குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

20 November, 2009

-:பாம்பாட்டி சித்தர்:- _/\_ 1

பாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.

இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கர்மம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர்.

பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள்.

சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது.

‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார்.

‘‘ஜோகிங்க சாமி...’’

‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’

‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’

‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’

‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’

‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’

‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’

‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’

அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது.

‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி.

‘நித்ய பரவசத்தில் திளைப்பதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி...

அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது.

‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’

‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின.

ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி,

[நடை போடுவோம்......]

4 comments:

நிகழ்காலத்தில்... said...

சுவாரசியமான நடையில் நன்றாக வந்திருக்கிறது நண்பரே

தொடருங்கள்..

வாழ்த்துகள்..

தேவன் said...

/// நிகழ்காலத்தில்... said...

சுவாரசியமான நடையில் நன்றாக வந்திருக்கிறது நண்பரே ///

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே !

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு கேசவன், இவ்வளவு நாள் படிக்காம விட்டதுக்கு வருத்தப்படுகின்றேன். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

தேவன் said...

/// பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு கேசவன், இவ்வளவு நாள் படிக்காம விட்டதுக்கு வருத்தப்படுகின்றேன். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். ///


வந்து விட்டீர்களே ! அதுவே போதும்.