குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

31 December, 2009

ஒளவையின் சிலேடை :


ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்பதாகும் அவ்வரிகள்.

இதையும் சேர்த்து முழுப்பாடலாக,

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "

என்பதாகும்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

தமிழில் "" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் ரி எருமை. எமனேறும் ரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு பார்த்தீர்களா !!

27 December, 2009

[ பட்டினத்தார் : 4]

இதற்கு முன் பட்டினத்தாரின் அருட் புலம்பலை பார்த்தோம், இன்னமும் நடை போடுவோம் அவருடன்..


யார் நாம் ! என்ற கேள்வியை கேட்காத மனிதர் இல்லை, கேட்டாலும் விடையும் இல்லை. ஆனால் நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் பிறந்து, வளர்ந்து, ஆளாகி தன்னை அறிய துறவறம் போகின்றனர். துறவறம் சென்றவர்கள், மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை மூன்றையும் கொண்டவர்களாக இருந்தாலும், துறவறத்திற்கு பின்பு இவைகளின் நிலையாமையை உணர்ந்து அவைகளை துறக்கின்றனர். எல்லோர்க்கும் பயன்பட நமக்கு சில கருத்துக்களை சொல்கின்றனர். அப்படிப்பட்டவைகளை நாம் பற்றி பிடித்துக்கொண்டு அவர்களின் வழியில் செல்ல நல்லோர்களின் அருளும், நாயகனின் தயவும் கிடைக்கும்.


பட்டினத்தாரின் பாடல்களில் இதோ ஒரு பாடல்..


பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்;

தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;

பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பேருக்கும்;

உணர்ந்தன மறக்கும்; மறந்தன வுணரும்;

புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்;

உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்


பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.


தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். (இஃது சூரியனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)


பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பேருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள். (இஃது சந்திரனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)


உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார்.



மனம் உணருமா? உணர வேண்டும் !



பட்டினத்தார் வரலாறு முற்றிற்று ..




மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

23 December, 2009

[ பட்டினத்தார் : 3]


பத்திராகிரியார் புலம்பலைத்தான் பெரும்பாலும் படித்திருப்பீர்கள் இதோ பட்டினத்தாரின் அருட்புலம்பலை படியுங்கள்.

அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு

கன்னிவனநாதா, கன்னிவனநாதா

மூலமறியேன், முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா; 1

அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற் கெட்டனடா !
பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா. 2

தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகப்பட்டனடா 3

மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா. 4

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. 5

மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே யென்குதே. 6

வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே
சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே. 7

மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே
சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே. 8

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

கட்டுவர்க்கத் தாசை கழலேனே யென்குதே
செட்டுதலில் ஆசை சிதையேனே யென்குதே. 9

மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே
சோற்றுக் குழியுமின்னந் தூரேனே யென்குதே. 10

ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறதுந் தேறேனே யென்குதே. 11

காமக் குரோதம் கடக்கேனே யென்குதே
நாமே அரசென்று நாடோறு மெண்ணுதே. 12

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச்சு மின்னுமான் கழலேனே யென்குதே. 13

நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே
ஆர்க்கு முயராசை அழியேனே யென்குதே. 14

கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணுந் திரமா யிருப்போமென் றெண்ணுதே. 15

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே
தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே னென்குதே. 16

நரகக் குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
உரகப் படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. 17

குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே. 18

மாதருருக் கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா. 19

கந்தனை யீன்றருளுங் கன்னிவன நாதா!
எந்த விதத்தினா னேறிப் படருவண்டா. 20

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? 21

கீரியாய்க் கிடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ? 22

பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ? 23

அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? 24

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? 25

நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேயுண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? 26

ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பு லிளைத்தநாள் போதாதோ? 27

பட்ட களைப்பபும் பரிதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டே னென்றுகேளாதும் போதாதோ? 28

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

நில்லாமைக்கே யழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ? 29

காமன் கணையாற் கடைப்பட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் நாலுமிடியுண்டல் போதாதோ? 30

நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன்துளபத் தான்நேமி தேக்குண்டல் போதாதோ? 31

உருத்திரனார் சங்காரத் துற்றநாள் போதாதோ?
வருத்த மறிந்தையிலை, வாவென் றழைத்தையிலை 32

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை,
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை; 33

பாச மெரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை;
பூசிய நீற்றைப் புனையென் றளித்தையிலை. 34

அடிமையென்று சொன்னையிலை, அக்கமணி தந்தையிலை;
விடுமுலகம் நோக்கி யுன்றன்வேட மளித்தையிலை. 35

உன்னி லழைத்தையிலை, ஒன்றாக்கிக் கொண்டையிலை,
நின்னடியார் கூட்டத்தில் நீயழைத்து வைத்தையிலை; 36

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

ஓங்கு பரத்துள் ஒளித்தவடி யார்க்கடியான்
ஈங்கோ ரடியா னெமக்கென்று உரைத்தையிலை; 37

நாமந் தரித்தையிலை, நானொழிய நின்றையிலை,
சேம வருளி லெனைச்சிந்தித் தழைத்தையிலை. 38

முத்தி யளித்தையிலை; மோனங் கொடுத்தையிலை;
சித்தி யளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை; 39

