குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

27 December, 2009

[ பட்டினத்தார் : 4]

இதற்கு முன் பட்டினத்தாரின் அருட் புலம்பலை பார்த்தோம், இன்னமும் நடை போடுவோம் அவருடன்..


யார் நாம் ! என்ற கேள்வியை கேட்காத மனிதர் இல்லை, கேட்டாலும் விடையும் இல்லை. ஆனால் நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் பிறந்து, வளர்ந்து, ஆளாகி தன்னை அறிய துறவறம் போகின்றனர். துறவறம் சென்றவர்கள், மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை மூன்றையும் கொண்டவர்களாக இருந்தாலும், துறவறத்திற்கு பின்பு இவைகளின் நிலையாமையை உணர்ந்து அவைகளை துறக்கின்றனர். எல்லோர்க்கும் பயன்பட நமக்கு சில கருத்துக்களை சொல்கின்றனர். அப்படிப்பட்டவைகளை நாம் பற்றி பிடித்துக்கொண்டு அவர்களின் வழியில் செல்ல நல்லோர்களின் அருளும், நாயகனின் தயவும் கிடைக்கும்.


பட்டினத்தாரின் பாடல்களில் இதோ ஒரு பாடல்..


பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்;

தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;

பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பேருக்கும்;

உணர்ந்தன மறக்கும்; மறந்தன வுணரும்;

புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்;

உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்


பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.


தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். (இஃது சூரியனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)


பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பேருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள். (இஃது சந்திரனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)


உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார்.



மனம் உணருமா? உணர வேண்டும் !



பட்டினத்தார் வரலாறு முற்றிற்று ..




மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

9 comments:

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

தேவன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தியாவின் பேனா அவர்களே !

hayyram said...

ஆனால் ஒரு விஷயம் நண்பரே, பட்டினத்தாரைப் படித்து ரொம்ப லயித்துப் போனால் நமக்கே வாழ்க்கையிலிருந்து விலகவேண்டும் என தோன்றும். சிறுவனாக இருக்கும் போதிருந்து பட்டினத்தார் என்னை மிகவும் பாதித்தார். ஆனால் நாம் வாழும் கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் கொஞ்சம் இதை ஜாக்கிரதையாக உள்வாங்க வேண்டும் என நினைக்கிறேன்.
என்ன சொல்றீங்க.

அன்புடன் ராம்.

தேவன் said...

சரியாச் சொன்னீங்க போங்க !

அவரது சில பாடல்களை வெளியிடவில்லை. அதற்கு காரணம் அவர் தனது பாடல்களில் அதி பயங்கரமான கருத்துக்களால் தாக்கியிருப்பார்.

Kavinaya said...

உலக வாழ்வில் இருந்து கொண்டே மனதால் அனைத்தையும் துறந்து இறைவனைப் பற்றிக் கொள்ளுதல் எப்படி என்பது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் அழகாகச் சொல்லுவார். அதே நோக்கில்தான் இதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

தேவன் said...

ஆம் சரியாகத்தான் சொன்னீர்கள், இருப்பினும் தன் மனமடங்கா நிலைக்கு தனக்கே இதனை உபதேசமாக சொல்லி கொள்கிறார் பட்டினத்தார்.

வருகைக்கு நன்றி கவிநயா அவர்களே !

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை. நல்ல விளக்கங்கள். நன்றி

தேவன் said...

/// @பித்தனின் வாக்கு ///

வாங்க ஐயா ! கருத்திற்கு நன்றி !

Healthcare Raja Nellai said...

i will publish this article in healthcare sep 2012 issue.