குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

04 February, 2010

குதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1

யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்று மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான்.

குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.

இவரது பாடல்களை கீழே தருகிறேன்:

குதம்பைச் சித்தர் பாடல்கள்

கண்ணிகள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

இன்னும் பாடல்களுடன் தொடர்ந்து .... குதம்பையாருடன் செல்வோம்.....

3 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல அர்த்தமுள்ள பொருள் பொதிந்த பாடல்கள். மிக்க நன்று. நன்றி கேசவன்.

பித்தனின் வாக்கு said...

என்னது கேசவன் அருணகிரியார் கதை முற்றிற்று என்று முடித்து விட்டீர்கள். அவர் கிளியார் மீனாட்சி அம்மை கையில் உள்ளது.சம்பந்தாண்டவனை மன்னர் அடித்து விரட்டி அடித்தது, கொங்கனி ஆழ்வாரைத் திருத்தியது போன்ற சம்பவங்களை எழுதவில்லையா?. நான் முதல் முறை அந்த முற்றிற்று என்பதை கவனிக்க வில்லை. படித்து இன்னும் ஒரு தொடர் போட்டு முடியுங்கள்.

தேவன் said...

///பித்தனின் வாக்கு ///

யோக நெறிமுறையின் கீழ் அமைந்த பாடல்கள் அனைத்தும் உங்களுக்கு புரிந்ததா?