குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

06 January, 2010

[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]

இவர் அலையும் மனதைப் தன்னுள்ளிருக்கும் பேயாக உருவகப்படுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.

இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.

இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், மேலும் சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள் இவரது பாடல்களில் பேசப்படுகின்றன.

****

அகப்பேய் சித்தர் பாடல்கள்

நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1

பராபர மானதடி .....அகப்பேய்
பரவையாய் வந்தடி
தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்
தானே படைத்ததடி. 2

நாத வேதமடி .....அகப்பேய்
நன்னடம் கண்டாயோ
பாதஞ் சத்தியடி .....அகப்பேய்
பரவிந்து நாதமடி. 3

விந்து நாதமடி .....அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்
அதனிடம் ஆனதடி. 4

நாலு பாதமடி .....அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால் .....அகப்பேய்
முத்தி அல்லவடி. 5

வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்
வந்த வகைகேளாய்
ஒக்கம் அதானதடி .....அகப்பேய்
உண்மையது அல்லவடி. 6

சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்
சாத்திரம் ஆனதடி
மித்தையும் ஆகமடி .....அகப்பேய்
மெய்யது சொன்னேனே. 7

வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்
வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி .....அகப்பேய்
திடன் இது கண்டாயே. 8

காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்
கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே .....அகப்பேய்
வந்த விதங்கள் எல்லாம். 9

ஆறு தத்துவமும் .....அகப்பேய்
ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் .....அகப்பேய்
வந்தது மூன்றடியே. 10

பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்
பேதமை அல்லவடி
உருவது நீரடியோ .....அகப்பேய்
உள்ளது வெள்ளையடி. 11

தேயு செம்மையடி .....அகப்பேய்
திடனது கண்டாயே
வாயு நீலமடி .....அகப்பேய்
வான்பொருள் சொல்வேனே. 12

வான மஞ்சடியோ .....அகப்பேய்
வந்தது நீகேளாய்
ஊனமது ஆகாதே .....அகப்பேய்
உள்ளது சொன்னேனே. 13

அகாரம் இத்தனையும் .....அகப்பேய்
அங்கென்று எழுந்ததடி
உகாரங் கூடியடி .....அகப்பேய்
உருவாகி வந்ததடி. 14

மகார மாயையடி .....அகப்பேய்
மலமது சொன்னேனே
சிகார மூலமடி .....அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே. 15

வன்னம் புவனமடி .....அகப்பேய்
மந்திரம் தந்திரமும்
இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்
இம்மென்று கேட்பாயே. 16

அத்தி வரைவாடி .....அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும்
மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்
மெய்யென்று நம்பாதே. 17

தத்துவம் ஆனதடி .....அகப்பேய்
சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்
பூத வடிவலவோ. 18


[மேலும் விவரங்களுடன் தொடர்ந்து நடை போடுவோம்......]

குறிப்பு : இதில் உங்களுக்கு எந்த அளவிற்கு விளக்கம் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறி இருக்கிறீர்கள் என்று பொருள்.

No comments: