குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

03 December, 2009

-:பாம்பாட்டி சித்தர்:- _/\_ 3

[தொடர்ந்த நடை...]

பொதுவாக சித்தர்கள் எல்லோரும் ஒத்த கருத்து உள்ளவராகவும், பக்தி மார்க்கத்தில் சில சடங்குகளை புறக்கனிப்பவராகவும் உள்ளனர். நான் ஏற்கனவே எழுதி இருந்த சிவவாக்கியாரும் ஒரு பாடலில் கடுமையாக சிலை வழிபாட்டை சாடியிருந்தார் (நட்ட கல்லை தெய்வம் என்று...). இதோ பாம்பாட்டி சித்தரும் தனது பாடலில் சிலை வழிபாட்டை சாடுகிறார்.

இதோ அந்த பாடல்....

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடர்க்கென்று ஆடாய் பாம்பே


உளியை வைத்து செய்த கல்லாலான சிலையில் உள்ளதா உணர்ச்சி, உலகத்தில் மூடர்களாய் இருப்பவர்களுக்கு உள்ளதா உணர்ச்சி, (துருப்பிடித்ததை போன்ற) புளியிட்ட செம்பின் குற்றம் நீங்குமோ, இவர்கள் இருக்கும் அஞ்ஞானம் ஞானத்தை நோக்கி இவர்களை போக விடாது என்று ஆடு பாம்பே என்கிறார்.

மேலும் இவரது பாடல்கள் ஆன்மிக பாதையில் பயணிப்பவர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

உண்மையில் இதை படித்த போது எனக்கு ஏற்பெற்ற உணர்வு மூன்று நாள் பசிக்காரன் அறுசுவை உணவை கண்டதும் ஏற்பெற்ற உணர்வுதான்.

பாம்பாட்டி சித்தர் சொல்கிறார் மேலுமொரு பாடலில்...

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே


நாறுகின்ற மீனை பல தடவை நல்ல நீரால் கழுவினாலும் அதன் நாற்றம் போகாது! அது போல பலபேரால் கூறு கூறாக கொண்டு வந்த இந்த உடலானது, புண்ணியம் என்று கூறி புனித நதிகளில் நீராடினாலும் கொண்ட மலம் (மும்மலம் : ஆணவம், மாயை, கன்மம்) போகாது என்று கூறுகிறார்.

இதைபோன்ற தனது பாடல்களில் தான் பெற்ற ஞானத்தை உணர்த்தியிருக்கிறார் பாம்பாட்டி சித்தர்.

இதோ பாடல்கள் ....

தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே! சிவன்
சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம்பே! தெளிந்து ஆடுபாம்பே! சிவன்
அடியிணை கண்டோமென்று ஆடுபாம்பே!

நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே
நித்தியமென் றேபெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே
பன்னிப்பன்னிப் பரவி நின்றாடு பாம்பே!

பொன்னில் ஒளிபோலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பலவுயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!

எள்ளில் எண்ணைபோல உயிரெங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபக்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!

அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாம லேநினந்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!

சோதி மயமான பரிசுத்த வத்துவை
தொழுதழு தலற்றித் தொந்தோம் தோமெனவே
நீதிதவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி ஆடு பாம்பே!

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே

இவை அனைத்தும் ஒருதலைப்பின் கீழ் வந்த ஒன்பது பாடல்கள் ஆகும்.

மேலும் பல பாடல்கள் இருக்கின்றன.

பாம்பாட்டி சித்தர் தொடர் நிறைவு பெற்றது.



மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

8 comments:

SRI DHARAN said...

சம்போ மகாதேவா! ஆஹா! அருமை! அருமை! எளிதாக புதிதாக தெரிந்துகொண்டேன். நன்றி!

தேவன் said...

/// சம்போ மகாதேவா! ஆஹா! அருமை! அருமை! எளிதாக புதிதாக தெரிந்துகொண்டேன். நன்றி! ///

நன்றி ஸ்ரீதரன் வருகைக்கும் கருத்திற்கும் !!

Kavinaya said...

எவ்வளவு எளிமையாயும் இனிமையாயும் இருக்கின்றன பாடல்கள். தருவதற்கு மிக்க நன்றி.

தேவன் said...

/// எவ்வளவு எளிமையாயும் இனிமையாயும் இருக்கின்றன பாடல்கள். தருவதற்கு மிக்க நன்றி. ///


வருகை புரிந்தமைக்கும் கருத்திற்கும் நன்றி கவிநயா அவர்களே !

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

இவை
சுவை
மிக்கவை.

தொடர்ந்து எழுதி
அதை
தக்கவை.

தங்கள் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

நன்றி.

தேவன் said...

நன்றி ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் அவர்களே !

இறைப்பணி செய்ய பணித்தமைக்கு !!

Anonymous said...

மிகவும் அருமை . எனக்கு பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் , ஆகவே தங்களிடம் இவரின் பாடல்கள் இருந்தால் எனக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன் . அதை கிழ்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்

praveen4100@yahoo.com


நன்றி.....

Anonymous said...

உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு
வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே