குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

24 April, 2011

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள்



இருபதாம் நுற்றாண்டு இறுதியில் தென் தமிழகத்தில் நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகில் போளூர் தாலுகா கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி இருந்தார். அவருக்கென்று பேர் கூட கிடையாது. ஜீவ முக்தி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கலாயினர். சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் பூண்டி மகான் ஆற்றுசுவாமிகள் என்றும் அழைக்கலாயினர்.

வட ஆற்காடு மாவட்டம் வேலூருக்கு தெற்கே செல்லும் நெடுஞ்சாலை பாதையிலுள்ள போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கத்தில் வாழ்ந்தவர்.இவர் சென்ற நூற்றாண்டின் வாழ்ந்த சித்தர் என்பதால் இவரைப் பற்றி பல அமானுஷ்ய தகவல்கள் போளூர் ,கலசபாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது.

நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும் சித்திரை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள். கலசபாக்கம் என்பது ஆற்றங்கரைமான கிராமம் ஆகும். தொடர்ந்து ஒருநாள் முழுதும் மழை பெய்தால் ஆறு முழுதும் வெள்ளம் பெருகி காட்டாறு போல் பொங்கி பெருக்கெடுத்து ஓடும். பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியும், அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகை இலைகளால் எந்த நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை காத்து வந்தார். இதனால் பாமரமக்களும், மற்றவர்களும் அவரை தேடியும், நாடியும் வந்து வணங்கி அன்பு செலுத்த ஆரம்பித்தனர். அந்த ஆற்றங்கரை மணல் மேட்டிலே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

ஒருசமயம், தொடர்ந்து வானம் பெய்த்தால் மழை நின்று போனது. மழை இல்லாத காரணத்தால் பயிர் தொழில், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமைச்சூழலில் வேதனையும், அவதியும் பட்டனர், ஊரின் கிராம முன்சீப் கிராம மக்களை ஒன்று கூட்டி , கிராமத்தைக் காப்பாற்றும் படி நாளை மகானிடம் சென்று முறையிடலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றிரவு.., முன்சீப் மகானிடம் எப்படி கேட்பது....,அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு..., ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர..., எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.

‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். இது கனவா... நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார்.

”ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’பணிந்து வேண்டினர்.

’’என்ன முனிசீப் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... ஒரு செயலை செஞ்சு முடிக்கறதுக்கு முன்னாடி எப்படி நம்பமுடியும்? இது இயற்கைதானே! சரி... சரி இப்ப எழுந்து உன் வீட்டு வாசலுக்குப் போ நான் நிஜமா பொய்யான்னு தெரியும்...’ என்று சொல்ல அடுத்த நொடி ஏதோ உணர்ந்தவராக முனிசீப் சடாரென எழுந்து உட்கார்ந்தார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் சித்தர் நம் எதிரில் நின்று பேசியது கனவா? ஆனால்,அது கனவாக தெரியவில்லையே..., நிஜத்தில் நடப்பது போலல்வா இருந்தது ‘’? என்று வியந்து யோசித்தபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.

அப்போது லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.

நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் பதினைந்து ஆண்டுகள் மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது. விடிந்ததும் மனசு முழுக்க சித்தரின் நினைவுகள் நிறைந்திருந்தது. நடந்த விபரங்களை ஊர் மக்களிடம் கூறி, அவரை காண ஆற்றங்கரக்குச் சென்றார்.அங்கே சித்தர் இல்லை. பலவிடங்களில் தேடியும் சித்தர் காணவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன், ‘’அங்க பாருங்க சாமியார் உட்கார்ந்திருந்த இடத்திலே மண் மூடியிருக்கு..; என்று கூற மண் மூடிய இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த
சித்தரை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும் நெகிழ்வாக கண்கலங்கி....., சட்டென்று கண் திறந்தார்.

’’போதுமா... நீங்க கேட்ட மாதிரி மழை பெய்துவிட்டது...’’ என்று கூற ஊர் மக்கள் யாவரும் நெகிழ்வாக கரம் கூப்பி வணங்கினர்..

ஊரிலான், பேரிலான் :

எப்பொழுது இந்த பகுதிக்கு வந்தார்?,எங்கிருந்து வந்தார்?, என எவ்வித தகவலும் கிடையாது. அவருடைய பெற்றோர் யார்?, உற்றார் உறவினர் யார்? என எந்த ஒரு செய்தியும் ஒருவருக்கும் தெரியாது.

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கலசபாக்கம், குருவிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்பட தொடங்கியாதாக சிலர் கூறுகின்றனர். மனம் போன போக்கில் பிச்சைக்காரர் போன்று திரிந்து கொண்டு. எவ்வித ஆன்மிக அடையாளமும் இன்றி இருந்ததால் பொது மக்கள் யாரும் கவனிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை .

அவரது செய்கைகள் சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.அவர்கள் அவரை ஏளனம் செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து sendru விடுவார். புற உலக சிந்தனை இன்றி சுயம்பாக இருப்பதை ஒரு சில ஆன்மிக பெரியவர்கள் கவனிக்கலாயினர்.

சுவாமிகளின் பொன்மொழிகள்...

தன் பசித்துன்பத்தைக் போருத்துக்கொல்லுதலும், பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.

பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.

இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது.

மக்களை மக்களென நினைத்து பணியாற்று செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.

மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறனைக் கருக்கி தானே கெடுகின்றான்.

தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து தன் கடமையை செய்பவன்தான் பெரிய மனிதனும், அறிவுடையவனுமானவன்.

எல்லோரும் தீய பலன்களிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றை செய்வதில் எல்லோரும் ஒன்று போல் தயக்கம் காட்டுவதில்லை.

மனிதன் மனதில் பூசை செய்து தான் நினைத்த காரியம் நடக்காததை நினைத்து நொந்து மடிகிறான். மனதில் பூசை செய்வதை விட ஜீவனில் பூசை செய்வதே சிறந்தது.


உதவி :
http://srisivalayam.blogspot.com/2011/01/blog-post.html
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ec45b08e4da641bd


பூண்டி மகான் திருவடிகள் போற்றி!
குருவடி போற்றி!!
திருவடி போற்றி!!!

27 March, 2011

மகா அவதார் பாபாஜி - 2

லாஹிரி மஹா சாயர் (மஹா அவதார் பாபாஜியின் சீடர்)

மஹா அவதார் பாபாஜி இந்த உலகத்திற்கு தெரிய, பாபாஜி பயன்படுத்திய முதல் கருவி லாஹிரி மஹா சாயர் தான்.மஹா அவதார் பாபாஜி முதலில் காட்சி கொடுத்தது இவருக்கு தான். கிரியா யோகத்தை முதலில் பாபாஜி கற்று கொடுத்தது இவருக்கே. இவரின் இயற்பெயர் ஷாமா சரண் லாஹிரி. அனைவரும் இவரை லாஹிரி மகாசாயா என்று அழைத்தார்கள்.(மகாசாயா என்றால் விசாலமான அறிவு உடையவர் என்று பொருள்.)

குழந்தை பருவம் :

இவர் 30 தேதி, செப்டம்பர் மாதம்,1828 -ல் வங்காள மாநிலம், நதியா மாவட்டத்தில், குர்னி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் கௌர் மோகன் லாஹிரி மற்றும் முக்தாக்ஷி .பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் சிறுவதிலேயே, அவரின் அன்னை இறந்து விட்டார். லாஹிரி மகாசாயர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான்கு வயதில் இருந்தே தியானம் செய்வதைக் கற்றுக் கொண்டார். தலையைத் தவிர மற்ற உடல் பகுதி முழுவதும் மண்ணுள் புதைத்துக் கொள்ளும் தியான முறையை கையாண்டார்.

அவரது வீடு, ஒரு பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஆகவே அவர் குடும்பதினோடு வாரணாசிக்கு சென்றார்.தான் வாழ்நாளின் மீத பகுதியை அங்கேயே கழித்தார். பிள்ளை பருவத்திலேயே ஹிந்தி, உருது அறிந்திருந்தார். பின்னர் பெங்காலி, சமஸ்கிருதம், பாரசீகம்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அரசு சமஸ்கிருத கல்லூரியில் கற்று கொண்டார். கங்கையில் நீராடி விட்டு, வேதங்களையும், புராணங்களையும் அங்கேயே கற்று கொண்டார்.

இளமைப் பருவம் :


கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ,ஆங்கிலேய ராணுவத்தில் கணக்காளராக பணி ஆற்றினார். 1846 -ல் ஸ்ரீமதி காஷி மோனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்.லாஹிரி மாஹசாயரின் தந்தை இறந்த பின், குடும்ப பொறுப்பை தானே ஏற்றார்.

அப்போது மகாசாயவிற்கு 33 வயது.1861 -ல், இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள "ராணிகட்" என்ற இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதுதான் அவர் வாழ்கை முறையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. ராணிகட் சென்றவுடன் மகாசாயவிற்கு கிடைத்த முதல் செய்தி அந்தப் பகுதி ஏராளமான ஞானிகள் வாழும் பகுதி என்பதுதான். அந்த ஞானிகளை காண வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் அவர் மலை மீது ஏறினார்.

மஹா அவதார் பாபாஜி ஆட்கொள்ளல்:

அவர் மலைப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவரை அழைத்தது. மேலும் அவர் அக்குரலை கேட்டுக் கொண்டே மலையின் மீது ஏறிச் சென்றார். அப்போது தான், கிரியா யோகத்தின் ஒளி விளக்கான "மஹா அவதார் பாபாஜி" யை சந்தித்தார்.

அப்போது அவரை மஹா அவதார் பாபாஜி தன் முதல் சீடராக ஏற்றுகொண்டார். கிரியா யோக வித்தைகளை அவருக்கு கற்று தந்தார். உலகுக்கு எல்லாம் கிரியா யோகத்தைப் பரப்புமாறு மஹா அவதார் பாபாஜி, லாஹிரி மகாசாயருக்கு கட்டளை இட்டார்.

பின்பு அவர் வாரணாசிக்கே திரும்பி வந்து, கிரியா யோகத்தைப் பற்றியும், மஹா அவதார் பாபாஜியை பற்றியும் எல்லாருக்கும் எடுத்து உரைத்தார். அங்குள்ள அனைத்து மக்களும் கிரியா யோகத்தை தெரிந்துகொள்ள முனைந்தனர்.

லாஹிரி ஒரு குழுவை அமைத்து கிரியா யோகத்தை பற்றி மக்கள் அறியுமாறு செய்தார். கிரியா யோகத்திற்கு மதம் முக்கியம் இல்லை. ஆகவே இந்து,முஸ்லிம், கிறிஸ்து ஆகிய மதத்தினருக்கும் கற்று தரப்பட்டது.

1886 வரை கிரியா யோகத்தின் ஆசிரியராக விளங்கினார். பின்பு அனைத்து மக்களும் அவரது தரிசித்து சென்றனர். 26 செப்டம்பர், 1895 -ல் , தன் அறையில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருக்கும் போது, அனைவரது பார்வையின் எதிரே யோக நிலையிலேயே இறைவன் அடிசேர்ந்தார்.

