யாம் பொருள் கூறி இப்பாடலையும், அதன் கருத்தையும் சிதைக்க விரும்பவில்லை ஒவ்வொரு பாடலும் இன்றைய பக்தியின் நிலையை எடுத்துக் காட்டுகிறது. இதை தடங்கண் சித்தர் என்பவர் பாடியிருக்கிறார். இது எண்சீர் விருத்தமாக தங்கப் பா என்ற தலைப்பின் கீழ் இயற்றப் பட்டிருக்கிறது. மொத்தம் 11 பாடல்களே இதில் இருக்கின்றன. இவரைப் பற்றிய வேறெந்த குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரமான உண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
இதோ உங்கள் பார்வைக்கு...
தங்கப் பா
அதிவெடி முழக்கி முரசுகள் முடுக்கி
அலறிடும் உடுக்கைகள் துடிப்ப
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி
வீணிலோர் கல்லினைச் சுமந்தே
குதிகுதி என்று தெருவெலாம் குதிப்பார்
குனிந்துவீழ்ந் துருகுவர் மாக்கள்
இதுகொலோ சமயம்? இதுகொலோ சமயம்?
எண்ணவும் வௌ்குமென் நெஞ்சே! 1
அருவருப் பூட்டும் ஐந்தலை, நாற்கை
ஆனைபோல் வயிறுமுன் துருத்தும்
உருவினை இறைவன் எனப்பெயர் கூறி
உருள் பெருந் தோனில் அமர்த்தி
இருபது நூறு மூடர்கள் கூடி
இழுப்பதும் தரைவிழுந் தெழலும்
தெருவெலாம் நிகழும்; அது கொலோ சமயம்?
தீங்குகண் டுழலுமென் நெஞ்சே! 2
எண்ணெயால், நீரால், பிசுபிசுக் கேறி
இருண்டுபுன் ளாற்றமே விளைக்கும்
திண்ணிய கற்குத் திகழ்நகை பூட்டித்
தெரியல்கள் பலப்பல சார்த்திக்
கண்ணினைக் கரிக்கும் கரும்புகை கிளப்பிக்
கருமனப் பார்ப்புசெய் விரகுக்கு
எண்ணிலா மாக்கன் அடி, மிதி படுவர்
இதுகொலோ, இதுகொலோ சமயம்? 3
அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப் பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கெனத் தோன்றலும், அறியா
மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகண் டிரங்குமென் நெஞ்சே. 4
நீட்டிய பல்லும் சினமடி வாயும்
நிலைத்தவோர் கல்லுரு முன்னே
கூட்டமாய் மோதிக் குடிவெறித் தவர்போல்
குதிப்பர் தீ வளர்த்ததில் மிதிப்பார்
ஆட்டினைத் துடிக்க வெட்டிவீழ்த் திடுவார்
ஆங்கதன் உதிரமும் குடிப்பார்
காட்டில் வாழ் காலக் கூத்துகொல் சமயம்?
கண்ணிலார்க் கிரங்குமென் நெஞ்சே! 5
உடுக்கையை அடித்தே ஒருவன்முன் செல்வான்
ஒருவன்தீச் சட்டியும் கொள்வான்
எடுத்ததோர் தட்டில் பாம்புருத் தாங்கி
இல்தொறும் சென்றுமுன் நிற்பார்
நடுக்கொடும் தொழுவார் நங்கையர், சிறுவர்,
நல்குவர் காணிக்கை பலவும்
கொடுத்தநீ றணிவார் இதுகொலோ சமயம்?
குருடருக் கிரங்குமென் நெஞ்சே! 6
வேப்பிலைக் கொத்தும், விரிதலை மயிரும்
வெவ்விதின் மடித்திடு வாயும்
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி
குரங்கென ஆடுவள் குதிப்பாள்
நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள்
நற்குறி கேட்டிட நிற்பார்
காப்பதோ வாழ்வை? இதுகொலோ சமயம்?
கண்ணில்லார்க் கிரங்குமென் நெஞ்சே! 7
தாய்மொழி பேணார்; நாட்டினை நினையார்
தம்கிளை, நண்பருக் கிரங்கார்
தூய்நல் அன்பால் உயிர்க்கெலாம் நெகிழார்
துடிப்புறும் ஏழையர்க் கருளார்
போய்மலை ஏறி வெறுங்கருங் கற்கே
பொன்முடி, முத்தணி புனைவார்
ஏய்ந்தபுன் மடமை இதுகொலோ சமயம்?
ஏழையர்க் கிரங்குமென் நெஞ்சே? 8
பாலிலாச் சேய்கள், பசி, பணியாளர்
பல்துயர் பெருமிந் நாட்டில்
பாலொடு தயிர், நெய், கனி, சுவைப் பாகு
பருப்பு நல் அடிசிலின் திரளை
நூலணி வார்தம் நொய்யையே நிரப்ப
நுழைத்தகல் உருவின் முன் படைத்தே
சாலவும் மகிழ்வார் இதுகொலோ சமயம்?
சழக்கினுக் கழலுமென் நெஞ்சே! 9
அன்பிலார் உயிர்கட் களியிலார்; தூய்மை
அகத்திலார்; ஒழுக்கமுமில்லார்
வன்பினால் பிறரை வருததுவர்; எனினும்
வகைபெற உடம்பெலாம் பூசி
முன்தொழுகையர்; முறைகளில் தவறார்
முழுகுவார் துறைதொறும் சென்றே!
நன்றுகொல் முரண்பாடு! இதுகொலோ சமயம்?
நடலையர்க் குடையுமென் நெஞ்சே! 10
மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து
மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை
புரிதலே இறையுணர் வன்றோ!
செய்கையால், வழக்கால், அச்சத்தால், மடத்தால்
செய்பொருள் இறைஎனத் தொழுவார்?
உய்வரோ இவர்தாம்? இதுகொலோ சமயம்?
உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே! 11
என்ன ஒவ்வொன்றும் ஒரு முத்துக்கள் தானே !
[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]
18 comments:
தடங்கண் சித்தர் பாட்டில் சந்தேகம் உள்ளது .
சிவனுக்கு அபிசேகம் முக்கியம் அப்படி இருக்க .....
பாலொடு தயிர், நெய், கனி, சுவைப் பாகு
உருவின் முன் படைத்தே
அம்மனுக்கு வேப்பிலை முக்கியம் அப்படி இருக்க ....
வேப்பிலைக் கொத்தும், ...........
அப்போ சித்தர் உண்மை பக்தி பற்றி என்ன சொல்றார்!
அருமை! நன்றி! கருத்துள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைக்கிறது!
சிவனுக்கு அபிசேகம் பண்ணலாம் பக்தியே!
ஆனால் பசியில் குழந்தை அழுதால் கொடுக்காமல் அபிஷேக பாலை கொடுக்காமல் இருப்பது மூட பக்தி.
அம்மனுக்கு வேப்பிலை சமர்பிக்கலாம் பக்தியே!
ஆனால் வேப்பிலை கொண்டு நான்தான் சாமி
என்று போலியாக ஆடுவது மூட பக்தி.(ex: meera jasmine one tamil film)
சாமி வருவது ஒரு சிலருக்கு உண்டு அது உண்மையே!
திருப்பதி பெருமாளுக்கு வேண்டி மொட்டை அடித்து கொள்ளலாம் பக்தியே!
/// snkm said...
அருமை! நன்றி! கருத்துள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைக்கிறது! ///
நன்றி ஐயா, ஆனால் எல்லோரும் இதனை விரும்புவதில்லை.
/// திருப்பதி பெருமாளுக்கு வேண்டி மொட்டை அடித்து கொள்ளலாம் பக்தியே! ///
உயிரை கொடுத்த சாமிக்கு ...... கொடுப்பது எப்படி பக்தியாகும், ஆனால்
மொட்டையடிப்பது வேறு காரணத்திற்காக,
ஹா ஹா .....என்ன ஐயா, சித்தர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?
உண்மை சற்று தயக்கம் தரும். ஆனால் ஒரு போதும் தாழ்வை உண்டாக்காது.
/// அப்போ சித்தர் உண்மை பக்தி பற்றி என்ன சொல்றார்! ///
தனித்திரு (தளத்திலிரு), பசித்திரு
(அறிவை அறிய ஆராய்ச்சியோடிரு), விழித்திரு (தூங்காமல் தூங்கியிரு)
இதுவே உண்மையை அறியும் மார்க்கம்.
வருகைக்கு நன்றி ஐயா.
சித்தர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?
சித்தர்கள் ஞானம் பெற்றவர்கள். ஏற்று கொள்ளாமல் இருக்க முடியுமா!
ஆழ்வார்கள் 12 பேர்
நாயன்மார் 63 பேர்
சித்தர்கள் என்று ஒரு குறிப்பிட்டவர்கள் உள்ளனர். தங்களுக்கு தெரிந்ததே!
அந்த எண்ணிக்கை சித்தர்களில் தடங்கண் சித்தர் உள்ளாரா!
அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன்
போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.
கருங்கல்ல்லில் உருவம் செய்து பரம்பொருள் என்பார் இதுகொலோ சமயம்? இதுகொலோ சமயம்?
அறிமாய சித்தர் ..
இந்த மாதிரி 4 வரிகளை போட்டு சித்தர் என்று பெயர் போட்டு விட்டால் அவர்கள் சித்தர்கள் ஆகிவிட முடியாது.
/// ஆழ்வார்கள் 12 பேர்
நாயன்மார் 63 பேர் ///
கணக்கு எல்லாம் கிடையாது ஐயா, அவர்கள் கணக்கற்றவர்கள்.
/// சித்தர்கள் என்று ஒரு குறிப்பிட்டவர்கள் உள்ளனர் ///
அவர்கள் குறிப்பிட்டவர்கள் என்று நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அவ்வளவே,
/// அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன் ///
/// மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து
மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை
புரிதலே இறையுணர் வன்றோ ///
ஐயா நிரூபிக்க என்னிடம் எதுவும் ஆதாரங்கள் இல்லை, ஆனால் அவரின் இந்தப் பாடல் ஒன்றே போது அவரின் பரிபூரணத்தை உணர்த்த போதுமான சான்று. இவரின் பாடல்கள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது.
/// போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.
இந்த மாதிரி 4 வரிகளை போட்டு சித்தர் என்று பெயர் போட்டு விட்டால் அவர்கள் சித்தர்கள் ஆகிவிட முடியாது ///
ஆராய்ந்து தெளியுங்கள் ...
(எப்பொருள் யார்யார் வாய்.......)
அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன்
உங்களை ஏற்றுக் கொள்ள வைப்பது என் எண்ணம் இல்லை. அறிய வைப்பதே என் முயற்சி.
ஆராய்ந்து தெளியுங்கள் ...
(எப்பொருள் யார்யார் வாய்.......)::
yes tevan..
ஆராய்ந்து படித்தால் உண்மை தெரியும்
சித்தர் ஹிந்து மதத்தின் வழிபாடு முறையை குறை கூறவில்லை .
அதில் உள்ள மூட நம்பிக்கைகளை கூறியிருக்கிறார்.
thanks...
ஒன்னும் சொல்வதுக்கும் இல்லை, இவர் சொல்வதை மறுபதற்கும் வழியில்லை. கடவுள் கேக்காமல் நாமாக செய்யும் எல்லாத்தையும் பக்தி என்று சொல்வது தவறு. நன்றி.
/// கடவுள் கேக்காமல் நாமாக செய்யும் எல்லாத்தையும் பக்தி என்று சொல்வது தவறு ///
சரியான புரிதல் தான். வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா.
//போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.//
உண்மைதான்.
சித்தர் வாக்கு சித்தத்தை தெளிய வைக்குமே தவிர சிதைய வைக்க மாட்டாது,
சிந்தையை சீராக்கி ஜீவனை சிவனாக்கும் வாக்கே சித்தர் வாக்கு.
நன்றி.
நன்றி ஐயா வருகைக்கு!
படிக்க படிக்கதான் உண்மை!
சித்தர் சொல்வது முழுமையாக உண்மையே!
எதையும் மறுப்பதற்கில்லை!
மிக்க நன்றி.
தடங்கண் சித்தர் திருவடிகளே சரணம்!
ஆகா அருமையோ அருமை.
/// தடங்கண் சித்தர் திருவடிகளே சரணம்! ///
போற்றுங்கள், மாற்றட்டும்...
நன்றி அம்மு அவர்களே,
உங்களின் முதல் வருகைக்கும், கருத்திட்டமைக்கும்.
Post a Comment