்றார். ‘நான்’ என்பது நீங்கி மமதை விலகிடும்போது, எல்லாமே வசப்படுகிறது. அல்லாதவரையில், எத்தனை பெரிய தவசியாக இருந்தாலும், மாயை அவர்களை விடுவதில்லை. கொங்கணரையும் அது அவ்வப்போது ஆட்டிவைத்து தலையில் குட்டியது.

கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. அப்போது வள்ளுவருக்கு வாசுகி பணிவிடை செய்தபடி இருந்தாள்.


கற்புக்கரசிகளான நளாயினி, கண்ணகி, சீதை போன்றவர்களுக்கு ஒரு மாற்றுக் கூட குறையாதவள், வாசுகி. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது. காரணம், அவளது பணிவிடை. இது புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்...’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்க,

ஆடிப்போய் விட்டது கொங்கணனின் தேகம். வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது! அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது... ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா?’’ என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள். காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார்.

ஒருமுறை, சிவலிங்கம் ஒன்றின்மேல் பூப்போட்டு வணங்குவது போல குளிகையைப் போட்டு வணங்கினார். அந்தக் குளிகை பொடிந்து பூசிக் கொள்ளும் நீறாகாமல் அப்படியே ஆவியாகி விட்டது. அது, குளிகைக்கு நேர்மாறான செயல்! அங்கே அவ்வாறு ஆகவும், இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புவதைப் புரிந்து கொண்டு, அங்கேயே தவம் செய்து, ‘குளிகையை மலரினும் மேலாகக் கருதி அதை லிங்கத்தின் மேல் வைத்தது தவறு’ என்பதை உணர்ந்தார். அப்படி உணர்ந்த நொடியில் அக்குளிகை திரும்ப அவருக்குக் கிட்டியது. சில குளிகைகள், வைக்கப்படும் இடத்தில் கல்லோ மண்ணோ இருந்தால், அதை சாம்பலாக்கி விடும். அவ்வளவு உஷ்ணமானவை. லிங்கத்தையே கூட தன் குளிகை சாம்பலாக்கும் என்று காட்ட கொங்கணர் முயன்றார். ஆனால், தோற்றார் என்றும் கூறுவர். கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது.

அபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும்