குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

17 January, 2010

[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]

கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
கண்டார் நகையாரோ?
நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
நீயார் சொல்வாயே. 46

இந்து அமிழ்தமடி .....அகப்பேய்
இரவி விடமோடி
இந்து வெள்ளையடி .....அகப்பேய்
இரவி சிவப்பாமே. 47

ஆணல பெண்ணலவே .....அகப்பேய்
அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே .....அகப்பேய்
சற்குரு கண்டாயே. 48

என்ன படித்தாலும் .....அகப்பேய்
எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே .....அகப்பேய்
சும்மா இருந்துவிடு. 49

காடும் மலையுமடி .....அகப்பேய்
கடுந்தவம் ஆனால்என்
வீடும் வெளியாமோ .....அகப்பேய்
மெய்யாக வேண்டாவோ. 50

பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்
பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்
பாழது கண்டாயே. 51

பஞ்ச முகமேது .....அகப்பேய்
பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி .....அகப்பேய்
குருபா தங்கண்டாயே. 52

பங்கம் இல்லையடி .....அகப்பேய்
பாதம் இருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்
கண்டு தெளிவாயே. 53

தானற நின்றவிடம் .....அகப்பேய்
சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்
ஊனமொன்று இல்லையடி. 54

சைவம் ஆருக்கடி .....அகப்பேய்
தன்னை அறிந்தவர்க்கே
சைவம் ஆனவிடம் .....அகப்பேய்!
சற்குரு பாதமடி. 55

பிறவி தீரவென்றால் .....அகப்பேய்!
பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள் .....அகப்பேய்!
சும்மா இருப்பார்கள். 56

ஆரலைந் தாலும் .....அகப்பேய்!
நீயலை யாதேடி
ஊர லைந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே. 57

தேனாறு பாயுமடி .....அகப்பேய்!
திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே. 58

வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்!
வெள்ளியுஞ் செம்பாமோ
உள்ளது உண்டோ டி .....அகப்பேய்!
உன் ஆணை கண்டாயே. 59

அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்!
ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி .....அகப்பேய்!
அருளது கண்டாயே. 60

வாசியிலே றியதடி .....அகப்பேய்!
வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!
வாராது சொன்னேனே. 61

தூராதி தூரமடி .....அகப்பேய்!
தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ .....அகப்பேய்!
பாழ்வினைத் தீரவென்றால். 62

உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்!
உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்!
கற்வனை அற்றதடி. 63

[மேலும் பாடல்களுடன் தொடர்வோம்......]

No comments: