குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

12 June, 2009

மனதை கட :

நாட்டில் சுந்தரானந்தர் எனும் ஒருவர் மாயாவி போல் மாயங்கள் நிகழ்த்துவதாக அமைச்சர் வாயிலாக கேள்விப்பட்ட மன்னன் அபிஷேக பாண்டியன், அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தரானந்தரை அவைக்கு அழைத்து வரச்சொல்லி சேவகர்களை அனுப்பிவிட்டான். ஆனால், அது எத்தனை பிழையான செயல் என்பதை அவன் எண்ணிப்பார்க்கவில்லை.

செருக்குகள் இருவிதம்.

ஒன்று பிறர் அறியும் விதம் வெளிப்படும் கர்வச் செருக்கு. இன்னொன்று, அறியாவண்ணம் ஒளிந்திருக்கும் அதிகாரச் செருக்கு. இரண்டுமே தவறானது என்பதை காலத்தால் உணர்த்துபவர்களே சித்தர்கள். பாண்டிய மன்னனிடம் அதிகாரச் செருக்கிருந்தது.கூடவே அவனுக்கும் மேலானவர்கள் பூமியில் இல்லை என்கிற ஓர் எண்ணமும் இருந்ததால் அவன் பணிவாக நடந்திட வழியே இல்லாமல் போய்விட்டது.

ஆலயத்தின் மிசை தெய்வத்தின் முன் பணிவாக நடந்து கொண்ட போதிலும் அங்குள்ளது விக்கிரக சொரூபம் தானே?எனவே, உயிருள்ள எவர்முன்னும் அவன் பணிவாக நடந்து கொள்ள வாய்ப்பேயில்லாததால் அவனுக்குள் ஒரு 'நான்' அகங்காரத்தோடு எப்பொழுதும் திகழ்ந்தபடி இருந்தது.

அதற்கு அந்த சித்த புருஷரும் ஒரு பாடம் கற்பிக்கத் தயாரானார். தன் எதிர்வந்து
நின்ற சேவகர்களை, என்ன சேதி என்பது போல பார்த்தார்.

''உங்களை எங்கள் அரசர்பிரான் காண வேண்டுமாம்.''

''அதற்கு..?''

''நீங்கள் எங்களோடு அவைக்கு வர வேண்டும்.''

''இது என்ன வேடிக்கை? ஆற்றில் குளிக்க ஒருவர் ஆசைப்பட்டால் அவரல்லவா
ஆற்றுக்குச் செல்லவேண்டும். ஆற்றை வெட்டி அரண்மனைக்கு இட்டுச் செல்வீர்களோ நீங்கள்?''

''அது... அது... அதெல்லாம் எதற்கு? அவர் அரசர். இந்த நாட்டின் தலைமகன்.. இது
அவர் உத்தரவு.''

''அந்த உத்தரவுக்கு, தன்னையறியாத நீங்கள் வேண்டுமானால் மடங்கிப் போங்கள்.
எனக்கு உம் அரசரைக் காண்பதால் ஆகப்போவது எதுவுமில்லை.

'நான்' என்கிற மமதை உள்ளோரால் ஆகிவிடப் போவதும் எதுவுமில்லை. அற்ப மனிதப் பிறப்பாக பிறந்து விட்டோமே என்னும் குழப்பம் மிக்க உனது அரசனால் ஆனதும் எதுவுமில்லை. மூன்று காலங்களிலும் இருந்தும் இல்லாத அவனை நான் காண்பது என்பது சித்தத்துக்கும் அழகில்லை. போய்ச் சொல் போ...''

''மாயாவியே... நீ சொன்னதை நான் அப்படியே போய் சொன்னால் உம்கதி என்னாகும் தெரியுமா?''

''என் கதி மட்டுமல்ல.. உன் அரசர் கதியும் இப்படி நான் சொன்னால்தான் வரலாறாகும்!
போய்ச் சொல். மேற்கொண்டு நீ ஏதாவது பேசினால், சதாசர்வ காலமும் பேசியபடி
இருக்கும் கிளியாக உன்னை மாற்றி விடுவேன். அரசனுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரிந்த உனக்கு, ஆண்டியும் பெரியவனென்று தெரிய வேண்டும். ஓடிவிடு...''

சுந்தரானந்தர் போட்ட போடு _ அந்த சேவகர்கள் திரும்பிச் சென்றனர். மன்னன் அபிஷேக பாண்டியனும் அவர்கள் திரும்பி வந்து சொன்னதை எல்லாம் கேட்டு முதலில் அதிர்ந்தான். பிறகு வியந்தான். வார்த்தைக்கு வார்த்தை அவர் சொன்னதையெல்லாம் அசை போடத் தொடங்கினான். 'ஆனது எதுவுமில்லை, ஆகிவிடப் போவதுமில்லை, ஆவதும் ஏதுமில்லை' என்று முக்கால கதியில் சுந்தரானந்தர் செய்த விமர்சனம் நெஞ்சக் கூட்டை திருகியபடியே இருந்தது. இதனாலோ என்னவோ அவரை எதிர்த்து ஆணைபிறப்பித்து எதையும் செய்யவே தோன்றவில்லை.

ஒரு மனிதன் முதல்முறையாக அபிஷேக பாண்டியன் மனதுக்குள் விசுவரூபமெடுக்கத் தொடங்கிவிட்டான். நின்றால், நடந்தால், படுத்தால், புரண்டால் சுந்தரானந்தர் நினைப்புதான்.

இதே குழப்பத்தோடு ஒரு நாள், ஜடம்போல ஆலவாய் அழகன் திருக்கோயிலுக்குள் மன்னன் சென்ற சமயம், சுந்தரானந்தரும் ஆலயத்துக்குள் பிரவேசித்திருந்தார்.


சாதாரணமாக எல்லா ஆலயங்களையும் கற்பீடங்களே தாங்கி நிற்கும். ஆனால், ஆலவாய் அண்ணலான சொக்கநாதரின் ஆலயத்தை நாற்புறமும் யானைகள் தாங்கி நிற்கக் காணலாம் அதுவும் வெண்ணிற யானைகள்! வெண்ணிற யானை என்றாலே இந்திரன் வந்துவிடுவான்.

இந்திரன் அனுதினமும் பூஜிக்க, சிவ நெறியை நாட்டில் நிலைப்படுத்த, சாப விமோசனமாக கட்டிய திருக்கோயிலல்லவா அது? அபிஷேக பாண்டியனும் அவன் வழி வந்தவனல்லவா? அண்ணலின் தரிசனம் முடிந்து பிரதட்சணம் வரும் சமயம், சுந்தரானந்தரும் எதிரில் வந்தார்.
அதுவும் அப்பிரதட்சணமாய்....! அப்பொழுதுதானே இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவும் தோது ஏற்படும்? அதிலும் அரசன் பிரதட்சண உலா வரும்போது கட்டியங்காரர்கள் முன்னாலே சென்று பராக் சொல்லி எல்லோரையும் ஓரம் கட்டிவிடுவார்கள். ஆயினும் அப்பிரதட்சணமாக வரும் சுந்தரானந்தரை ஓரம்போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. காரணம், அவரது தேஜஸ். அடுத்து, பார்க்கும் பார்வை அப்படியே ஆளை நடுக்கி விடுகிறதே..!

அபிஷேக பாண்டியனுக்கு, தனக்கெதிரில் தனக்கிணையாக அவர் நடந்து வருவதன் பொருட்டு கோபம் பீறிட்டது.

அதிகார கோபமும் தவஞான கோபமும் முட்டிக் கொண்டன.

''நீர்தான் மாயங்கள் நிகழ்த்தும் அந்த மாயாவியோ?'' அபிஷேக பாண்டியனே கேள்வியைத் தொடங்கினான்.