இவருக்கு பின், அவரின் சீடர்களான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி பிரபானந்தா, சுவாமி கேஷபானந்தா போன்றோரால் கிரியா யோகம் மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

சென்னை சாந்தோம் பகுதியில் பாபாஜி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. இங்கு வழிபாட்டுக் கூடமும் பயிற்சிக்கூடமும் உள்ளன.


பாபாஜி அய்யா திருவடி போற்றி.

மகாசாயா அய்யா திருவடி போற்றி.

முற்றும்.

28 February, 2011

மகா அவதார் பாபாஜி - 1

பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில் பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். அவருக்கு 11 வயதானபோது கி.பி.1214ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1214 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார். ( போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)


கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார். மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24 மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது. இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது. ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும் வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம் வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார்.

தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார். பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.)

குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார்.

ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கொரிசங்கர் பீடம் என்று பெயர்.

பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக அவரது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி உள்ளதால். அவர் தோன்றி 1800 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட 16 வயது சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடவுளைக் காணும் ஆர்வம் மிக்கவர்களாகவும் கடவுளை காணும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்து வாவர்கள் தெய்வீக உணர்வை பெறுவதற்கு உதவி செய்வதையே பாபாஜி தம் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். இந்த தெய்வீக ஞானத்தை பெற்றிடும் மக்கள் இதை யாரிடம் இருந்து பெற்றோம் என்று அறிந்துகொள்ள முடியாத நிலையில் கூட கிரியாயோகப்பயிற்சியை அளித்து வருகிறார்கள்.


கிரியா யோகப்பயிற்சியை லாஹிரி மகாசாயா மூலம் உலகம் முழுவதும் பரவச்செய்ய பாபாஜி முடிவு செய்துவிட்டார். ராணுவத்தில் பணி செய்து கொண்டிருந்த மகாசாயா பாபாஜியின் மூலம் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.

மகாசாயா
தொடரும்...

22 January, 2011

படித்ததில் பிடித்தது

கீழே தன் கவி சாட்டையை சுழற்றி அடிப்பவர் நாகரா ஐயா அவர்கள். மிகத் தெளிவான பாடல்கள் அருமையாக இருந்தது. புல்லரிவாளன் வாலறிவை போற்றுவது மடமையே! அவரது Blog இணைப்பும் கீழே இருக்கிறது. படித்து சுவையுங்கள்...

கட!உள் - 1
http://enkavithaikal.blogspot.com/2011/01/1_20.html

வாதம் விவாதம் விட்டுக் கட!உள்
நேசம் விட்டேது கடவுள்?

தன்னை நம்பித் தன்கைப் பற்றத்
தன்னைக் காட்டுங் கடவுள்

அன்பை உணர அவகாச மின்றேல்
இல்லை நமக்குக் கடவுள்

பேரிலா அன்புக்கு பேர்பல சூட்டிப்
பேதமாய்ச் செய்வாயேன் கடவுள்

கட!உள் அன்புணர்! அதுவரை நினக்குக்
கடவுள் என்பது வெறுஞ்சொல்

வறுமையும் பசியும் உயிரை வாட்ட
வெறுஞ்சடங்கால் வசியுமோ கடவுள்

ஒருகல் மதிப்பாய் மறுகல் மிதிப்பாய்
ஒருமை சிறிதும் இல்லாய்

கல்லுக்குஞ் செம்புக்குங் காசுமேல் காசுமெய்
இல்லில்வாழ் ஏழைக்கில் சோறு

கேள்விகள் அற்று ஏகாரம் பெற்றால்
நானெனும் ஒன்றே கடவுள்

அஞ்ஞான நாகம் மெய்ஞ்ஞானம் பிதற்றும்
அன்பான நானோ மன்னித்தேன்


கட!உள் - 2
http://enkavithaikal.blogspot.com/2011/01/2_20.html

கடக்காமல் உள்ளே இல்லை கடவுள்
கட!உள் கடந்தால் உண்டு!

பொய்ம்மடம் கற்கோயில் வீண்சடங்கு எதற்கு
மெய்க்கடத் துள்மார்புள் கடவுள்

குருவென்னும் உருபின்னே உருண்டோடுங் கூட்டம்
குருவென்பார் இருதயத்தே ஒளிந்தார்

காலில் விழத்தான் சொல்லுமோ தலைகை
காலில் அருவாங் கடவுள்
(இரண்டாவது காலில் = கால் இல் = கால் இல்லாத)

உருவத்தில் உள்ளான் அருவத்தில் அடங்கான்
கருமத்தில் உழல்வான் தான்

கல்லில் வடிக்க லாகாக் கடவுள்
சொல்லி லும்பிடி படான்

ஆத்திக ஆடம்பரம் நாத்திக வீண்வாதம்
தாண்டிடு தேகம்நடு கட!உள்

சுருண்ட நாகம் விழித்து மேலேற
தெருண்ட நல்ல பாம்பு
(தெருண்ட = தெளிவுற்ற)

முதுகுத் தண்டும் மூளையும் போதிமரம்
இ(ரு)தயம் ஞானப் பழம்


பி.குறிப்பு: http://enkavithaikal.blogspot.com/ - இது ஐயாவின் தளம் அள்ளிப் பருகுங்கள் ஞான அமிழ்தை...

13 January, 2011

தோபா சித்தர்

ஒரு நீண்ட இடைவெளிதான் இது. திரும்பவும் எழுத வந்தது மகிழ்ச்ச்சி அளிக்கிறது. ஊக்கமளித்தவர்களுக்கு எனது நன்றிகள் பல.

இதோ இந்த பதிவு சென்னையில் வாழ்ந்த தோபா சித்தரைப்பற்றி தொடர்ந்து படியுங்கள்.

பெயர்க்காரணம்


இவருக்கு தோபா சித்தர் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் உள்ளது. இவர் ஒரு மகான் என்று தெரிந்த பிறகு பள்ளிச்சிறுவர்கள் கூட இவரை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை 'தோடுடைய செவியன்' என்ற பாடலைப் பாடுங்கள் என்று கேட்பார். அவர்களும் பாடுவார்கள். பல சமயங்களில் மெய்மறந்த நிலையில் உட்கார்ந்து அந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார்.


இது பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு மாணவர்களைப் பார்த்து "தோ பா" ('தோ' என்பது 'தோடுடைய செவியன்' 'பா' என்ற எழுத்து பாடுங்கள் என்பதை குறிக்கும்.) என்பார். "தோ பா" என்ற உடனேயே மாணவர்கள் பாடத்தொடங்கி விடுவார்கள். இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் 'தோபா சாமி' என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதுவே அவருக்குப் பெயராகவும் அமைந்து விட்டது. (குழந்தைகளுக்கு பெற்றோர் பெயர் வைத்துத்தான் நாம் பார்க்கிறோம். ஆனல் இங்கு பார்த்தீர்களா ஒரு தகப்பனுக்கு குழந்தைகள் பெயரிடும் அதிசயம். இது ஞானிகளுக்கே கிடைக்கும் வெகுமதி!) தொடந்து கீழே படியுங்கள்:




இவர் கருவில் திருவுடையவராகவே தோன்றி 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே துறவு பூண்டு அவதூதராக வாழ்ந்திருக்கிறார். இவர் 18ம் நுற்றாண்டின் பிற்பாதியில் திருச்சியில் தோன்றியவர். சுமார் 20 வயதளவில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் உள்ளது. அக்கால ஆங்கிலேயே படைப்பிரிவுகளில் காலாட்படையும், குதிரைப்படையும், கப்பல் படையும் இருந்தன. இவர் குதிரைப்படையில்தான் பணியாற்றினார். ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6 மணி முதல் 1 மணிவரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் நபிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார்.



பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீரர்கள் வெளியில் சென்று வருவார்கள். ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தாலும் அவர் வெளியில் செல்வதே இல்லை. பணிமுடித்த வேளைகளிலெல்லாம் படைவீரர் தங்கும் இடத்திலேயே தவத்தில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல சாமியின் தவக்காலமும் அதிகரித்து விட்டது.



படைப்பிரிவில் படைவீரர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் அவர்களுக்குரிய கட்டிலில் படுத்து தூங்கி விடவேண்டும். அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து 6 மணிக்குள் தங்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுத்தமாக சீருடை அணிந்துகொண்டு படைப் பயிற்சி மைதானத்திற்கு சென்றுவிட வேண்டும். தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு தோபா சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6 மணிக்கெல்லாம் படைப்பயிற்சி திடலுக்கு முறைப்படி வந்துவிடுவதையும் பார்த்திருக்கின்றனர். அவர் எதிலும் சரியாகவே இருந்ததால் அவர் தியானம் செய்ததை ஒரு குறையாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுபற்றி மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.



ஒருமுறை காலை 6 மணிக்கு தோபா சாமி தவத்தில் இருந்த நேரத்தில் மேலதிகாரி படைவீரர்கள் தங்கும் கூடாரத்தினுள் நுழைந்தார். அங்கு தவத்தில் தோபா சாமி ராணுவப் பயிற்சிக்கு தயாராகாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்ற மேலதிகாரி, தவத்தை கலைக்காமல் படைப்பயிற்சி திடலுக்கு வந்தார். அங்கு சாமி முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயாராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார். மேலதிகாரி கேள்வியுற்ற போதுதான் விசயம், அவர் ஒரு மகா சித்தர் என்பது தெளிவு பிறந்தது. அதன் விளைவாக சாமி படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்து கொண்டிருந்தார்.



சித்தர் வாழ்வு:

இந்த தோபா சாமி தற்போதைய மைலாப்பூர், சைதாப்பேட்டை, தாம்பரம் போன்ற பல பகுதிகளிலும் கூட "சித்தன் போக்கு சிவன் போக்கு" என்பதற்குரிய விதத்தில் சுற்றி திரிந்திருக்கிறார். பக்தர்கள் பல பேருக்கு உதவியும் உள்ளார்.

சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் சுற்றிக்கொண்டிருந்த சாமி ஓரிரு ஆண்டுகளிலேயே தம்மை மறந்த அவதூதராக மாறிவிட்டார். உடை அணியவேண்டும் என்ற உணர்வையே அவர் இழந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவருக்கு பக்தர்கள் பலர் சேர்ந்துவிட்டதால் அவருடைய தவ வலிமையை மக்கள் உணரத் தலைப்பட்டனர். இவர் யாரிடமும் தீட்சை பெற்றதாகவோ, வழங்கியதாகவோ தெரியவில்லை. இருப்பினும் சீடர்களைப்போல் சிலர் அவருடனையே இருந்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்தநாத சுவாமிகள். தோபா சாமிக்காக சித்தநாதசாமிகளே தோடுடைய செவியன் பாடலைப் பாடினார். அந்த சித்தநாதன்தான் கடைசிவரை சாமியின் கூடவே இருந்தவர்.



