குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

12 January, 2010

[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]

இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்
எம்இறை அல்லவடி
அந்த விதம்வேறே .....அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ. 19

பாவந் தீரவென்றால் .....அகப்பேய்
பாவிக்க லாகாதே
சாவதும் இல்லையடி .....அகப்பேய்
சற்குரு பாதமடி. 20

எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்
என் மனந்தேறாதே
சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்
சேர்த்துநீ காண்பாயே. 21

சமய மாறுமடி .....அகப்பேய்
தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம் .....அகப்பேய்
ஆராய்ந்து சொல்வாயே. 22

ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்
ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் .....அகப்பேய்
மெய்யது சொல்வாயே. 23

உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும்வகை .....அகப்பேய்
உள்ளது சொல்வேனே. 24

சரியை ஆகாதே .....அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் .....அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை. 25

யோகம் ஆகாதே .....அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி .....அகப்பேய்
தேடாது சொன்னேனே. 26

ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்
எம் இறை கண்டாயே. 27

இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்
எந்த விதமாகும்
அறைய நீகேளாய் .....அகப்பேய்
ஆனந்த மானதடி. 28

கண்டு கொண்டேனே .....அகப்பேய்
காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே .....அகப்பேய்
உள்ளது சொன்னாயே. 29

உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்
உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே .....அகப்பேய்
கண்டார்க்குக் காமமடி. 30

அறிந்து நின்றாலும் .....அகப்பேய்
அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் .....அகப்பேய்
போகாதே உன்னை விட்டு. 31

ஈசன் பாசமடி .....அகப்பேய்
இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி .....அகப்பேய்
பரமது கண்டாயே. 32

சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்
சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
பாழ் பலங்கண்டாயே. 33

ஆறு கண்டாயோ .....அகப்பேய்
அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே .....அகப்பேய்
தீர்த்தமும் ஆடாயே. 34

எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்
யோகம் இருந்தாலென் ?
முத்தனு மாவாயோ .....அகப்பேய்
மோட்சமும் உண்டாமோ ? 35

நாச மாவதற்கே .....அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் .....அகப்பேய்
பசுக்களும் போகாவே. 36

நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்
நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால் .....அகப்பேய்
காணக் கிடையாதே. 37

சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது கண்டாயே. 38

உன்றனைக் காணாதே .....அகப்பேய்
ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே .....அகப்பேய்
இடத்தில் வந்தாயே. 39

வானம் ஓடிவரில் .....அகப்பேய்
வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல் .....அகப்பேய்
தெருவொடு அலைந்தாயே. 40

சைவ மானதடி .....அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் .....அகப்பேய்
சலம்வருங் கண்டாயே 41

ஆசை அற்றவிடம் .....அகப்பேய்
ஆசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி .....அகப்பேய்
எங்ஙனஞ் சென்றாலும். 42

ஆணவ மூலமடி .....அகப்பேய்
அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி .....அகப்பேய்
கூடப் பிறந்ததுவே. 43

ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்
உள்ளபடி யாச்சே
நன்றிலை தீதிலையே .....அகப்பேய்
நாணமும் இல்லையடி. 44

சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது சொன்னேனே
எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்
என்னையுங் காணேனே. 45

[மேலும் பாடல்களுடன் தொடர்வோம்......]

7 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல பாடல் ஆழ்ந்த கருத்துக்கள். இதுபோல அகப்பேய் எனப் பாடலை முதன் முறையாக படிக்கின்றேன். மிக்க நன்றி கேசவன்.

தேவன் said...

வாங்க ஐயா வருகைக்கு நன்றிகள் பல !

புலவன் புலிகேசி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தேவன் said...

உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் புலவன் புலிகேசி அவர்களே!

Anonymous said...

www.thoothukudionline.in

Vaishnav said...

ஐயா, அகப்பேய் சித்தர் பாடல்கள் என் ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்தது.சித்தரின் படம் கிடைத்தால் தங்கள் இங்கு வெளியிடவும்.
நன்றி!

தேவன் said...

அவரது படங்கள் என்னிடம் இல்லை உங்களுக்காக ஒருமுறை முயற்சிக்கிறேன் மின்னஞ்சலிற்கு ஒருமுறை அஞ்சல் அனுப்புங்கள்.. நன்றி வைஷ்ணவ்