குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

05 March, 2010

உரோம ரிஷி வரலாறு _/\_

உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

ஆனால் அவரோ தன்னைப்பற்றி...

"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "

பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் .
ஞால : பரிசுத்த மெய்ஞஞானம்
பதம் : பாதம்

இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து...

இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன. இதோ ஒரு பாடல்...

தியானத்தைப் பற்றி...

செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.

போலிகளைப் பற்றி....

மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

தவநிலையைப் பற்றி...

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே

என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது.

சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது.

இதோ அப்பாடல்..

"காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "

இவர் சிங்கி வைப்பு, உரோம ரிஷி வைத்திய சூத்திரம், வகார சூதிரம், உரோம ரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

குறிப்பு : விளக்கங்கள் அனுபவ நிலையல்ல, வெறும் தெரிவு நிலை மட்டுமே.

-உரோம ரிஷி வரலாறு முற்றிற்று-

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

6 comments:

snkm said...

சித்தர்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வாய்ப்பு! நன்றிகள் பல!

தேவன் said...

நன்றி ஷங்கர் ஐயா !

Rajewh said...

அற்புதம்.
இந்த நேரத்திற்கு ஏற்றார் போல பதிவு.
சித்தர் ஞானம் பிரமிக்க வைக்கிறது.
அனைத்து பாடல்களுக்கும் ஓரிரு வரியில் விளக்கம் சொன்னால்
மேலும் நன்மையே.

தேவன் said...

முதன் முறையாக வருகை புரிந்து கருத்திட்டமைக்கு நன்றி ராஜேஷ் ஐயா!

பித்தனின் வாக்கு said...

நல்லா எழுதியிருக்கிங்க. உரோம ரிஷியின் ஒரு உரோமம் உதிரும் காலம் ஒரு யுகம் முடிந்து மறு யுகம் தோன்றுவதாகவும். ஒரு பிரம்மன் மறைந்து புது பிரம்மா தோன்றுவதாகவும் நான் புராணங்களில் படித்துள்ளேன்.நன்றி,

தேவன் said...

நீங்கள் சொன்னக் கருத்தை நானும் படித்திருக்கிறேன், ஆனால் எழுதவில்லை. சிலவற்றை புராணங்களில் மிகைப்படுத்தி கூறி இருப்பதுதான் காரணம்.

பித்தன் ஐயா, புராணங்கள் கூறிய அனைத்தும் உண்மை என்று ஒப்புக்கொள்ள முடியாது.