''தவறு பாண்டியனே.. சித்தசாகஸங்கள் மாயங்கள் அல்ல. மாயங்கள் அற்பமானவை. சித்த சாகஸங்கள் ஜம்புலனைச் சுருக்கி உள்ளளியைப் பெருக்கி பஞ்சபூதங்களை உணர்ந்து பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்படுத்தப்படுபவை... முயன்றால் நீயும் இதை சாதிக்கலாம். இதோ நிற்கிறதே உன் ஏவலர் வரிசை... இவர்கள் கூட சாதிக்கலாம்.''

''நம்ப முடியாது இதை... அந்த இறைவன், மனிதனை ஒரு வரம்புக்கு உட்பட்டே
படைத்திருக்கிறான்...''

'உண்மைதான். ஆனால் அந்த வரம்பு, கைலாயம் என்னும் எல்லையை ஒருபுறமும், வைகுந்தம் என்னும் எல்லையை மறுபுறமும் தொட்டு நிற்பது. அதை உணர்ந்து கைலாயத்தை நீ தொடும்போது, நீயே கைலாயபதி.''

''எதை வைத்து இதை நான் நம்புவேன்?''

''வேண்டுமானால், இங்கேயே அதற்கான பரிட்சையை வை. மாயம் என்றால் இல்லாததை இருப்பதுபோல உருவாக்குவது. அது வெறும் காட்சி. அவ்வாறு இல்லாத ஒரு சாகஸத்துக்கு நீயே அடி கோலுவாய். நானும் உனக்குப் புரியவைப்பேன்...'' _சுந்தரானந்தர் அவ்வாறு சொன்னதுதான் தாமதம், அபிஷேக பாண்டியன் தீர்க்கமாய் சிந்தித்தான். அவன் நின்ற இடத்திற்கு அருகில்தான் இருந்தது, ஆலய விமானத்தை தாங்கியபடி இருக்கும் அந்தக் கல் யானை. நிதர்சனமாய் தெரிவது... மாயபிம்பம் அல்ல அது!

''தவசீலரே... இதோ கல் யானை. மானுட சக்தி, இறை சக்தி வரை செல்லக் கூடியது. அதுவே இறையாகவும் உள்ளது என்று கூறினீரே, இந்தக் கல் யானையை உயிர் யானையாக்குங்கள் பார்ப்போம்.... அப்பொழுது நான் நம்புகிறேன்.''_ அபிஷேக பாண்டியன் அப்படிச் சொன்ன நொடி, சுந்தரானந்த சிவத்தின் முகத்தில் ஒரு புன்னகை. பாண்டியன் பரிவாரத்தில் ஒருவன், மன்மதன் போல கரும்போடு தென்பட்டான். அவனும் அருகில் வந்தான். கரும்பும் பாண்டிய அரசன் கைமிசை சென்று சேர்ந்தது.

''பாண்டியனே.. அந்தக் கல் யானை அருகே செல். உன் மனது அந்த ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூற, மனமுருகி பிரார்த்தனை செய். என் பொருட்டு இன்று கல் யானை உயிர் யானையாகும். நாளை முற்றாய் நீ உன்னையுமறியும்போது உன்னாலுமாகும்..'' _ என்ற சுந்தரானந்தர் அக்கல்யானையை நோக்க, அடுத்த நொடி, அந்த யானைக்கு உயிர் வந்தது.
அதன் தும்பிக்கை அசைந்து நீண்டு பாண்டியன் வசம் இருந்த கரும்பைப் பற்றி
உண்ணவும் தொடங்கியது. அபிஷேக பாண்டியன் தன் கண்களையே நம்பாமல் கசக்கி விட்டுக் கொள்ள, முழுக்கரும்பை சாறொழுகத் தின்ற அந்த யானை, பாண்டியன் கழுத்து முத்துமாலையையும் எட்டிப் பறித்தது.