இவர் அவதூதராக மாறிய பிறகு 1840க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை யில் வாழ்ந்திருக்கிறார். இந்த பத்தாண்டு காலத்தில் இரமலிங்க அடிகளும் சென்னையில் வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் ஒரு சில ஆண்டுகள் இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தினமும் தவறாமல் திருவொற்றியூர் தியாகரஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்று தியாகராஜ பெருமானையும் வடிவுடையம்மனையும் வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் அந்த கோவில் சன்னிதித் தெருவில் அவதூதராக நடமாடிக்கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் தெருவில் போகிறவர்களையும் வருகிறவர்களையும் பார்த்து இதோ ஒரு நாய் போகிறது, இதோ ஒரு நரி போகிறது, இதோ ஒரு காளைமாடு போகிறது என்று ஏதோ ஒரு விலங்கின் பெயரால் அழைத்து வந்தார். அவருடைய பக்தர்களுக்கெல்லாம் இது ஒரு வியப்பான தொடர் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. ஒரு நாள் அவர் சன்னிதித் தெரு வழியே இராமலிங்க அடிகள் (வள்ளலார்) சென்றதைப் பார்த்து இதோ ஒரு மனிதன் போகிறான் என்று மகிழ்ச்சி பொங்க கத்திவிட்டார்.



19 நூற்றாண்டின் முற்பகுதியில் சாமி சென்னையை விட்டு வேளியேற முற்பட்டார். அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர். குதிரை வண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார்.


அவருடன் சீடர் சித்தநாதனும் இறங்கிவிட்டார். அதன் பிறகு சாமி வேறெங்கும் செல்லவில்லை. வேலூரிலேயே சுமார் 25 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்து கொண்டு அவர் சமாதி கூடியபோது அவருக்கு வயது 70 இருக்கும். மக்கள் இன்றும் அவர் சமாதியில் வழிபாடு செய்கின்றனர். அவரது முக்கிய சீடரான சித்த நாதரே அவருக்கு சமாதி எழுப்பி அதன்மீது லிங்க பிரதிஷ்டை செய்துள்ளார். சிறிது காலத்திற்கு பிறகு சித்தநாதரும் அங்கேயே சமாதி கூடினார். லிங்கத்திற்கு எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தியின் அடியில் அவருடைய சமாதி உள்ளது.



சமாதி உள்ள இடம் :

வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் சைதாப்பேட்டை மெயின்பஜாரில் உள்ள சாலையில் அவருடைய சமாதி உள்ளது. சித்தரின் சமாதி இப்போது ஒரு மடாலயமாக வளர்ந்துள்ளது.


18 June, 2010

கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\_ 2

யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே - அதன்
உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே - ஒருவர்
தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே.17

கோடிபணந் தேடுவதும் விளையாட்டே - அதைக்
குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே - மனந்
தேறுதலாய் திரிவதும் விளையாட்டே.18

கற்பனையுங் கபடமும் விளையாட்டே - அதைக்
காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்க ளாட்டுவதும் விளையாட்டே - ஒரே
சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே.19

நம்பினோருக் காசைசொல்லல் விளையாட்டே - பின்பு
நாட்டாற்றில் போகவிடுதல் விளையாட்டே
கும்பிக் கிறைதேடுதல் விளையாட்டே - கடன்
கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே.20

இச்சையால் மயங்குவதும் விளையாட்டே - அதை
இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத் துண்பதுவும் விளையாட்டே - பொல்லாப்
பேய்போ லலைவதுவும் விளையாட்டே.21

முத்தி யறியாததும் விளையாட்டே - மேலாம்
மோட்சங் கருதாததும் விளையாட்டே
பத்திகொள் ளாததுவும் விளையாட்டே - மனம்
பாழிற் செலுத்தினதும் விளையாட்டே.22

கேடு வருவதுவும் விளையாட்டே - எதற்கும்
கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே - மனப்
பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே.23

பாசவினை போக்காததும் விளையாட்டே - பெண்
பாவாயென் றழைப்பதும் விளையாட்டே
நேசமாய்த் தேடுவதுவும் விளையாட்டே - காணாமல்
நிமிடநேர மென்பதுவும் விளையாட்டே.24

நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே - அதில்
நினைவுதடு மாறுவதுவும் விளையாட்டே
சித்தியடை யாததுவும் விளையாட்டே - ஞானம்
சிந்தியா திருப்பதுவும் விளையாட்டே.25

சொற்பனமுண் டாவதுவும் விளையாட்டே - மனம்
சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண் டறிவதும் விளையாட்டே - வந்த
விதமறி யாததுவும் விளையாட்டே.26

பகலிர வென்பதுவும் விளையாட்டே - இகப்
பயனடைந் திருத்தலும் விளையாட்டே
சகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே - யோக
சாதன மறியாததும் விளையாட்டே.27

புத்திமா னென்பதுவும் விளையாட்டே - இப்
பூதலத்தோ ரேத்துவதும் விளையாட்டே
வெற்றி யடைவதுவும் விளையாட்டே - நான்
வீரனென்று சொல்வதுவும் விளையாட்டே.28

தவநிலை தோணாததும் விளையாட்டே - ஞான
தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே - ஏக
பரவௌி காணாததும் விளையாட்டே.29

யோகந் தெரியாததும் விளையாட்டே - அதன்
உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே - இகப்
பற்றுக்காது இருப்பதுவும் விளையாட்டே.30

பெரியோரைக் காணாததும் விளையாட்டே - கண்டு
பேரின்பஞ் சாராததும் விளையாட்டே
தெரியா திருந்ததுவும் விளையாட்டே - சிவ
தேக நிலை பாராததும் விளையாட்டே . 31

அஞ்ஞானமுட் கொண்டதுவும் விளையாட்டே -பே
ரறிவாற் றெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே - இந்த
மேதினியே போதுமெனல் விளையாட்ட. 32


வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

திருவருள் போற்றி ! குருவருள் போற்றி !!