தவிர்ப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாமென் னாசை தவிர்த்தையிலை; 40

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

நின்ற நிலையில் நிறுத்தியெனை வைத்தையிலை;
துன்றுங் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை; 41

கட்டவுல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்லென்றுநீ நிறுத்திக் கொண்டையிலை; 42

கடைக்கண் ணருள்தாடா, கன்னிவன நாதா!
கெடுக்கு மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா! 43

காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடந்தான் தீரேனோ! 44

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

உன்னைத் துதியேனோ, ஊர்நாடி வாரேனோ,
பொன்னடியைப் பாரேனோ, பூரித்து நில்லேனோ ? 45

ஓங்காரப் பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ ?
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ ! 46

வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ !
சூரர்கண்டி போற்றுமந்தச் சுந்தரத்தைப் பாரேனோ ! 47

இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ !
விடையி லெழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ ! 48

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ !
மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ ! 49

மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ;
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ ! 50

கண்டங் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ !
தொண்டர் குழுவினின்ற தோற்றமதைப் பாரேனோ ! 51

அருள்பழுத்த மாமதியா மானனத்தைப் பாரேனோ !
திருநயனச் சடையளிருஞ் செழுங்கொழுமை பாரேனோ ! 52

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

செங்குழியின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ ?
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ ! 53

முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ !
அல்லார் புருவத் தழகுதனைப் பாரேனோ ! 54

மகரங் கிடந்தொளிரும் வள்ளைதனைப் பாரேனோ !
சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ ! 55

கங்கையோடு திங்கள் நின்றகாட்சிதனைப் பாரேனோ !
பொங்கு அரவைத்தான்சடையிற் பூண்டவிதம் பாரேனோ 56

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ ;
எருக்கறுகு ஊமத்தையணி யேகாந்தம் பாரேனோ ! 57

கொக்கிறகுக் கூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ !
அக்கினியை யேந்திநின்ற ஆனந்தம் பாரேனோ ! 58

தூக்கிய காலுந் துடியிடையும் பாரேனோ !
தாக்கு முயலகன் தாண்டவத்தைப் பாரேனோ ! 59

வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ !
ஆசை அளிக்கு மபயகரம் பாரேனோ ! 60

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம்வளர் பேரழகைப் பாரேனோ ! 61

சுந்தர நீற்றின் சொகுகதனைப் பாரேனோ !
சந்திர சேகரனாய்த் தயவுசெய்தல் பாரேனோ ! 62

கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினிப் பாரேடா !
பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ ? 63

நற்பருவ மாக்குமந்த நாளெனக்குக் கிட்டாதோ ?
எப்பருவ முங்சுழன்ற ஏகாந்தங் கிட்டாதோ ? 64

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

வாக்கிறது நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்குமந்தத் தற்சுத்தி கிட்டாதோ ? 65

வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ ?
சிந்தையையுந் தீர்க்குமந்தத் தேறலது கிட்டாதோ ? 66

ஆன அடியார்க் கடிமைகொளக் கிட்டாதோ ?
ஊனமற வென்னை வுணர்த்துவித்தல் கிட்டாதோ ? 67

என்னென்று சொல்லுவண்டா? என்குருவே? கேளேடா !
பின்னை எனக்குநீ யல்லாமற் பிறிதிலையே. 68

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ?
சொன்ன விசாரந் தொலைந்தவிடங் கிட்டாதோ? 69

உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ? 70

ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ?
செப்புதற்கு மெட்டா தெளிந்தவிடங் கிட்டாதோ? 71

வாக்கு மனாதீத வசோகசத்திற் செல்லவெனைத்
தாக்கு மருட்குருவே, நின்தாளிணைக்கே யான்போற்றி. 72

கவனமுடன் படியுங்கள் கருத்துடன் [நடைபோடுவோம்.]......

20 December, 2009

[ பட்டினத்தார் : 2]

பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்

சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

  • கோயில் நான்மணி மாலை
  • திருக்கழுமலை முமணிக்கோவை
  • திருவிடைமருதூர் திருவந்தாதி
  • திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.

எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி

நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு

தம்மதென்று தாமிருக்கும் தாம்


மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து

வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்

பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை

பித்தானால் என்செய்வாள் பின்


உண்டென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்

அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்

நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி

என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே


நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்

புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்


காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே

திருவொற்றியூரில் சமாதி

தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல்யாரும் துறக்கை அரிது” என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர் பட்டினத்தார்.


மேலும் விவரங்களுடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]


17 December, 2009

[ பட்டினத்தார் : 1]

சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார்.

அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார்.

அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என அதில் எழுதியிருப்பதைக் கண்டு, அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு, அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை "சேந்தனிடம்" ஒப்படைத்து, "இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு" எனச் சொல்லி துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார்.

அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர். சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.


மேலும் விவரங்களுடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

03 December, 2009

-:பாம்பாட்டி சித்தர்:- _/\_ 3

[தொடர்ந்த நடை...]

