குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

07 February, 2010

குதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2

குதம்பை சித்தரின் பாடல்களுடன்....

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 17

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 18

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 19

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 20

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 21

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 22

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 24

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 30

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 32

குதம்பை சித்தரின் வரலாறு முற்றிற்று.

மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

2 comments:

பித்தனின் வாக்கு said...

good and valuble poems. thanks

தேவன் said...

/// பித்தனின் வாக்கு said... ///

Thank U Sir.