06 June, 2010

கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\_ 1

நானெல்லாம் எழுதுவேன் என்று நினைத்தது இல்லை. விளையாட்டாய் ஆரம்பித்து இன்றும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. என்னைப்பற்றியும் இவர் தெரிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்... சரி இப்பதிவில் கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர் பற்றி பார்ப்போமா...

தமிழ் நாட்டைப்போலவே வடநாட்டிலும் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை நவநாத சித்தர்கள் என்கிறார்கள். அவர்கள்;
1.சத்திய நாதர், 2.சதோக நாதர், 3.ஆதிநாதர், 4.வெகுளி நாதர், 5.மதங்கநாதர், 6.மச்சேந்திர நாதர், 7.கடேந்திர நாதர், 8.அநாதி நாதர், 9.கோரக்க நாதர். ஆகியோர்.

இவர்களில் கடேந்திர நாதர் வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு கோவைக்கு அருகில் இருக்கும் வெள்ளயங்கிரி மலையில் வசித்திருக்கிறார். இங்குள்ள ஐந்தாவது மலையில் இருக்கும் குகை ஒன்றை இவரது குகை என்று சொல்கிறார்கள். இல்லை, இல்லை இவர் புதுச்சேரிக்காரர் என்கிறார்கள் ஒரு சாரர் சரி எதுவாகினும் சரி; எக்காலத்தில் இங்கு வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இவரைப்பற்றிய வேறு எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

ஞானம் வாய்த்தவருக்கு மொழியறிவு என்ன ஒரு பெரிய விசயமா? தமிழ் இலக்கணம் அறிந்து அதனில் பாடலும் இயற்றிப் பாடியிருக்கிறார். எங்கெங்கிருந்தோ வந்தவர்கள் நம் பெருமை அறிந்தனர், நாமோ நமதருமை தெரியாமல் இருக்கிறோம் இன்னும்... சரி இதோ பாடல்கள் ...

கண்ணிகள்

ஆதிசிவ மானகுரு விளையாட்டை - யான்
அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசத்தி யென்னாத்தாள் - சுய
சொரூபத் தடங்கிநின்ற விளையாட்டை. 1

பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் - ஞானம்
பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவினை - யாட்டுச்
சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில். 2

இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் - இதை
இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி - முன்பு
சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன். 3

நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த
நானிலத் திருப்பதுவும் விளையாட்டே
தானென் றறிவதுவும் விளையாட்டே - பெற்ற
தாயென் றுரைப்பதுவும் விளையாட்டே. 4

தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவிற்
தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து
வயது தெரிந்ததுவும் விளையாட்டே. 5

பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை
பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த
வையகத் திருப்பதுவும் விளையாட்டே. 6

பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே - எங்கும்
பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டுபொருள் தேடுவதும் விளையாட்டே - பணம்
காசுவட்டி போடுவதும் விளையாட்டே. 7

மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்
மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே - இச்
செகத்திற் திரிவதுவும் விளையாட்டே. 8

ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே - சதுர்வே
தாகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே - உற்றார்
கூடிமகிழப் பேசுவதும் விளையாட்டே. 9

பிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப்
பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே - ஈமங்
கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே. 10

செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.11

வீணாட் கழிவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே. 12

கனவுநினை வெண்பதுவும் விளையாட்டே - இக்
காசினியோ ருழல்வதும் விளையாட்டே
நினவாய்ச்சேய் வஞ்சகமும் விளையாட்டே - மிக்க
நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே. 13

பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - அவர்
பின்னாற் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - நல்ல
வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே. 14

சீராக வாழ்வதுவும் விளையாட்டே - செம்பொன்
சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொல்வதுவும் விளையாட்டே - நெஞ்சில்
நினக்காமற் செய்வதுவும் விளையாட்டே. 15


பந்துசன மென்பதெல்லாம் விளையாட்டே - லோகப்
பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்தநிதி தேடுவதும் விளையாட்டே - இதைச்
சொற்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே. 16

வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

திருவருள் போற்றி ! குருவருள் போற்றி !!

25 May, 2010

சட்டைமுனி (நாதர்) _/\_

இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.

ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன.

அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்றக் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது.

சட்டைமுனி ஞானம்

எண்சீர் விருத்தம்

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3

பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4

தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5

பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6

(பாடல்கள் நிறைவுபெற்றது.)

சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி !

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

14 May, 2010

பிண்ணாக்கு சித்தர் _/\_ 2

வளரும் என் வருகை... பிண்ணாக்கு சித்தர் பாடல்களுடன்...

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே.7

நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே.8

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியேபோவார்கள்.9

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி.10

பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி.11

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி.12

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி.13

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே.14

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி.15

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே.16

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்சமடி.17

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன.18

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது - ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு.19

அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே.௨0

பிண்ணாக்கு சித்தர் தாள் போற்றி !

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

06 May, 2010

பிண்ணாக்கு சித்தர் _/\_ 1

இது காரணப் பெயராக இருக்கலாம், இருந்தாலும் இவரது பெயருக்கான காரணம் இன்னதென்று தெரியவில்லை. பிண்ணாக்கு சித்தர் என்ற பெயரில் இரு வேறு சித்தர்கள் இருந்திருக்கலாம், அதையே இந்தப் பாடல் உறுதி படுத்துகிறது.

காத்தடைத்து வந்ததிது கசமாலாப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு 19

இதில் வரும் கசமாலம் என்ற சொல்லில் சென்னை தமிழில் வருகிறது. இதிலிருந்து இவர் பிற்கால பிண்ணாக்கு சித்தர் என்பது புலனாகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக்கீசரிலும் இவர் வேறு சித்தராக இருக்கலாம்.

