சங்கபுலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இவர் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலிய சங்க நூற்களில் உள்ளன. திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் உள்ளது. திருவிளையாடல் புராணத்திலே இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஊசிமுறி என்றொரு நூல் இவரால் பாடபட்டதாகப் பழைய உரைகளினால் அறியக் கிடக்கிறது. ஆனால் சங்ககால புலவரும் இடைக்காட்டுச் சித்தரும் வேறு வேறானவர்.
இவர் கொங்கணரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கி.பி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர்.
"தாந் திமிதிமி தந்தக் கோனாரே
தீந் திமிதிமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே"
எனப் பாடுவோரும் கேட்போரும் குதித்தாடும் இந்தப் பாடல்கள் ஆசை என்னும் பசுவையும் சினம் என்னும் விஷப்பாம்பையும் அடக்கி விட்டால் முத்தி வாய்த்ததென்று எண்ணடா தாண்டவக்கோனே என்று கூறும் சிறப்புடையன.
இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.
ஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. இதனை முன்னரே எனது வலைப்பதிவில் தொகுத்து வழங்கி இருக்கிறேன்.அதன் சுட்டி கீழே.
இவர் இடைக்காடர் :
பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்
பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே
சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டும் தாண்டவக்கோனே
அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே
செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே
பலரோடு கிளத்தல்
கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.
மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.
காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.
மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
தூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை
நேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே.
சராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்
பராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே.
மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.
பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே.
அறிவோடு கிளத்தல்
எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே.
கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே.
விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.
மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.
ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.
நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.
கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.
வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. 75
அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. 76
சித்தத்தொடு கிளத்தல்
அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர
மானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர
மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற!
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற!
தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற!
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற!
மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!
எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற!
பால் கறத்தல்
சாவாது இருந்திட பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திட பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார உண்டிடப் பால்கற.
நாறா திருந்திடும் பால்கற
நாளும் இருந்திடப் பால்கற
மாறாது ஒழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற.
உலகம் வெறுத்திடும் பால்கற - மிக
ஒக்காளம் ஆகிய பால்கற
கலசத்தினுள் விழப் பால்கற - நிறை
கண்டத்தின் உள்விழப் பால்கற.
ஏப்பம் விடாமலே பால்கற - வரும்
ஏமன் விலக்கவே பால்கற
தீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர
சிவத்துடன் சாரவே பால்கற.
அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
அண்டத்தில் ஊறிடும் பால்கற
விண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை
வேதனை கெடவே பால்கற.
கிடை கட்டுதல்
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே.
சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார்.
அகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே.
ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே! - உன்
உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே.
மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக
முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே.
இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்
இல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே.
உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே! - உனக்
குள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே.
முக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே.
கன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே.
காரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
கைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.
பிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி
பேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே.
சிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய்
சித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே.
விண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்
மெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே.
கண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக்
கண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே.
சூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி
சூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே.
நித்தியமானது நேர்படி லேநிலை கோனே! - என்றும்
நிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே.
சத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை
சாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே.
கூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர
மூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே.
படிச்சவங்க எல்லாம் கருத்தது சொல்லி கனியது செய்வீர்.
14 comments:
நல்ல தகவல். தொடருங்கள்.
நன்றி அண்ணா.
நன்றி, அருமையான பதிவு.
/// ஜகதீஸ்வரன்
நன்றி, அருமையான பதிவு.///
வருகைக்கு நன்றி நண்பரே !!!
நல்ல தகவல் ஐயா! மேலும் சிவவாக்கியரைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.
///நல்ல தகவல் ஐயா! மேலும் சிவவாக்கியரைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.///
வாங்க ஐயா வருகைக்கு நன்றி.
எண்ணாற்ற அடியார்களை பற்றி எழுத ஆவல் தான் ஆனால் அலுவல் மிகுதியால் எதுவும் செய்ய முடியல. இருந்தாலும் முயற்சி பண்றேன்
எல்லாம் சிவமயம் என்பார்கள் இங்கோ எல்லாம் தமிழ் மயம். தொடரட்டும்...
///எல்லாம் சிவமயம் என்பார்கள் இங்கோ எல்லாம் தமிழ் மயம். தொடரட்டும்...///
வருகைக்கு நன்றி ஐயா !
தமிழ் மந்திர மொழியன்றோ அதனால் தான் அணி செய்கிறேன்.
தெய்வத்தமிழிடம் சரண் புகுந்தோர் சதானந்தம் அடைவார்கள்.
அருமையான பதிவு ஐயா. வாழ்க வளமுடன்
/// manogkaran krishnan said...
அருமையான பதிவு ஐயா. வாழ்க வளமுடன் ///
நன்றி ஐயா.
மிக நல்லப் பதிவுகள். தங்கள் பணி தொடர என் நல்வாழ்த்துகள்.
Member Pranic Healer @ வருகைக்கு நன்றி ஐயா !
super
Post a Comment