பொதுவாக சித்தர்கள் எல்லோரும் ஒத்த கருத்து உள்ளவராகவும், பக்தி மார்க்கத்தில் சில சடங்குகளை புறக்கனிப்பவராகவும் உள்ளனர். நான் ஏற்கனவே எழுதி இருந்த சிவவாக்கியாரும் ஒரு பாடலில் கடுமையாக சிலை வழிபாட்டை சாடியிருந்தார் (நட்ட கல்லை தெய்வம் என்று...). இதோ பாம்பாட்டி சித்தரும் தனது பாடலில் சிலை வழிபாட்டை சாடுகிறார்.

இதோ அந்த பாடல்....

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடர்க்கென்று ஆடாய் பாம்பே


உளியை வைத்து செய்த கல்லாலான சிலையில் உள்ளதா உணர்ச்சி, உலகத்தில் மூடர்களாய் இருப்பவர்களுக்கு உள்ளதா உணர்ச்சி, (துருப்பிடித்ததை போன்ற) புளியிட்ட செம்பின் குற்றம் நீங்குமோ, இவர்கள் இருக்கும் அஞ்ஞானம் ஞானத்தை நோக்கி இவர்களை போக விடாது என்று ஆடு பாம்பே என்கிறார்.

மேலும் இவரது பாடல்கள் ஆன்மிக பாதையில் பயணிப்பவர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

உண்மையில் இதை படித்த போது எனக்கு ஏற்பெற்ற உணர்வு மூன்று நாள் பசிக்காரன் அறுசுவை உணவை கண்டதும் ஏற்பெற்ற உணர்வுதான்.

பாம்பாட்டி சித்தர் சொல்கிறார் மேலுமொரு பாடலில்...

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே


நாறுகின்ற மீனை பல தடவை நல்ல நீரால் கழுவினாலும் அதன் நாற்றம் போகாது! அது போல பலபேரால் கூறு கூறாக கொண்டு வந்த இந்த உடலானது, புண்ணியம் என்று கூறி புனித நதிகளில் நீராடினாலும் கொண்ட மலம் (மும்மலம் : ஆணவம், மாயை, கன்மம்) போகாது என்று கூறுகிறார்.

இதைபோன்ற தனது பாடல்களில் தான் பெற்ற ஞானத்தை உணர்த்தியிருக்கிறார் பாம்பாட்டி சித்தர்.

இதோ பாடல்கள் ....

தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே! சிவன்
சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம்பே! தெளிந்து ஆடுபாம்பே! சிவன்
அடியிணை கண்டோமென்று ஆடுபாம்பே!

நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே
நித்தியமென் றேபெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே
பன்னிப்பன்னிப் பரவி நின்றாடு பாம்பே!

பொன்னில் ஒளிபோலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பலவுயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!

எள்ளில் எண்ணைபோல உயிரெங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபக்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!

அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாம லேநினந்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!

சோதி மயமான பரிசுத்த வத்துவை
தொழுதழு தலற்றித் தொந்தோம் தோமெனவே
நீதிதவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி ஆடு பாம்பே!

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே

இவை அனைத்தும் ஒருதலைப்பின் கீழ் வந்த ஒன்பது பாடல்கள் ஆகும்.

மேலும் பல பாடல்கள் இருக்கின்றன.

பாம்பாட்டி சித்தர் தொடர் நிறைவு பெற்றது.



மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

23 November, 2009

-:பாம்பாட்டி சித்தர்:- _/\_ 2

[தொடர்ந்த நடை...]

அந்த நொடி,ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது.

‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன்.

சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’

‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’

‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க,

சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான்.

சில…….வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ தனக்குள் இருக்கும் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார்.

ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜால சித்தரானார்.

எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.

அந்த நொடியில்…..உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது?

போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.

அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.

பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது. இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.

மேலும் இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றவை.

அதில் ஒன்று உடம்பை பற்றி இவர் சொல்லும் ஒருபாடல் இதோ !


" ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே "

குழந்தையை உலகிற்குத் தரும் குழியிலிருந்து, ஐம்பூதங்களில் ஒன்றான
மண்ணைஎடுத்து உதிரப் புனலில் ( இரத்தநீரில்) குழைத்து குயவனாகிய ஈசன் கொடுத்த உடலாகிய இம்மட்பாண்டம் உடைந்துவிட்டால் உபயோகமற்ற மண்ணோட்டிற்குக் கூடப் பயன்படாது என்று ஆடு பாம்பே !!


இன்னும் பாடல்களுடன் .....

[நடை போடுவோம்......]

20 November, 2009

-:பாம்பாட்டி சித்தர்:- _/\_ 1

பாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.

இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கர்மம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர்.

பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள்.

சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது.

‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார்.

‘‘ஜோகிங்க சாமி...’’

‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’

‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’

‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’

‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’

‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’

‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’

‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’

அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது.

‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி.

‘நித்ய பரவசத்தில் திளைப்பதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி...

அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது.

‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’

‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின.

ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி,

[நடை போடுவோம்......]