சித்தர் பாடல்களில் இவர் இயற்றியதாக இருக்கும் பாடல்களில் 20 கண்ணிகள் ஒரு தொகுப்பும், 45 பாடல்களில் முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்கள் ஒரு தொகுப்பும் கிடைக்கப் பெறுகிறது. எனவே முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்களை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் எனவும், மனோன்மணியாளை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் என்பதும் ஏற்பிற்குரியது.

இவரது பாடல்கள் ...

தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
தாவித்திரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே.1

அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையிலா ரத்தினமடி 2

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி. 3

விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி.4

தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார்.5

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம்.6


வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

26 April, 2010

தங்கவேல் லோகாயத சித்தர் :_/\_


இவரைப்பற்றிய வாழ்க்கை குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. இவர் பெயர் கூட இவரது கடைசிப் பாடலில் இருந்து அறியப்பட்டது. இவர் பாடல்கள் மிகுந்த அவரது அறிவாற்றலை நமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

தமிழர்களின் மரபில் மார்க்சியத்தின் அறிமுகமும், பெரியாரின் பகுத்தறிவு கால எழுச்சியும் தொடங்குவதற்கு முன்பாக இருந்த பார்ப்பன எதிர்ப்புடன் கூடிய மனிதத்துவ அரசியலின் வேர்களை நாம் தேடினால் அந்த தேடல்கள் நம்மை சித்தர்களிடமே கொண்டு சேர்க்கும். பொதுவாக ஒரு குறியீடாக மட்டுமே சில கடவுளர் பெயர்களை தங்கள் பாடல்களில் பயன்படுத்தினாலும் பெரும்பாலான சித்தர்கள் மனிதத்துவ அரசியலையே முன் நிறுத்தியதை நாம் அறிவோம்.ஆனால் முழுக்க முழுக்க கடவுள் மறுப்பையும் பொருள்முதல்வாத அரசியலையும் அடித்தளமாகக் கொண்டு தனது பாடலை பாடியிருக்கிறார் தங்கவேல் லோகாயத சித்தர்.

பரிணாம வளர்சியின் மூலம் மனிதன் உருவானது பற்றிய அறிவு,பார்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட சாதியம் பற்றிய புரிதல் மற்றும் அவர்களின் வேதங்களை சாடுதல்,இனக்குழு வாழ்கையின் நடுகற்களும் சிறுதெய்வங்களும் பார்ப்பனிய மயப்படுத்தபட்டதை சுட்டிகாட்டுதல்,புத்தர் திருவள்ளுவர்,திருமூலர் எழுத்துக்களில் திரிபுகள் செய்யப்பட்டதை குறித்தல் என்று ஒற்றை பாட்டில் லோகாயத சித்தர் செல்லி செல்லும் விசயங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

புராணங்களை பொய்மையின் குன்று என சொல்லும் இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்து தான்.

திண்ணத்தின் உரை; தெளிந்த அறிவில் கசிந்த வரிகள்; தமிழின் அணி சேர்க்கும் வார்த்தைகள்; எளிய தமிழ் நடை;

இத்தனைக்கும் சொந்தமான பாடல் வரிகள் இதோ....

பொருளும் இருப்பும் இயற்கையும் முதன்மை -நாம்
போற்றும் உணர்வெண்ணம் இரண்டாம் தன்மை
கருதும் நம் ஆத்துமா அறிவின் துடிப்பு - அதனை
கடந்ததுமே கடவுள் எனல் கற்பனை பிடிப்பு

இயற்கையே மானுடர் வாழ்விற்கு வழியாம் -அவ்
இயற்கையே எண்ணத்தின் மேலான வழியாம்
இயற்கையை வென்றதும் மானுடம்தானே -இவ்
இயற்கைக்கு மேல் ஒன்றும் இல்லை என்பேனே

விலங்கிலிருந்து வளர்ந்தவர் நாமே - பின்
விலங்காண்டி ஆனதும் மாந்தர்கள்தாமே
உலகில் இயற்கையில் கற்றனர் பாடம்-மன
ஆறாம் அறிவாலே உற்றனர் மாடம்

உழைப்பே மனிதனின் உன்னத ஆற்றல் -கடும்
உழைப்பினால் வந்ததே உயர்வு முன்னேற்றம்
உழைத்துப் படைத்தது மானிடம் அன்றோ -அட
அதனின் உயர்ந்தது உண்டெனல் நன்றோ

மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கை - தன்
மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை
ஏறிகொண்டிருந்திடும் காலப்பிடியில் - மனிதன்
எத்துனை புதுமைகள் செய்தான் முடிவில்

பொருளே உலகத்தில் சாகா உயிர்கள் - அந்த
பொருளின் இயக்கமே வையப் பயிர்கள்
பொருளே வளர்ச்சியின் தொட்டில் அந்த
பொருளின்றி இல்லை சிறப்புடை தொட்டில்

மனிதனுக்கு மேலொரு தெய்வமும் இல்லை -இந்த
மானுடம் போலொரு மெய்மையும் இல்லை
மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம் -உழைப்பு
மனம் இல்லையேல் அவன் விலங்கான்டி இனம்

செத்தவர்க்காகவே நட்ட நடுகற்கள் - பல
தெய்வங்களாம் இவைநச்சுமிழ் பற்கள்
உய்த்துணரா முன்னம் இயற்க்கையின் போக்கை -அட
உண்டாக்கினர் கடவுளின் நோக்கை

உண்மையை கானும் அறிவில்லா போது - கடவுள்
உருவாகி உலகில் உண்டாயிற்று தீது
உண்மை ஒளி அறியாமையை தக்க - சில
ஞானிகள் தோன்றினர் வைய்யகத்தை காக்க

வந்தேறிகள் சிலர் நாட்டில் புகுந்தார் - இயற்கை
வாழ்வுணராமலே தீமைகள் தந்தார்
சிந்தனை இல்லா நெஞ்சில் சேர்ந்தது தீமை - பல
சிறுதெய்வ கூட்டங்கள் சேர்ந்தன ஆமை

காலங்கள் தோரும் அறிவின் குறைவு - தான்
கண்டதே கொண்டதே கடவுளின் நிறைவு
காலங்கள் மாறிடும் காகங்கள் தோறும் - உள்ள
கடவுள்களின் மத வேரும் பேரும்

அறிவுடை கடவுள்கள் ஒன்றேனும் இல்லை - கடவுள்
அவ்வவ் இனத்தின் அறியாமை எல்லை
செறிவுடை சிந்தனை தெளிந்தநீர் ஊற்று - தான்
தெய்வத்தின் தப்பெண்ணத்திற் கொரு கூற்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்ஞானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

வேதங்கள் ஆவது பேசின் பேச்சு - உள
உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
பூதங்கள் ஐந்துக்கு மேல் இல்லை ஒன்று கூறும்
புராணங்கள் யாவுமே பொய்மையின் குன்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்னானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

சாத்திரம் என்பது சண்டை சரக்கு - அட
சமயங்கள் பகைமை பனைக்கள் இரக்கு
தோத்திர குப்பைகள் மூடர்கள் கூச்சல் - எண்ணத்
தொலையாத தர்க்கங்கள் பொஞ்ஞானக்காய்ச்சல்

செல்லரித்துப்போன வேதத்தின் பாட்டும் -உலகில்
செலவானியாகாத சமயத்தின் கூட்டும்
வல்லமை வாய்ந்த நல் காலத்தின் போக்கால் -மக்கள்
வாழ்வில் சலிப்புறும் ஒடிந்திடும் தேர்க்கால்

வேதாந்தம் என்பது வெறும் வெத்து வேட்டு - வேத
வியாக்கியானம் எல்லாமே பொருந்தாத பூட்டு
நாதாந்த்ம் என்பதும் பொய்புனை சுருட்டு - அட
நமசிவாயம் தன் நலமான புரட்டு

ஆன்மீக வாதம் ஒரு செத்த பிணங்காண் - வேத
ஆகமங்கள் யாவும் புற்று நோயின் ரணங்காண்
ஆன்மா என்பதும் பொய்யின் கற்ப்பனை - வெறும்
ஆத்திகம் என்பது தன்னல விற்ப்பனை

அடுத்த உலகம் என்றொன்றும் இல்லை - கோள்
அடுத்த தல்லால் வேறுலகமும் இல்லை
படுத்தும் நரகமும் சொர்க்கமும் இல்லை - மக்கள்
பண்படா காலத்தில் புகுந்த ஒர் தொல்லை

நன்மையின் ஆற்றலை தந்ததும் உண்மை - மனிதர்
நாளும் உயர்ந்திட செய்ததும் உண்மை
புண்மைகள் தீர்த்தது பகுத்தறிவாட்சி - தனை
புரிந்திட வைப்பதே லோகாதய மாட்சி

புத்தன் திருவள்ளுவர் சீல திருமூலர் - இந்த
பூமியிலே பிறந்து சிறந்த நல்சீலர்
எத்தனை பொய்புனை அவர்களின் நூலில் - பல
எத்தர்கள் இட்டனர் பிழைகளை காலில்

உண்மையும் எண்ணையும் இறுதியில் வெல்லும் - உலகில்
ஓங்கிடும் காற்றினால் பிரியும் நெல்லும் புல்லும்
மண்ணில் உலோகாயதமே உயரும் - கால
மாறுதல் வாய்மையின் பாலை நுகரும்

உழைக்காமல் உண்ணுவோர் தீயபாழ் ஊள்ளம் - இந்த
உலகத்தில் தோற்றிற்று மதமான பள்ளம்
பிழையே பிழைப்பாக சாதிகல் தந்தார் - மக்கள்
பேதத்தில் வாழ்வை சுரண்டி உவந்தார்

இயற்கை வளங்களை கண்டவன் மனிதன் - மக்கள்
ஏற்றத்தில் கவற்றை இணைத்தவன் மனிதன்
செயற்கை வளங்களை செய்தவன் மனிதன் - தனை
செய்யகூட தெரியாதவன் கடவுளா - புனிதன்?

மனிதனே சமூகத்தில் உயிருக்கு நாடி சமய
மதங்கள் வளர்ந்தன கடவுள்கள் கோடி
மனிதனே உலகத்தின் தலைவன் - அவனே
அணைத்துக்கும் மாண்புள்ள புலவன்

நெய்யினால் நெருப்பை அணைக்க எண்ணாதே அறிவு
நியாத்தால் லோகாயதம் மறைக்க எண்ணாதே
பொய்யிது மாயைதான் வாழ்வென்ருரைப்பீர் - உம்
பெண்டாட்டி பிள்ளை பெற்றோரை எங்கொளிபீர்

உலகத்தில் அனைட்துயிர் உருவங்கள் இறக்கும்
உயிர்மட்டும் என்றென்றும் இறவது இருக்கும்
உலக இயற்கையை வெல்வதே வாழ்கை
உலகில் நிலையாமை பேசிடல் தாழ்க்கை

தகுதியின் மிகுதியே வெல்லும் - இந்த
தங்கவேல்லோகாயதரின் சொல்லும் வெல்லும்
மிகுதியாம் பொய்யாதே சமயங்கள் ஒடும் - நாளை
மேன்மையாம் மெய்வாழ்க்கை ஒத்திசை பாடும்



நன்றி :-
http://stalinguru.blogspot.com/