பாண்டியன் ஆடிப்போனான். அவன் மேல் மனதும் ஆழ்மனதும் ஒருசேர ஒரே கதியில் உழப்பட்டதில் அப்படியே சுந்தரானந்தர் பாத கதி விழுந்தான் கண்ணீர் விட்டான். பரவசத்தில் சிலிர்த்தான். சுந்தரானந்தரும் புன்னகை பூத்தார்.
சூழ்ந்திருப்பவர்களும் காணக்கிடைக்காத காட்சியைக் கண்டதில் பரவச உச்சிகளில் இருந்தனர். அதன்பின், தனக்கு வம்சம் விளங்கப் பிள்ளைப்பேறு வேண்டினான் பாண்டியன். அருளினார் இறைமுனி. யானையும் பறித்த முத்து மாலையை திரும்பக் கழுத்தில் சூட்டி மீண்டும் கல்லாகி நின்றது.

தவசக்தி எத்தகையது என்று நிரூபித்துவிட்ட பூரிப்புடன் அனைவர் கண் எதிரில், ஆலவாயன் திருச்சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.

பாண்டியன் நெக்குருகிப் போனான். வேதங்கள் தந்ததும் இறையே.. அதை அசுரர்கள் பாதாளம் கொண்டு சென்றபோது மீட்டு எடுத்து வந்து தந்ததும் இறையே.. வாழவழி காட்டிய இறை, அதனுள் இறையாகவும் ஆகும் வழி காட்டிட, சித்தவுருவினனாகவும் நேரில் வந்தது. அன்று நேரில் வந்த அந்த சிவம், இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடப்பக்கத்தில் கல்யானைக்கு அருகிலேயே கோவில் கொண்டு அமர்ந்துள்ளது.

கல்லுக்கே உயிர் கொடுத்த அந்த ஈசன், கல்லாய் கனக்கும் நமது ஊழ்வினைக்
கர்மங்களையும் நீக்கி அருள்புரிந்திடவே கோயில் கொண்டுள்ளான்.

ஆறுநிறைய தண்ணீர் ஓடலாம். ஓட்டைப் பாத்திரங்களால் அதை நாம் நமக்கென கொள்ள முடியாது. கொள்ளத் தெரிந்துவிட்டாலோ தாகமே நமக்குக் கிடையாது.
இந்த சுந்தரானந்த சித்தரும் அப்படித்தான். இவரின் பெருங்கருணையை, நற்பாத்திரமாக நாம் இருந்தால், வாரிக் கொண்டு வந்துவிடலாம். அசையாததை எல்லாம் அசைக்கலாம்...

மன்மதன் போல எழிலுருவில் இவர் வந்ததால், மலர்கள் இவருக்கு மிகப் பிடித்ததெனக் கருதி 'பூக்கொட்டாரம்' போடுவது என்னும் ஒரு மலர் வழிபாடு இன்று வழக்கில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. எனவே, அணுகச் சுலபமான இந்த சித்தனை அணுகுங்கள். அப்படியே சித்தகதியை அடைய சிலராவது முயலுங்கள்.


இணைய தளங்களுக்கு நன்றி !

2 comments:

Kavinaya said...

//ஆறுநிறைய தண்ணீர் ஓடலாம். ஓட்டைப் பாத்திரங்களால் அதை நாம் நமக்கென கொள்ள முடியாது. கொள்ளத் தெரிந்துவிட்டாலோ தாகமே நமக்குக் கிடையாது.//

அருமை! கொள்ளத் தெரிந்து கொள்ள முயல்வதே பிறவியின் நோக்கம் அல்லவா.

தேவன் said...

/// அருமை! கொள்ளத் தெரிந்து கொள்ள முயல்வதே பிறவியின் நோக்கம் அல்லவா. ///

சரியாக சொன்னீர்கள். கவிநயா !