குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

21 January, 2010

[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]

நாலு மறைகாணா .....அகப்பேய்!
நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் .....அகப்பேய்!
நற்குரு பாதமடி. 64

மூலம் இல்லையடி .....அகப்பேய்!
முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் .....அகப்பேய்!
முத்தியும் உண்டாமே. 65

இந்திர சாலமடி .....அகப்பேய்!
எண்பத்தொரு பதமும்
மந்திரம் அப்படியே .....அகப்பேய்!
வாயைத் திறவாதே. 66

பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!
பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்!
கேள்வியும் இல்லையடி. 67

சாதி பேதமில்லை .....அகப்பேய்!
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றுந்தான் இல்லையடி. 68

சூழ வானமடி .....அகப்பேய்!
சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி .....அகப்பேய்!
மெய்யது கண்டாயே. 69

தானும் இல்லையடி .....அகப்பேய்!
நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி .....அகப்பேய்!
சற்குரு இல்லையடி. 70

மந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சமயம் அழிந்ததடி. 71

பூசை பசாசமடி .....அகப்பேய்!
போதமே கோட்டமடி
ஈசன் மாயையடி .....அகப்பேய்!
எல்லாமும் இப்படியே. 72

சொல்ல லாகாதே .....அகப்பேய்!
சொன்னாலும் தோடமடி
இல்லை இல்லையடி .....அகப்பேய்!
ஏகாந்தங் கண்டாயே. 73

தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்!
சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்!
மாயை வடிவாமே. 74

வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!
வாசா மகோசரத்தே
ஏற்ற தல்லவடி .....அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல. 75

சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சலனங் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்!
பாவனைக் கெட்டாதே. 76

என்ன படித்தால்என் .....அகப்பேய்!
ஏதுதான் செய்தால்என்
சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்!
சுட்டது கண்டாயே. 77

தன்னை அறியவேணும் .....அகப்பேய்!
சாராமற் சாரவேணும்
பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்!
பேயறி வாகுமடி. 78

பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!
பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!
எம்இறை கண்டாயே. 79

கோலம் ஆகாதே .....அகப்பேய்!
குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே .....அகப்பேய்!
சஞ்சலம் ஆகாதே. 80

ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்!
ஆராய்ந்து இருப்பாயே. 81


[மேலும் பாடல்களுடன் தொடர்வோம்......]

2 comments:

அண்ணாமலையான் said...

பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!
பார்த்ததை நம்பாதே”
உண்மையான வரிகள்....

தேவன் said...

உண்மையை உணர்ந்தவரின் வைர வரிகளை பாராட்டியமைக்கு நன்றி ! அண்ணாமலையான் அவர்களே !!